பெண்கள் பெருமை
கடவுளரும் பெண் மாயையினை விட்டவர்களில்லை. அவர்கள் தம்முடனேயே, தம் உடலுடனேயே தத்தம் நாயகியரைக் கொண்டு சுமக்கின்றனர். இப்படிக் கடைமொழி மாற்றாகச் செய்த செய்யுள் இது. உலகு உண்டு உமிழ்ந்த தாமரைக் கண்ணோன் என்பதை முதலிற் கொண்டு பொருத்திப் பொருள் காண வேண்டும்.
நேரிசை வெண்பா
இந்திரையை மார்பி(ல்)வைத்தான் ஈசன் உமையையிடத்
தந்தி பகலமைத்தான் அம்புயத்தோன் - கந்தமிகு
வெண்டா மரைமயிலை வேண்டிவைத்தா னாவிலுல
குண்டுமிழ்ந்த தாமரைக்கண் னோன். 166
- கவி காளமேகம்
பொருளுரை:
“உலகினை எடுத்து விழுங்கி மீளவும் உமிழ்ந்த செந்தாமரைக் கண்ணனான திருமால், இந்திரையாகிய திருமகளைத் தன் மார்பிடத்தே வைத்துக் கொண்டான். ஈசனான சிவபிரானோ, உமையைத் தன் இடப்பாகத்திலேயே இரவு பகலாகக் கொண்டிருக்கின்றான். தாமரை வாசனாகிய பிரம தேவனோ, வெண்டாமரையிலே வீற்றிருப்பவளாகிய கலைவாணியைத் தன் நாவிலேயே கொண்டிருக்கிறான்.
“முத் தேவர்களின் நிலையே இப்படியானால், மனிதர்கள் பெண்களைப் போற்றுவதும், அவரைத் தாம் அடையுமாறு காமுற்றுத் திரிவதும் தவறாகுமோ?" இவ்வாறு, ஆண்களின் காமநோய்க்கு ஒரு சமாதானமும் கூறுகிறார் கவிஞர்.

