பட்டினிப் பாலை நூல் ஆசிரியர் கவிஞர் க தங்கமணி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

.பட்டினிப் பாலை !

நூல் ஆசிரியர் : கவிஞர் க. தங்கமணி !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு : தமிழ் அலை, 84/20பி, பார்த்தசாரதி தெரு, தேனாம்பேட்டை, சென்னை-600 086. பக்கங்கள் : 104, விலை : ரூ. 100


******

நூலாசிரியர் கவிஞர் க.தங்கமணி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள ஊ..ஆதனூர் (அகரம்) என்ற கிராமத்தில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர். திரவச் சிலைகள் என்ற கவிதை தொகுப்பு நூலையும் எழுதியுள்ளார்.

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி அணிந்துரை வழங்கி உள்ளார்.



தூய்மை இந்தியா!



வாசலில் / சாணி கரைத்துப் / போடுகையில்
வெறிச்சோடிக் கிடக்கும் / பக்கத்து வீட்டு வாசலுக்கும்
சேர்த்துத் தெளித்துவிட்டு / இரண்டு வாசல்களையும்
இணைத்துக் கூட்டும் / கிராமத்து பெண்கள்
தாம் / ஆண்டாண்டு காலமாய் / அண்டி வாழ்கிறது
தூய்மை இந்தியா!



பக்கத்து வீட்டு பெண்மணிக்கு உடல்நலம் இல்லாமல் எழுந்திருக்காமல் இருந்தால் தன் வீட்டோடு பக்கத்து வீட்டிற்கும் வாசல் தெளித்து கோலம் போடும் மனிதநேயத்தில் தான் தூய்மை இந்தியா உள்ளது. இந்த குணம் அடுக்கக வீடுகளில் வாய்ப்பில்லை என்றாலும் தனி வீடுகளில் நேயத்துடன் நடந்து வரும் நல்ல நிகழ்வு தான்.



சும்மாடு!



தலையில் நீங்கள் / என்னவெல்லாம் செய்வீர்கள்
முடி வெட்டுவோம் / முள்கட்டுச் சுமந்ததில்லையா?
நல்லெண்ணெய் தேய்ப்போம் / நாற்றுக்கட்டுச் சுமந்ததில்லையா?
அழகாய் சீவிக்கொள்வோம் / அடுக்குப்பனை சுமந்ததில்லையா?
கலரிங் செய்து கொள்வோம் / கட்டைகள் சுமந்ததில்லையா? மொட்டை அடித்துக் கொள்வோம் / மூட்டை தூக்கியதில்லையா?
மசாஜ் செய்து கொள்வோம் / மண் சுமந்ததில்லையா? / இல்லை
கடைசியாய் ஒரு கேள்வி / சும்மாடு கேள்விப்பட்டதுண்டா?
சும்மாடெல்லாம் அறிந்ததில்லை / சும்மாவே அறிந்த்துண்டு!



உழைப்பற்ற மனிதனுக்கும் உழைப்பாளிக்கும் தலையில் உள்ள வேறுபாட்டை கேள்விகள் கேட்டு ‘சும்மாடு’ எதற்கெல்லாம் உழைப்பாளிக்குப் பயன்படுகின்றன. சும்மா இருப்பவனுக்கு சும்மாடு பயன்படுவதில்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப் போல ‘சும்மா’ என்ற சொல்லைப் பயன்படுத்தி புத்திப் புகட்டி உள்ளார், பாராட்டுக்கள்.



அபிசேகத்திற்குத் தான் / ஆடம்பரம் தேவைப்படுகிறது.
படையலுக்கு / பாமரனின் கண்ணீரே போதும்.



அபிசேகம் என்ற பெயரில் பாலும் நெய்யும் வீணாவதைச் சுட்டிக்காட்டி படையலுக்கு கண்ணீர் போதும் என்று எளிமையை உணர்த்தி பகுத்தறிவு விதை விதைத்துள்ளார் பாராட்டுக்கள்.



இது தான் நாங்கள்!



முழங்கால் பதிந்திடும் / சேற்றில் தான் நடவு
தொடையைக் கிழிக்கும் / பயிர்களுக்கிடையில் தாம்
களையெடுப்பு / நாள் முழுவதும் / நனைந்த
படியேதான் நாற்றடிப்பு / நெஞ்சைத் தொடும்
நீருள்ல வாய்க்காலைத் தாண்டித்தான்
வயல்வெளி வேலை / பாலமற்ற ஆற்றிடை
நீரை நீந்தித்தான் கடக்கிறோம்!



உழவனின் உழைப்பில் உள்ள சிரமங்களை இடர்பாடுகளைப் பட்டியலிட்டு உழைப்பின் உன்னதத்தை உணர்த்திய விதம் நன்று. உழவன் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்ற உண்மையை உணர்த்தி உள்ளார்.



உயிர்க்கொல்லி!

ஆழப் பரவியிருக்கும் / ஏகாதிபத்தியம் தான்
வேர்களை இன்னும் இன்னும் / நீட்டிக் கொண்டே
இருக்கிறது. / இதன் கிளைகளில் / முதலாளித்துவம்
கழுகுகளுக்கு மட்டுமே / கூடு கட்ட அனுமதி தரப்பட்டிருக்கிறது!



உயிர்க்கொல்லி கொரோனா வந்து உலகையே அச்சுறுத்தியது. கடவுள், மதம், ஆன்மீகம், சோதிடம் எல்லாவற்றையும் ஒரு சுருட்டி சுருட்டி விட்டது. எளிமையான வாழ்க்கைக்கு பயிற்சியளித்தது. கெட்டதிலும் நன்மை என்ற விதமாக சில நன்மைகளும் செய்தது. ஆனால் கொரோனா விட கொடிய உயிர்க்கொல்லி ஏகாதிபத்தியம் என்பதை புதுக்கவிதையின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.



ஆய்வு!



நாங்கள் / வேற்று கிரகவாசிகளாக
இருந்திருக்கக் கூடாதா / இந்நேரம்
இங்கு குடிதண்ணீர் / இருக்கிறதா என்று
சோதனை நடந்திருக்கும்!



கொரோனா ஊரடங்கின் போது 45 நாட்களாக மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் முடக்கப்பட்டு உழைப்பாளிகளை உழைக்க விடாமல் தடுத்து வருமானத்திற்கு வழியின்றி ஆக்கி, பசி, பட்டினியால் துடித்துப் போனார்கள். கொரோனா கொரோனா என்று பயமுறுத்தி விட்டு கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று அறிவுரையும் வழங்கி விட்டார்கள்.



வேற்று கிரகவாசிகளாக ஏழைகள் இருந்திருந்தால் அவர்களை கவனித்து இருப்பார்கள் என்று உணர்த்தியது சிறப்பு. ஏவுகணைகள் ஏவுவதில் காட்டும் ஆராய்ச்சியை கொரோனா ஒழிப்பில் காட்டி இருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது.



செருவாடு!



அந்த சேமிப்புக் கணக்கைத் / துவங்குவதற்கு
எந்த அதிகாரியின் / அனுமதியும் தேவையில்லை
அனுமதியின்றியே / துவங்கப்படுகிறது
அந்தக் கணக்கு.



வீட்டில் பெண்கள் சேமிக்கும் பழக்கத்திற்கு ‘செருவாடு’ என்று பெயர் உண்டு. தலையில் பாரம் சுமக்கும் முன் வைக்கும் துணிக்குப் பெயர் சும்மாடு இப்படி நகரவாசிகளால் இன்னும் அறியப்படாத பழைமை மிக சொற்களை புதுக்கவிதையில் அறிமுகம் செய்துள்ளார். பாராட்டுக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (2-Jun-20, 7:15 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே