பெருமாள் பிறந்த கதை
திருக்கண்ணபுரம் ஒரு வைணவத் தலம். அங்கே கோயில் கொண்டிருக்கும் மூர்த்தியின் பெயர் சவுரி நாராயணன். அவர் திருநட்சத்திரம் அத்தம் என்பர். அதனைக் குறித்துப் பாடியது இது.
நேரிசை வெண்பா
உத்திரத்துக் கோர்நாள் உரோகணிக்குப் பத்தாநாள்
சித்திரைக்கு நேரே சிறந்தநாள் - எத்திசையும்
காராரும் பூஞ்சோலைக் கண்ணபுரம் வாழ்சவுரி
நாரா யணன்பிறந்த நாள். 136
- கவி காளமேகம்
பொருளுரை:
எத்திசையிலும் மேகங்கள் படிகின்ற பூஞ்சோலைகளை யுடைய திருக்கண்ணபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் சவுரி நாராயணரின் பிறந்த நாள் - உத்திரத்துக்கு அடுத்ததான நட்சத்திரமும் உரோணிக்குப் பத்தாவது நட்சத்திரமும், சித்திரைக்கு நேரே முற்பட்ட நட்சத்திரமும் ஆகிய சிறப்புடைய அத்த நட்சத்திரம் ஆகும்.

