3 அவளுடன் பேசும்போது

__________________

இந்த இரவில் தொலைபேசியில் அவள் அழைத்தாள்...

தூங்கிட்டிங்களா?

இல்லை. சொல்லு...

நீங்க படிக்கறீங்களா? இல்ல... ஏதேனும் எழுதறீங்களா?

படிச்சிட்டுத்தான் இருந்தேன்... அங்கே குட்டிங்க படுத்துதா?

இல்லை ஸ்பரி... இப்போ டிவில டிஸ்கவரி சானல்ல ஒரு ப்ரோக்ராம் பாத்தேன். ஈவில் மாதிரி. பிளாக் மேஜிக்.

ம்ம்ம்...

பயமா இருக்கு... அதுதான் கொஞ்சம் பேசனும்போல இருந்தது.

நான் வரவா அங்கே?

இல்லை. உங்களுக்கு சிரமம் வேண்டாம்.

குட்டி ரெண்டும் தூங்குதா?

ம்ம்ம். ஸ்பரி... பேய் எல்லாம் இருக்கா?

அது தெரியலை. இருக்கலாம். புதுமைப்பித்தன் கூட காஞ்சனை எழுதிட்டு சொன்னாரே.
பேய் இருக்கானு தெரியல. ஆனா நினைக்க பயமாயிருக்குனு சொல்லி இருக்கார்.

அப்போ நாம் தனியா இருக்கும்போது பயம் வருமோ?
ஒரு விதத்தில் தனிமை கூட அழுக்குதானே ஸ்பரி?

நாம எப்பவுமே தனியா மட்டும்தானே இருக்கோம்? கூட இருக்கரவங்க கிட்டே பேசறோம். பழகறோம். அது போதுமா?

பேசினாலும் மனசுக்குள்ள ஒரு தனிமை உருண்டுகிட்டே இருக்கும் ஸ்பரி...

நீங்க சொல்வீங்களே, ரொம்ப தனியா இருந்தா பாட்டு கேளு. இலக்கியத்தோட குளிர்ந்த ஈரம்தான் இசை அப்படின்னு.

நான் மெல்ல சிரித்தேன்.

எதுக்கு சிரிக்கிறீங்க...நானும் நல்லா பாடுவேன். உங்களுக்கு தெரியாதோ?

தெரியும். இப்போ உன் இனிய தனிமை என் கூட பேசி ரெண்டு மடங்கு அதிகம் ஆகியிருக்குமே? அதுக்குத்தான்...

ஹ்ம்ம்...இருக்கலாம்.
ஆனா ஸ்பரி.. தனிமை ஒரு விதத்துல பறிக்கப்படாத விடுதலை மாதிரி இருக்கு. இந்த ராத்திரிலே எல்லா கடிகார முள்ளும் தோத்து போயிடுது.

அது பகல் முழுக்க நம்பளை உறிஞ்சி எடுக்குது. இப்போ தரையில் போட்ட தூண்டில் மாதிரி ஒரே திணறலோட இருக்கு ஸ்பரி.

உண்மைதான்... சரி... போய் தூங்கு.

ம்ம்ம். நாளைக்கு பொங்கல் இல்லையா?

நீயும் நானும் எப்போது எந்த பண்டிகைகள் கொண்டாடினோம்? ஊருக்கு வெறும் வாழ்த்துக்கள் சொல்றது அவ்வளவுதான்.

உண்மைதான். ஜி. நாகராஜன் கூட ஒரு நாவலை எழுதினாரே நாளை மற்றுமொரு நாளே னு. ஜீனியஸ் அவர். குட்டி முழிக்குது. தூங்கறேன்.

போன் அணைந்தது.


🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

எழுதியவர் : ஸ்பரிசன் (24-Jun-20, 11:58 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 60

மேலே