தித்தித்திருப்பதுவோ வல்லடிமை o வளையற் சிந்து

வளையற்சிந்து

#தித்தித்திருப்பதுவோ வல்லடிமை..!

நாட்டினிலே குற்றம்பல
நடுங்கும்படி செய்வார் - அவர்
நல்லமுகங் கொள்வார் - நிதம்
நைச்சியத்தால் வெல்வார் - நாம்
நையத்தான் புடைத்தாலே
நரியெவரும் துள்ளார்..!

வேட்டுக்கள் வைக்கின்றார்
விலையேற்றம் கண்டோம் - துயர்
வீதியிலே நின்றோம் - நம்
விழிகளில்நீர்க் கொண்டோம் - பல
வேதனைகள் வாட்டிடுதே
விடியலென்று காண்போம்..?

பட்டாவினைப் பெற்றபின்னும்
பயிர்நிலம்கைப் பற்றி - கொடும்
பண்ணையார்கள் சுற்றி - நெடும்
பாதகங்கள் முற்றி - இங்குப்
பட்டினியால் தவிப்போரைப்
பார்த்திடுமோ வெற்றி..!

மட்டில்லாத மகிழ்ச்சிக்கான
மகத்தானச் சட்டம் - அது
மாநிலத்தின் திட்டம் - இடை
வடநாட்டான் கொட்டம் - கூடி
வளமையெல்லாம் சுரண்டுகிறார்
வளர்கிறதே நட்டம்..!

உடைக்குவரி, உண்ணவரி
ஊரையடித்துக் கொள்ளை - நீள்
ஊழல்களின் எல்லை - விலை
உயர்வதனால் தொல்லை - ஏழை
ஒருவேளை உண்ணுதற்கோ
ஓருவழியு மில்லை..!

குடிகெடுக்கும் குடிப்பழக்கம்
கூறிடுவார் பின்னும் - அதைக்
குடிக்கச்செய்வா ரின்னும் - கோடி
குவித்துப்பண மெண்ணும் - எந்தக்
கொள்கையாளன் ஆண்டபோதும்
குடலரிப்புத் திண்ணம்..!

கரியமனம் காவியாடை
காமத்துடன் உள்ளார் - அவர்
கற்பையுண்ணும் வல்லார் - நீதி
கண்ணைக்கட்டி வெல்வார் - தேடிக்
கையொடுகால் நீக்கவேண்டும்
கழியட்டுமே பொல்லார்..!

உரிமைகளைப் பறித்துவிட்டு
உருக்குலைத்தார் நாட்டை - நீசர்
உயர்நிலையில் வேட்டை - நாம்
உணரவேண்டும் பாட்டை - கூடி
உயர்திக்குரல் எழுப்பிநாளும்
ஒடுக்கவேண்டும் கேட்டை..!!

எத்திக்கும் மிட்டாயுடன்
எம்சுதந்திரம் நாட்டில் - நமை
இட்டுவிட்டார்க் கூட்டில் - பல
இடர்கள்தந்து கேட்டில் - இதை
எடுத்தெங்கும் உரைத்திடுவோம்
எரிமலையாய்ப் பாட்டில்..!

தித்தித்து இருப்பதுவோ
தீண்டாமைதானே யின்றும் - பெரு
திருடரெல்லாம் வென்றும் - இனி
திரும்பிடுமோ நன்றும் - நம்
திசையாவும் ஒளிசெய்வோம்
தீமைகளைக் கொன்றும்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (30-Aug-25, 7:01 pm)
பார்வை : 31

மேலே