அடுத்த புத்தகம்

#காற்றுவெளி கலை இலக்கிய இதழில் (2020 மாசி) பிரசுரமாகியிருக்கும் எனது கவிதை
"அடுத்த புத்தகம்"

கை குலுக்குகிறார்கள் சிலர்
கட்டியணைக்கிறார்கள் சிலர்
பெருமகிழ்ச்சியடைவதாய்
கூறிக்கொண்டே
நழுவுகிறார்கள் சிலர்
நீ நண்பன் என்பதே பெருமை என
புகழ்ந்து கலைகிறார்கள் சிலர்
எவ்வளவு செலவாச்சு என
அக்கறைப் படுகிறார்கள் சிலர்
எவ்வளவு லாபம் என
கணக்கு கேட்கிறார்கள் சிலர்
எதிர்பாராவிதமாக போய்
எதிரில் நின்றதும்
வெளியீட்டு விழாவுக்கு
வர முடியாமல் போனதற்கு
வருந்துவதாய்க் கூறும்
போலி முகங்களோடு சிலர்
விலையை புரட்டிப் பார்த்து
தள்ளுபடி விலை எவ்வளவு
என கேட்கும் இன்னும் சிலர்
வெகு சிலர் மட்டும்
அச்சிடப்பட்டு இருப்பதைவிட
அதிக விலை கொடுத்து மகிழ்கிறார்கள்
இன்னும் வெகு சிலர்
அடக்க விலையையாவது
பெற்றுக்கொள்ள வேண்டும் என
கட்டாயமாய் பையில் திணிக்கிறார்கள்
தன் புத்தகத்தை
தானே விற்க நேர்ந்தவன்
முடிவு செய்கிறான்
இன்னும் சிலருக்காகவும்
வெகு சிலருக்குமாவது
அடுத்த புத்தகம் எழுதலாம்தான்
பிரதிகள் மட்டும்
இன்னும் குறைவாக அச்சிட வேண்டும்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (7-Jun-20, 12:21 pm)
Tanglish : atutha puththagam
பார்வை : 84

மேலே