எது கவிதை

எது கவிதை?
***************

எழுதியவை எல்லாம் கவிதையா?
என எண்ணிய வேளையில்
என்னிடம் பேசியது
என் எழுதுகோல்

உள்ளத்தில் உறையும் உணர்வை
ஊற்றாய் உரைப்பது கவிதையா?
நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை
நிரல்படக் கோர்ப்பது கவிதையா?

வலிகளுக்கு அருமருந்தாய்
மனதை வருடுவது கவிதையா?
வரலாற்றின் பழம்பெரும் உண்மையை
அழியாமல் வடிவமைப்பது கவிதையா?

இயற்கையின் கொடையை
இனிமையாய் இயம்புவது கவிதையா?
காதலின் கவிரசத்தைக் காய்ச்சி
பருகுவது கவிதையா?

எது கவிதை?
என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம்

கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம்
கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம்
விதையை விதைத்திடும் கவிதை
விடைபெறா உலகின் நடைப்பாதை

எது கவிதை?
எழுதும் அனைத்தும் கவிதையல்ல
இதை ஆராய்ந்து உணர்ந்தால் தவறுமல்ல

காட்சியின் வழியே ஓவியம் பேசும்
கவிதையின் வழியே மானுடம் பேசும்
கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும்
கற்பனையே கவிதை அல்லவே

விழுமியம் தானே நம் பண்பாடு
விழித்தெழுவோம் புத்துணர்வோடு
கவிதையை ஆய்வோம் நடுநிலையோடு
விமர்சனம் தானே வெற்றியின் வெளிப்பாடு

#சரவிபி_ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (17-Aug-20, 8:31 pm)
Tanglish : ethu kavithai
பார்வை : 268

மேலே