சின்னாள் பழகின் படுதுயரம் ஆவியொடும் ஆழ்த்தும் அளறு - கள்ளின் களிப்பு, தருமதீபிகை 609

நேரிசை வெண்பா

உள்ளநலம் எல்லாம் ஒழித்துப் பழிவளர்த்து
வெள்ளமென அல்லல் விளைக்குமே - கள்ளென்னும்
பாவியொடு சின்னாள் பழகின் படுதுயரம்
ஆவியொடும் ஆழ்த்தும் அளறு. 609

- கள்ளின் களிப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கள் உண்பதால் உள்ள நலங்கள் எல்லாம் ஒழிந்து போம்; பழியும் அல்லல்களும் விளைந்து வரும், கள் என்னும் பாவியோடு சில நாள் பழகினாலும் ஊழியும் நீங்காதபடி உயிர் நரகத்தில் அழுந்தும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவு, செல்வம், புகழ் என்னுமிவை உயர்ந்த உயிர்வாழ்வின் ஊதியங்களாய் அமைந்திருக்கின்றன. இந்த இனிய உறுதி நலங்களைப் புனிதமாகப் போற்றி வருபவன் மனிதருள் உயர்ந்து மகிமை மிகப் பெறுகின்றான். இருமையும் இன்பம் தரவல்ல இந்த அருமைப் பொருள்கள் சிறுமைச் செயல்களால் சீரழிந்து போகின்றன. இழி களியால் கொடிய அழிவுகள் கடிது விளைகின்றன.

கள் அருந்துதல் கொடிய தீமை ஆதலால் எல்லா நன்மைகளையும் அது அழித்து விடுகின்றது. மடமை வறுமை பழி முதலிய இழிவுகள் யாவும் அதனால் விளைந்து வருகின்றன. உணர்வை அழித்து உயிர்க்கேடு புரிந்து என்றும் கொடுந் துயரங்களைக் கொடுத்தலால் கொடியபழி நெடிய பாவம் என அது முடிவாகி நின்றது.

தரவு கொச்சகக் கலிப்பா

வீறாய பவக்கடலில் வீழ்ந்தவரைத் தவவரம்பில்
ஏறாமல் அழுத்துசுழி அறிவுவெளிக்(கு) இருட்படலம்
துாறாய கொடுநரகின் அழுத்திவிடும் தோட்டிகதி
பேறான வழியடைக்கும் கதவமே பெருநறவூண். 1

எவ்வமுற நுகர்ந்தாரை இயம்புவதுஎன்? ஆங்கவரைக்
கவ்வையுறப் புகன்றாலும் கண்டாலும் பெரும்பாவம்;
மெய்வளரும் நெறியோர்கள் விலக்குவது விலக்காத
பொய்வழியை விரும்பினரும் விரும்பாத புலைமதுவே. 2

- திருக்குற்றாலப் புராணம்

நறவு அறிவு தவங்களை அழித்து இருமையும் கெடுத்து நரகத்தில் அழுத்திவிடும்; அதனைக் குடித்தவரைக் கண்ணால் கண்டாலும், அவர் பெயரை வாயால் சொன்னாலும் பாவம் என இது உணர்த்தியுள்ளது.

எவ்வழியும் பழி துயரங்களை விளைத்து அழிவைத் தருதலால், கள் அருந்துதல் பொல்லாத பாவம் என மேலோர் எல்லாரும் இகழ்ந்து வெறுத்து மனித சமுதாயம் உணர்ந்து திருந்தும்படி யாண்டும் பரிவோடு போதித்திருக்கின்றனர்.

கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. 930 கள்ளுண்ணாமை

கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின். - சிலப்பதிகாரம்

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

உள்ளமொழி செய்கைகளின் ஒன்றியுல கேத்தும்
தள்ளரிய தன்மைவழி நிற்றலுறு நல்லீர்!
எள்ளுநர்கள் தன்மையிது நிற்கவிடர் செய்யும்
கள்ளுமுணல் குற்றம் கடைப்பிடிமின் என்றான். - சிந்தாமணி

கடாஅ யானைமுன் கட்கா முற்றோர்
விடாஅது சென்றதன் வெண்கோட்டு வீழ்வ(து)
உண்ட கள்ளின் உறுசெருக் காவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்! மணிமேகலை

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

விள்ளுறும் நாணினர் விரகத் தீயினர்
உள்ளுறும் உயிர்ப்பினர் உலையும் நெஞ்சினர்
தள்ளுறு தம்உணர் வின்றிச் சாம்பினார்
கள்ளினும் உளதுகொல் கருத்த ழிப்பதே. - கந்தபுராணம்

நேரிசை வெண்பா

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையர் என்றுரைக்கும் தேசும் - களிஎன்னும்
கட்டுரையால் கோதப் படுமேல் இவைஎல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து. 86 அறநெறிச்சாரம்

கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கட் போற்றான் உழவும் - இளைஞனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்
உள்ளனபோன்(று) இல்லாப் பொருள். 59 திரிகடுகம்

கள் தீயது, குடிகேடுகளை விளைத்துவிடும்; அதனை உண்ணலாகாது என வள்ளுவர் முதலாக யாவரும் இங்ஙனம் உணர்த்தியுள்ளனர். உணர்வு நலங்களை ஊன்றி உணர்ந்து உறுதி நிலைகளைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

நேரிசை வெண்பா

உள்ளக் களிப்பால் உணர்வழியும் ஊனமெல்லாம்
வெள்ளப் பெருக்காய் விளைந்துவரும் - எள்ளலெங்கும்
கூட்டிக் கொடிய குடிகேடு செய்யுமே
ஓட்டி விடுக உணர்ந்து.

ஈன மதுக்குடியால் என்றும் குடிகேடாம்
ஊனம் தெளிக உடன்.

கள்ளின் களிப்பால் விளையும் அல்லல் அழிவுகளை உள்ளம் தெளிந்து விலகி நல்ல வழிகளில் பழகி நலம் பல பெறுக என்றும், இழிந்ததை இகந்து உயர்ந்தவன் ஆகுக என்றும் கவிராச பண்டிதர் கூறுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-20, 6:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே