தாயின் ஓலம்

 

பெத்த மனம் தூங்கலையே
பிள்ளை மனம் ஏங்கலையே

பார்த்துப் பல நாளாச்சு
பங்குனியும் பிறந்தாச்சு

வந்து கூப்பிடுவானு
வாசல் வந்து நின்னாச்சு

விக்கல் வந்தாலும் நீ தான்
நினைக்கிறனு
வெசனத்த மறந்து
பித்துக்கொள்ளும் தாய்மையடா

தாய்ப்பால் அதிகம் சுரக்குமுனு
பத்தியம் பல  இருந்தேன்

கசக்கும் வைத்தியத்தை
கற்கண்டாய் நான் சுவைச்சேன்

பேச்சு வரலையினு
மண்சோறு சாப்புட்டேன் டா

காத்து கருப்பு தீண்டும்னு அப்பா
கருப்பசாமிக்கு நேந்துகிட்டார்

பள்ளிக்கூடம் போக
காலு வலிக்கும்னு
அப்பா பத்துக்காதம்
தொலவுத் தூக்கி வருவார்

மண்ணுக்குள்ள போகும் முன்னே
என் மகராசா வந்துடுடா

சீக்கிரம் வந்தாக்கா
உன்னத் தொட்டு உச்சி முகந்துடுவேன்

பார்த்துப் பல நாளாச்சு
பார்வையில் பூ விழுந்துடுச்சு

தேகம் சுருங்கிடுச்சு
தாகம் அடங்கிடுச்சு

பேச்சுக் குறைஞ்சிடுச்சு
நடையோ தளர்ந்திடுச்சு

சீக்கிரம் வந்துடா
சீமையாளும் என் மவனே

சொத்து சுகம் தேவையில்ல
என்று  நாங்க நினைச்சோம்

சொத்தாய் நீயிருக்க
சொத்தெல்லாம் வித்துபுட்டோம்

காடு கழனி எல்லாம்
கடனுக்கு கொடுத்து புட்டோம்

நீ படிச்சாப் போதுமுனு
எல்லாத்தையும்  இழந்தோம்

சீமை வேலை போகனுமுனு
நீ தான் ஆசைப்பட்ட

படிச்சப் புள்ளையாச்சேனு
பாவிமகள் தடுக்கலயே

காலங்கள் போனப் பின்னே
கடுதாசி வந்தது
கல்யாணம் பண்ணி ரெண்டு
குழந்தை இருக்குனு

திகைச்சு நின்னேன் செய்வது அறியாம
அக்கம் பக்கம் எல்லாரும்
ஆளுக்கு ஒன்னு சொன்னாங்க

அப்பா ஆத்தா நாங்க அழுதும்
தீர்த்தோம் டா
அப்பாக்கு சேவை செய்ய அம்மாக்கு
தெம்பு இல்ல

அதனால தான் போகிறோம்
முதியோர் இல்லம்

பெத்த புள்ள சொந்தம் இல்ல
எங்கப் பேருல பணமும் இல்ல
எதுவுமே எங்களுக்கில்ல
அதனால் இழந்தேன் அப்பாவ மெல்ல

அப்பா இழவுக்கு
வருவேனு காத்திருக்கல
மகனா நான் செஞ்சேன்
என்  ஆசை மச்சானுக்கு

காலதாமதாய்
கணினியில் இரங்கல் செய்தி
வந்ததுடா
எங்களுக்கு படிக்கத் தெரியாதுனு
பாவம் மறந்திட்ட

சீக்கிரம் வந்துடுடா
சீமையாளும் என் மவனே

என் உசுறுப் போகும் முன்னே
உன்னப் பார்த்துடனும்

உசுறுப் போனாக்கா
என் முந்தானை அவித்துப் பாரு
ரூபா மூவாயிரம் இருக்கும்

இழவுச் செலவுக்கு அண்ணாச்சியிடம்
ஏழு நூறு கொடுத்து இருக்கேன்

மறந்து விடாம
பணத்தை வாங்கிகடா
மறக்காம என் மவனே
மறு விசாய கிழமை வந்துடுடா

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (8-Aug-20, 5:30 pm)
Tanglish : thaayin olam
பார்வை : 215

மேலே