314 நூல் கற்றுச் செய்யுள் நுவல்வதால் செருக்கு ஏன் - கல்விச் செருக்கு 4

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

பருத்திவிதைத் தெடுத்துநூ லாக்கி யாடை
..பண்ணியளித் தாலுடுத்தல் பார மாமோ
திருத்திமண்ணிற் செந்நெல்விதைத் தரிசி யாக்கித்
..தீஞ்சோறட் டூட்டிலுண்ணச் செவ்வாய் நோமோ
அருத்தமொடு மிலக்கணங்க ளிலக்கி யங்கள்
..அரியநூல் பலமுன்னோ ரளித்த தாலே
கருத்தேயந் நூல்கள்சில கற்று ணர்ந்து
..கவிசொல்லல் வியப்பன்று கர்வ மென்னே. 4

- கல்விச் செருக்கு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”பருத்தியை விதைத்துப் பயிராக்கி நூலெடுத்து ஆடைசெய்து தந்தால் உடுத்துவது வருத்தம் தருமா? வயலைத் திருத்தி பூமியில் செம்மையான நெல்லை விதைத்து அரிசியாக்கிச் சுவையான சோறு சமைத்து ஊட்டினால் உண்ண, சிவந்த வாய் நோகுமா?

நல்ல அர்த்தங்களோடு இலக்கண இலக்கியங்கள், அரிய நூல்கள் பல முன்னுள்ளோர் அமைத்துத் தந்துள்ளார்கள். கருத்தாய் அவற்றுள் சில நூல்கள் கற்றறிந்து கவி சொல்வது வியப்பில்லை நெஞ்சே! ஏன் செருக்குக் கொள்கின்றாய்?” என்று இப்பாடலாசிரியர் கேட்கிறார்.

அடுதல் - சமைத்தல். கர்வம் - செருக்கு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-20, 10:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே