பகற்கனவு

மழை வந்தால்
தவளைக்குத்தான்
கொண்டாட்டம்
என்பதில்லை.
மழையில் நனைந்த
செடி கொடிகளில்
பச்சயம் பூத்திருப்பது போல
எனது முகத்திலும்
பூத்திருக்கிறது மகிழ்ச்சி.

இரவின் அடர் இருட்டினில்
மழைத் தூறல் கிளப்பிடும்
மண் வாசனையை
ஆழமாய் முகர்கிறேன்.
குரல் எனது சன்னமாய்
இதுவரை எவருமே
கேளாத பாடலைப்
பாடிக் கொண்டிருக்கிறது

மழை மேகம் குழைந்து வந்து
தெரு விளக்கு வெளிச்சத்தில்
குழுமி நிற்கிறது பனி மூட்டமாய்
என் வீட்டுக் கூரையினப்
பட்டும் படாமல்
தழுவிக் கிடக்கிறது.

கார் மேக வண்ணங் கொண்ட
கண்ணனின் கைச் சரக்கான
பேர் தெரியாத அந்த நீளக்
குழல் வழியே
நித்தமும் நடனமிடும்
மந்திர இசையினில்
எந்திரப் பெண் போல
எழுந்து நடந்திடும்
கோபியரைப் போலே
என்னைச் சுற்றிலும்
கன்னியர் கூட்டம்.

அழைப்பு மணி அடித்து
உறக்கம் கலைகிறது.
அங்கே மழையும் இல்லை
தங்கிடும் இசையும் இல்லை
மழையும் இசையும்
இல்லாமல் இங்கு
காதலும் இல்லை
கத்தரிக்காயும் இல்லை
எல்லாம் பகற்கனவு.

,

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (9-Jul-20, 5:07 pm)
Tanglish : pakarkanavu
பார்வை : 112

மேலே