313 யார்க்கும் முழுதுணர இயலாது, செருக்கு ஏன் - கல்விச் செருக்கு 3

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

அத்திரங்கள் செய்வோர்தம் எய்தல் தேரார்
..ஆய்ந்தெய்ய அறிந்தோரம் பியற்றல் தேரார்
சித்திரங்கள் பொறிப்பவர்தாங் கருவி செய்யார்
..திகழ்கருவி செய்பவர்சித் திரித்தல் கல்லார்
வத்திரங்கள் பூண்போர்நெய் தறியார் இன்ன
..வாய்மைபோ லொன்றறிவோர் ஒன்று கல்லார்
சத்தியமாச் சகலமுநன் குணர்ந்தோர் போலத்
..தருக்குற்றார் பெருக்குற்றார் திருக்குற் றாரே. 3

- கல்விச் செருக்கு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை

”படைக்கருவி உண்டாக்குவோர் அக்கருவியினைப் பகைவன் மேல் குறி தப்பாமல் எறிய அறியார்; தெரிந்து படைக்கருவியை எறிய அறிவோர் அக்கருவியை உண்டாக்க அறியார்.

ஓவியங்கள் வரைவோர் அதற்கு வேண்டும் கருவி செய்ய அறியார்; தேவையான கருவி செய்வோர் ஓவியம் வரையக் கற்றிருக்க மாட்டார்.

ஆடை யணிபவர் அவ்வாடைகளை நெய்ய அறியார். இத்தகைய உண்மை போல, ஒன்றறிவோர் ஒன்று அறியாராவர்.

ஆதலால் நிச்சயமாக எல்லாம் நன்கு அறிந்தவர் போல செருக்குக் கொள்பவர் பாவத்தைப் பெருக்கிய வராவர். மேலும் தம்மையே வஞ்சித்தவரும் ஆவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அத்திரம் - படைக்கருவி. சித்திரம் - ஓவியம். தருக்கு - செருக்கு.
பெருக்கு - (பாவம்) பெருக்குதல். திருக்கு - வஞ்சனை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-20, 9:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே