காப்பேன் அறம்பாடி
காப்பேன் அறம்பாடி..!
01 / 07 / 2025
பாட்டன் முப்பாட்டன் பேசிய தமிழே
தொல்காப்பியன் இலக்கணம் வகுத்த தமிழே
வள்ளுவன் கம்பன் போற்றிய இயற்றமிழே
பாணர்கள் பாடி வளர்த்த உயர் தமிழே
தமிழே..தமிழே.. நீ வாழி
தமிழே ..தமிழே..உன்புகழ் பாடி
தமிழே..தமிழே..என் உயிர் நாடி
தமிழே.. தமிழே..காப்பேன் அறம்பாடி
ஏட்டில் எழுதிய கடுந் தமிழை
எளிதாய் எளியோர்க்கும் புரிந்திடவே
இலக்கண விலங்கை உடைத்தே நாளும்
இயல்பாய் எழுத்தில் பதித்தானே
முறுக்கு மீசை முண்டாசும்
சிவந்து ஒளிர்ந்த கண்களுமாய்
சுதந்திர தீயை வளர்த்தானே
சிவந்த ஆங்கில அதிகாரத்தை
தமிழால் அடக்கி ஓடவிட்டானே
பாரதம் காத்த பாரதி
பாடி மகிழ்ந்த தீந்தமிழே
எம்மொழி தூய்மை காத்திடவே
செம்மொழி ஆக்கி அரியாசனம் ஏற்றி
தமிழ் மொழியின் வனப்பை கூட்டியே
உலக அரங்கில் கொடி நாட்டியே
தமிழுக்காய் தமிழாகவே வாழ்ந்து
தமிழனின் தலை நிமிர செய்து
தமிழை பாட்டாளி மக்களுக்கும்
இளம் சமுதாயம் புரிந்திட தமிழ்
அமிழ்தின் சுவையை கொண்டுசேர்த்த
கலைஞன் கவிஞன்.. தினம் ரசித்த..
உயிர் மூச்சாய் சுவாசித்த அவன்
உதிரம் கலந்த உயிர்த் தமிழே
தமிழே..தமிழே.. நீ வாழி
தமிழே ..தமிழே..உன்புகழ் பாடி
தமிழே..தமிழே..என் உயிர் நாடி
தமிழே.. தமிழே..காப்பேன் அறம்பாடி