கொரோனோ - ஒரு அலசல்

நான் பார்க்கும் வேலையும், அதை சரியாக செய்ய வேண்டும் என்ற என்னுடைய எண்ணமும் சேர்ந்து கொரோனோவை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என எனக்கு தெரியும். நான் அதைப்பற்றி பயப்படவில்லை. அதே நேரம் மெத்தனமாகவும் இல்லை.

என்னுடைய சிறு கவலை என்பது என்னுடன் இருக்கின்ற இதய நோய் பிரச்சனையுள்ள தந்தையையும், சர்க்கரை நோய் பிரச்சனையுள்ள தாயையும் பற்றியதாக மட்டுமே இருந்தது...!!!


தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது, முகக்கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது, கிருமி நாசினி பயன்படுத்தாமல் இருப்பது போன்ற எந்த தவறையும் முடிந்த வரை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அது மட்டுமில்லாமல் - எனக்கும், என்னுடன் பணிபுரிபவர்களுக்கும், தரமான கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை போன்றவை தடையில்லாமல் கிடைக்க உறுதி செய்து கொண்டேன்.

முடிந்தவரை வாடிக்கையாளர்களுக்கும் "முகக்கவசம் அணிய வேண்டும், பேசும் பொழுது முகக்கவசத்தை கழட்டிட வேண்டாம்" போன்ற அறிவுரைகளோடு, கிருமி நாசினியும் வழங்கி வந்தோம்...!!!


இத்தனை இருந்தும் ஒரு சுபயோக சுப தினத்தில், அந்த கொரோனோ என்னை தங்கியிருக்கக் கூடும் என எனக்கு தோன்றியது. தெரியாமல் என்னைத் தொட்ட 1 வயது மகனின் கையை உடனடியாக கழுவி விட சொன்னேன். அலுவலகத்தில் அனைவரையும் தள்ளி இருக்க சொன்னேன். அவர்கள் அப்படி எதுவும் இருக்காது என்று சொன்னார்கள். இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி, இருந்தாலும் தள்ளி இருங்கள் என்றேன்.

அன்றைய தினம் நிறைய யோசித்து என்னை தனியாக வைத்துக் கொண்டேன். அலுவலக வேலைக்கு நடுவே, ஏற்கனவே மருந்துகள் உட்கொள்கின்ற - தந்தையையும், தாயையும் தனியே செல்லச் சொல்லி பல முறை அலைப்பேசியில் சொல்லியும், செவி சாயக்கவில்லை என் தாய். அவர்களுக்கு என் மேல் அவ்வளவு பாசமாம்.

பாசத்தைக் காட்ட இது நேரம் இல்லை என பல முறை எடுத்து சொல்லியும் வென்றது என்னவோ என் தாயின் பிடிவாதம் தான். என்னுடன் வீட்டில் இருந்த அனைவரும் வெளியூர் சென்று விட்டனர் - தாயைத் தவிர. தாயுடைய அறியாமைக்கும் சேர்த்து, நான் யோசித்து என்னை தனிமைப் படுத்திக்கொண்டேன்...!!!


அதுவரை வராத காய்ச்சல் அன்றிரவு வந்தது. அது 101.6F என்ற அளவில் இருந்தது. அது ஏற்கனவே என்னுடன் இருந்த உடல் வலியோடு சேர்ந்து கொண்டது. மருந்துகள் எடுத்துக் கொள்ளாத என்னுடைய பழக்கம் - 2-3 மணி நேரம் மட்டுமே நீடித்தது. கடைசியாக டோலோ-650 என் உடம்புக்குள் போனது. முழுவதும் இல்லையென்றாலும் முடிந்த வரை தூங்கினேன்.

மறுநாள் காலை நானாக பரிசோதனை செய்ய செல்கிறேன். அங்கு ஏனோ என்னைத்தவிர யாரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய வரவில்லை. பல காரணங்களால், பிறர் வற்புறுத்தி, பரிசோதனை செய்ய பலர் வந்திருந்தார்கள். ஏன் யாரும் தாமாக பரிசோதனை செய்ய முன் வருவதில்லை என யோசித்தால், "இந்த சமூகம் என்னை தவறாக எண்ணும்" என்ற எண்ணம் எல்லோருடைய எண்ணமுமாக தோன்றியது.

3 ரோசஸ் விளம்பரத்தில் சொல்வது போல, கொரோனோ தொற்றுக்கு உள்ளானவர்களிடம் இருந்து தனியாக தான் இருக்க வேண்டுமே தவிர, அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்க வேண்டியது இல்லை. நாம் தள்ளி இருந்தும் ஒற்றுமையைக் காட்டலாம். அவர்கள் எந்த தவறையும் செய்யாதவர்கள். தவறான பார்வை மாறினால் தான், பயம் இல்லாமல், பலர் பரிசோதனைக்கு செல்வார்கள். அப்பொழுது தான் தொற்றுக்கு உள்ளானவர்கள், பிறருக்கு தொற்றை பரப்பாமல் இருப்பார்கள். தொற்று எண்ணிக்கை குறையும். மாற்றம் - நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்...!!!

தேர்வு முடிவுக்கு ஆவலாய் காத்திருக்கும் அந்த மாணவ பருவத்திற்கு கூட்டிச்சென்றது - பரிசோதனை முடிவுக்காக காத்திருந்த தருணங்கள். அந்த நாளை ஒரு வழியாக அனுப்பி விட்டு உறங்கிய பொழுது, இடையில் உறக்கம் வரவில்லை. ஒரு டோலோவை சாப்பிட்டு விட்டு உறங்க சென்றேன். டோலோ எனக்குள் சென்றவுடன் காய்ச்சல் ஓடி விட்டது. இந்த உடம்பு மட்டும் ஏனோ ஓடிப் போன காய்ச்சலை நினைத்து அழுது கொண்டிருந்தது. அச்சச்சோ, உங்களுக்கு புரியலியா? காய்ச்சல் போன பொழுது வெளிவந்த வியர்வையைத் தான் அப்படி சொன்னேன்.

காய்ச்சலோடு சேர்ந்து அதன் நண்பனான உடல் வலியும் கொஞ்சம் வெளியே சென்றிருந்தது. காலையில் நம்பிக்கை வந்தது. நன்றாக படித்து பரீட்சை எழுதிய மாணவனைப் போல, நம்பிக்கையாக இருந்தேன். முடிவு கண்டிப்பாக நமக்கு சாதகமாக தான் வரும் என்று .

அன்று மாலை வந்த தொலைப்பேசி அழைப்பு ஏனோ கொரோனாவிற்கு சாதகமாக வந்தது. நம்பிக்கையோடு கிளம்பி சென்றேன் - ஏற்கனவே எதிர்பார்த்தது தானே..???


பல வருடம் கழித்து இந்த பரிசோதனையில் நேர்மறையான (Positive) முடிவு வந்ததால் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. அந்த கல்லூரியிலும் சில நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

கல்லூரி விடுதியில் முதன்முறை என்னை சேர்த்து விட்டு சென்ற எனது தாய், ஆயிரம் முறை என்னைப் பற்றி யோசித்திருக்கலாம். ஆனால் இந்த முறை விடுதியில் சேர்ந்த நான், ஆயிரத்து ஒரு முறை அவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவருடைய பரிசோதனை முடிவு, Positive என வந்தால், என்ன செய்வது என பல முறை யோசித்தேன். பல நண்பர்களிடமும் உதவி கேட்டேன். சிலர் நம்பிக்கையும் கொடுத்திருந்தனர். அவருடைய பரிசோதனை முடிவு negative என வந்ததும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் "நீ ஒழுங்காக தான் வேலை செய்திருக்கிறாய்" என்று...!!!


இங்கே இதைப் படிக்கும் அனைவருக்கும் எனது வேண்டுகோள். தயவுசெய்து உங்களுடைய பாசத்தை, இந்த விஷயத்தில் காட்ட வேண்டாம். எங்கு காட்ட வேண்டுமோ, அங்கு காட்டிக்கொள்ளுங்கள். சரியாக யோசித்து ஆபத்து குறைவாக உள்ளவர்களை/ 18-40 வயது உள்ளவர்களை - கொரோனோ வந்தவர்களுக்கு/ அறிகுறி இருப்பவர்களுக்கு துணைக்கு இருக்குமாறு சொல்லி விட்டு மற்றவர்கள் தனியாக செல்லுங்கள். இதுவே அனைவருக்கும் நல்லது...


என் அன்னையோடு சேர்ந்து பரிசோதனை செய்த, அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுக்கும், என்னுடைய தந்தை, மனைவி மற்றும் மகன்களுக்கும் பரிசோதனை முடிவு Negative என வந்தது ஆறுதல் தந்தது.

பிறருக்கு பரிசோதனைக்கு செல்ல அவர்களுடைய 2 சக்கர வாகனம் உதவியாக இருந்தது. ஆனால் தனித்து விடப்பட்ட என் தாயை பரிசோதனை மையத்துக்கு அழைத்து செல்ல, சுகாதார ஆய்வாளர் பலரிடம் உதவி கேட்டு, கிடைக்கவில்லை. கடைசியாக உதவ முன் வந்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்.

என் தாயைப் போன்ற போக்குவரத்து வசதி இல்லாதவர்கள் பரிசோதனை செய்ய செல்ல வசதி செய்து தருமாறு அரசை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...


எனக்கு அதிக சக்தியுள்ள மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் சில பிரச்சனைகள் இருந்ததால், மருத்துவரின் அறிவுரைப்படி அஷித்ரோமைசின் 500 மி.கி. மாத்திரையை பாதி அளவே எடுத்துக்கொண்டேன். அதோடு ஒமேபிரசோல் 20 மி.கி. (Omeprazol), துத்தநாக சல்பேட் (Zink sulphate) மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொழுது எல்லாம் வழங்கப்படும் சிவப்பு நிற - பல்வகை வைட்டமின்
(Multi vitamin tablet) ஆகிய மாத்திரைகளை காலையில் உணவு உண்ட பின்பு எடுத்துக்கொண்டோம்.

முதல் நாள் இரவு புது இடம் மற்றும் சில பிரச்சனைகளால் சரியாக தூங்கவில்லை. 2.30 மணி நேரம் மட்டுமே தூங்கினேன். அடுத்த நாள் பகலிலும் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கினேன். அன்று எனது அறையில் என்னுடன் இருந்த எனது நண்பருடன்(அங்க போனதுக்கு அப்புறம் தாங்க நண்பர் ஆனார்), மேலும் இருவர் வந்து சேர்ந்தனர்.

அந்த நாள் இரவு நன்றாக தூங்க வேண்டும் என்று எண்ணி விரைவாகவே தூங்க சென்றேன். இரவு ஒரு மணி வாக்கில் எழுந்த பொழுது புதிதாக வந்த ஒருவர் சற்று சிரமத்துடன் அமர்ந்திருக்கவே, அவரிடம் ஏன் தூங்கவில்லை என்று கேட்க, அவரோ காய்ச்சல் அதிகமாக இருக்கிறது, அதனால் தூக்கம் வரவில்லை என்று சொல்லிவிட்டு அப்படியே அமர்ந்திருந்தார். "நீங்கள் கீழே சென்று செவிலியரிடம் சொல்ல வேண்டியது தானே", என்று கேட்டுவிட்டு, கீழே செவிலியரிடம் சென்று சொல்ல அவர், இன்னொருவரிடம் மாத்திரை கொடுத்து அனுப்பினார். அதை விழுங்கிவிட்டு அவர் உறங்கிப் போனார். எனக்கு மட்டும் ஏனோ உறக்கம் வர மறுத்தது.

கொரோனோ கவனிப்பு மையங்களில் இருப்பவர்கள், தங்களுக்கு இருக்கும் தொந்தரவுகளை செவிலியரிடமோ அல்லது மருத்தவரிடமோ சரியாக சொல்லி மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டும். பிறரின் உதவிக்காக முடிந்தவரை காத்திருக்க வேண்டாம். சென்று சொன்னால் தானே அவர்களுக்கு தெரியும்...!!!

காய்ச்சல் போன்ற எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் அந்த மையத்திற்கு சென்ற எனக்கு 3 நாட்களுக்கு பிறகு இருமல் அதிகம் ஆனதற்கு மேலே சொன்ன எனது அறை நண்பர் காரணமாக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு வர ஆரம்பித்தது. அந்த சந்தேகத்தை மருத்துவரிடம் கேட்ட பொழுது, "உங்களுக்கும் கொரோனா தொற்று இருக்கிறது தானே? அப்புறம் என்ன?" என்றார். எது சரி? என்னுடைய சந்தேகமா, அல்லது அவரது விடையா, என்பது எனக்கு இப்பொழுது வரை தெரியவில்லை..!!!

கொரோனோ மையங்கள் சரியாக பராமரிக்கப் படுகின்றனவா ? என்ற கேள்வி இங்கே பலருக்கு இருக்கும். அதற்கான விடையை மையத்தில் நடந்த நிகழ்வுகளை வைத்தே முடிவு செய்து கொள்ளுங்கள். 2ஆம் நாள் இரவு எங்கள் அறைகளில் வந்து நலம் விசாரித்த மருத்துவர், இறுதியாக மருத்தவத்துறையில் பணியாற்றிய நண்பர் ஒருவரையும், என்னையும் அழைத்து, கை கழுவும் இடம் மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும், அந்த இடத்தை மேலும் யாரும் அசுத்தப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். நாங்கள் சொன்னால் மற்றவர்கள் கேட்பார்களா, என்ற சந்தேகம் எனக்குள் வரவே, அனைவரையும் வெளியில் வர சொல்லி, அனைவரிடமும் அவரையே சொல்ல சொன்னேன். அப்பொழுது அவர், நீங்கள் அப்படி அசுத்தப்படுத்துவதால், சுத்தப்படுத்துவதற்கு வந்திருக்கிற மாணவர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். எங்களுக்கு கொரோனோ பரவாது என்பது தெரியும். ஆனால் அவர்கள் மனதில் சிறு பயம் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களும் வேலைக்கு வரவில்லை என்றால், நமது நிலைமை மிகவும் மோசமாகும் என்று சொன்னார். ஒரு சிலர் அங்கே புகைப் பிடிக்கிறார்கள் என்ற புகாருக்கும் அவர் கொஞ்சம் கடினமான எச்சரிக்கை கொடுத்துவிட்டே சென்றார்.

அவர் அவ்வளவு சொல்லி விட்டு சென்றும், மீதமான காய்கறிகளை கை கழுவும் இடத்தில் போட்டு மிக மோசமாக அசுத்தம் செய்திருந்தார் முகம் தெரியாத அன்பர் ஒருவர். குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கிறார் இன்னொருவர். புகைப்பிடித்த ஒருவரிடம், ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றதற்கு, அவருக்கு புகைப்பிடித்தால் தான் வெளியில் செல்ல வேண்டியது வெளியே செல்லுமாம். நல்ல வேளையாக அவர் புகைப்பிடித்து, யாரையும் இந்த உலகத்தை விட்டு வெளியே செல்ல சொல்லவில்லை.

நாம் புதிதாக ஒரு உறவினர் வீட்டிற்கு சென்றால், மேலே சொன்ன மூன்றில் எதையாவது செய்வோமா? நமக்கு கொடுத்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது நம்முடைய கடமை இல்லையா? கடைசி வரை எங்களால் அந்த கை கழுவும் இடத்தை உபயோகப்படுத்தவே முடியவில்லை. உடல்நிலை சரியில்லாத நேரத்திலும், தண்ணீர் எங்கள் மேல் விழுந்தாலும் பரவாயில்லை என்று, குளிக்கும் இடத்திலே பாத்திரங்களையும், கைகளையும் கழுவிக்கொண்டோம். ஆகவே மக்களே, தயவுசெய்து சுத்தமாக இருக்கிற இடத்தை தயவு செய்து அசுத்தப்படுத்தாதீர்கள். சுத்தமான இடத்தை அசுத்தப்படுத்துவது எளிது. அசுத்தமான இடத்தை சுத்தப்படுத்துவது கடினம்...!!!


முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு என்னால் சரியாக உணவு உண்ண முடியவில்லை. என்னுடன் இருந்த நண்பர், நீங்கள் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்றால் வேறு ஏதேனும் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால், யாரையேனும் பழங்கள் போன்ற சத்தான பொருட்களை வாங்கி வந்து கொடுக்க சொல்லுங்கள் என்று அறிவுரை சொன்னார். அதைப்போலவே என்னுடைய வீட்டில் இருந்து சில பொருட்களை வாங்கி வந்து கொடுத்து சென்றனர். அதன் பிறகு எனது உடல்நிலை சற்று தேறியது. இது போன்ற வாய்ப்பு இருக்கின்ற மையங்களில், தேவையிருப்பின், தேவையான பொருட்களை வெளியில் இருந்து வர வைத்து உண்ணலாம். வெளியில் இருந்து வருபவர்கள், தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் மையத்தின் நுழைவு வாயிலில் பொருட்களை வைத்து செல்வது நல்லது...!!!


நான் இருந்த மையத்தில் காலையில் கபசுரக்குடிநீர், டீ, சிற்றுண்டி கொடுப்பார்கள். 11 மணி அளவில் எலுமிச்சை பழச்சாறும், மதியம் மதிய உணவும், மாலையில் சுண்டல்/கொள்ளு/பஜ்ஜி உடன் சுக்கு காபி'யும், இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் மற்றும் பால் கொடுப்பார்கள். நாங்கள் சேர்ந்த மறுநாள் நிறைய பேர் அந்த மையத்தில் சேர்ந்தார்கள். அன்றிலிருந்து பால் மற்றும் சில பொருட்கள் பலருக்கு கிடைக்காமல் போனது. அதனால் அந்த பொருட்கள் வருவதற்கு 30 நிமிடம் முன்னதாகவே வந்து காத்திருந்து வாங்கி செல்கின்ற மனநிலைக்கு பலர் வந்து விட்டனர்.

"இந்த நிலை மாற வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்" என்று போராட கிளம்பிய பக்கத்து அறை நண்பர்கள் என்னையும் அழைக்கவே, அவர்களுடன் நானும் சென்றேன். இந்த பிரச்சனையை சொல்ல முயன்ற பொழுது, பிரச்சனையைக் கேட்காமல், யார் அதை சொல்கிறார்கள் என்று கேட்டனர், புதிதாக வந்த மருத்துவரும், அவரது குழுவும். பின்னர் அவர்கள் இருந்த இடத்திற்கு சற்று அருகில் சென்று சொன்ன பொழுதும் கூட, "அதை சரி செய்கிறோம்" என்ற வார்த்தை வராததால், கோபமான நண்பர்கள், மருத்துவர் மற்றும் அவரது குழு இருந்த இடத்தத்திற்கு மிக அருகில் சென்று அவர்களை பயமுறுத்தி தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முயன்றனர்.

அது தவறு என எனக்கு தோன்றியதால், நான் சற்று தள்ளியே இருந்தேன். இருந்தும் பிரச்சனை தீர்வதாய் இல்லாததால், நான் அங்கு சென்று அனைவரிடமும் இது தவறு, தள்ளி இருந்து அவர்களிடம் பேசுங்கள் என்று சொல்லி, அவர்களை அப்புறப்படுத்தி விட்டு வந்தேன்.

இந்த பிரச்சனை மாவட்ட அளவிற்கு செல்லவே, அங்கிருந்து ஒரு அதிகாரி மையத்திற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் பிரச்சனைகளை அனைவரும் சொன்னோம். அவரும் அவற்றை முடிந்த அளவு சரிசெய்வதாக உறுதி அளித்தார். இந்த உறுதியை மட்டும் தானே நாங்களும் எதிர்பார்த்தோம்.

மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, எனக்கு தோன்றியதை அங்கு சொல்ல வேண்டும் என நினைத்து, நான் இப்படி சொன்னேன். "நாங்கள் எங்கள் பிரச்சனைகளை உங்களிடம் சொல்வதால், பிரச்சனைகள் மட்டும் தான் இங்கு இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. இங்கு நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எங்களை தினமும் இரண்டு வேளை பரிசோதித்து நல்ல முறையில் பார்த்துக் கொள்கிற, நல்ல முறையில் ஏற்பாடுகள் செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி".

நோய் வந்த நாங்களே, அங்கு இருக்க தயங்குகிற பொழுது, எங்களை விட அதிக நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து, அந்த கடினமான உடை அணிந்து, நோய் தொற்றும் என்ற பயம் களைந்து, அங்கு பணிபுரிபவர்களுக்கு அந்த நன்றியை மட்டும் தான் என்னால் சொல்ல முடிந்தது. நன்றிகள் பல உங்களுக்கு, முகங்களை கூட காட்ட முடியாத தேவர்களே, தேவதைகளே...!!!

8 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனோ தொற்று இல்லை என வரவே, நான் வீட்டுக்கு வந்து தனிமைப்படுத்திக் கொண்டேன். தற்பொழுது நல்ல உடல் நிலையில் உள்ளேன். உடற்சோர்வைத் தவிர, பிற இன்னல்கள் எதுவும் இல்லை. "கொரோனோ தொற்று" என்பது செய்தி ஊடகங்கள் சொல்கின்ற அளவு கொடுமையானதும் அல்ல. சாதாரண காய்ச்சல் அளவு சாதாரணமானதும் அல்ல.

ஏற்கனவே பிற நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பணியை சரியாக செய்யும் அனைவரும் தான் நாயகர்கள். நாயகர்கள் என்று சொல்லி சட்டத்தை மீறுபவர்கள் நாயகர்கள் அல்ல....!!!

நன்றி...

எழுதியவர் : மதன்குமார் (30-Jul-20, 11:42 pm)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 168

சிறந்த கட்டுரைகள்

மேலே