அன்பே மதமாய் துதிக்கப்படி
அன்பே மதமாக துதிக்கப்படி
அனைத்து மதமும் சமமென்றே மதிக்கப்படி
ஆசானை வணங்கி ஆயகலைகள் படி
ஆத்ம ஞானத்தையும் அதனுடன் படி
இதயம் நேசிக்கும் தொழிலைப்படி
இடைவிடா முயற்சியுடன் உழைக்கப்படி
ஈரடியை பொதுமறையாய் விளங்கப்படி
ஈற்றுவரை அதன்வழி துறவாதுப் படி
உண்மையின் மேன்மையை உகந்துப்படி
உயிர்த்தமிழ் மொழிவழி உணர்ந்துப்படி
ஊருடன் இயைந்து பழகப்படி
ஊற்றென ஆற்றலில் ஒழுகப்படி
எட்டுதிக்கும் பயணித்து அனுபவம் படி
எக்கனமும் அயராது முயன்றுப் படி
ஏடுகள் திரட்டி மாற்றம் வரப்படி
ஏர்பிடித்து ஏற்றம் பெறப்படி
ஐயம் விலகிட ஆய்ந்துப்படி
ஐம்புலன் அடக்கிட ஆன்மீகம்படி
ஒறுத்தாரை மனதார மன்னிக்கப்படி
ஒன்றே குலம் என்று ஓதிடப்படி
ஓடும்காலத்துடன் ஓட்டமிடப் படி
ஓய்வறியா சூரியனாய் ஒளிரப்படி
ஔவியம் ஒழித்து ஆக்கமுறப் படி
ஔவை மூதுரையை ஆழ்ந்துப் படி

