மழபாடியார்
திருமழபாடி என்னும் திருநகரில் கோயில் கொண்டிருக்கிற சிவபெருமானைத் தரிசிக்கச் சென்ற போது, கவி காளமேகம் பாடியது இது. 'பெயர்தான் அவருக்கு வயித்தியநாதர்! அவருடைய நோய்களையே அவரால் தீர்க்க முடியவில்லை? அவரெங்கே பிறருடைய நோய்களைத் தீர்க்கப் போகிறார்? என்று அவரை நிந்திப்பதாக அமைந்தது இச்செய்யுள்.
நேரிசை வெண்பா
வலியமழ பாடி வயித்தியநா தர்க்குத்
தலைவலியாம் நீரேற்றந் தானாம் - குலைவலியாம்
கையோடு சூலையாம் கால்வாத மாங்கண்மேல்
ஐயோ எழுஞாயி(று) ஆம். 162
- கவி காளமேகம்
பொருளுரை:
மழபாடியில் கோயில் கொண்டிருக்கிறார் வல்லமையுடைய வயித்திய நாதர். அவருக்குத் தலை வலியாம்; நீரேற்றமாம்; குலை வலியாம்; கால் வாதமாம்; கண் மேல் எழுஞாயிறாம்; இத்தகைய அவரெங்கே பிறரைக் குணப்படுத்தப் போகிறார்.
"தலை” வலிமைகொண்ட சடைக்கற்றையாம்; தலை மேல் கங்கையாகிய நீர் உயர்வு பெற்றிருக்கிறதாம், அனைத்தையும் அழியச் செய்யும் ஆற்றல் உடையவரும் அவராம், கையிலே அவருக்குத் திருவோடாம்; சூலம் ஏந்தியவரும் அவராம்; அவரது கண்களோ எழுகின்ற ஞாயிற்றைப் போல நெருப்புப் பிழம்புகளாக விளங்குகின்றனவாம். இப்படிப் பெருமானைப் போற்றுவதாகவும் உரைகொள்ள வேண்டும்.