நட்ட கல்லும் பேசுமோ 11 முழுகனும் வந்திக் காகத்தியும்
பவுர்ணமி நிலவில் பாலாறு கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. கரையோர புற்கள் மெல்லிய காற்றின் அசைவிற்கு ஒத்திசைவுடன் தலையாட்ட ஒரு கோடி நிலவுகள் தரையிறங்கியது போலத் தோன்றியது. அன்னையின் தாலாட்டாக ஆற்றின் சலசலப்பு கேட்க அரைமனதுடன் துயில் கலைந்து கண் விழித்துப் பார்த்த கூடடைந்த பறவைகள் ரகசியமாக ஏங்கித் தவித்து மீண்டும் கண் அயர நீண்ட நேரம் ஆனது. சிறிது தூரத்தில் இருந்த பெருமாள் கோயிலின் கோபுரத்திலிருந்து வழிந்திறங்கிய நிலவொளி நடை சாற்றிய கோயில் பிரகாரத்தை மேலும் பிரகாசமாக்கியது. அம்மலூர் கிராம முதியோர்கள் திண்ணையில் அமர்ந்து கொண்டு தங்களின் பேரக் குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளில் ஏழு கடல் ஏழு மலை தாண்டி பல இளவரசர்களும், தாமரைப் பூவில் வாழும் இளவரசிகளும் குழந்தைகளுடன் ரகசியமாக வந்தமர்ந்து அவர்களின் கதையைக் கேட்க மிகவும் ஆவலாய் காத்திருந்தார்கள்.
“நான் ஒரு கதை சொல்லப்போகிறேன். இருவரும் என் அருகில் வாருங்கள்”
இருவரும் ஓடி வந்து கோவனின் மடியின் மீது தலைவைத்து ஏக்கமாக அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“உங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த கதை. நீங்கள் இரண்டு பேரும் சரியென்று தலையாட்டினால்தான் சொல்லுவேன்”.
முதலில் முழுகன்தான் தயக்கத்துடன் தலையை ஆட்டினான். அவனைத் தொடர்ந்து வந்திக்காகத்தியும் வேகமாக தலையாட்ட கோவன் தன் கதையைத் தொடர்ந்தான்.
“ஒரு சமயம் தேவர்களின் சபை இந்திரனின் தலைமையில் கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்திருந்த இந்திரன் சபைக்கு வந்திருந்த தேவர்களைக் காண்பதும் ஒரு சிலரிடம் அறிமுகப் புன்னகை செய்வதுமாக இருந்தான். அவர்களின் பேச்சு முதலில் தேவலோகத்தைப் பற்றியதாக இருந்தது. அதற்கடுத்து வழக்கம் போல நாரதர் குறித்து சில தேவர்கள் நேரடியாகக் குறைபட்டுக்கொண்டார்கள். கடைசியாக அவர்களின் பேச்சு பூலோகத்தில் வாழும் மனிதர்களைப் பற்றித் திரும்பியது. அப்போது இந்திரன் பூலோகத்தில் கிருஷ்ணதேவன் என்ற ஒரு அரசன் இருப்பதாகவும் அவனைப் போல மிகவும் நல்ல குணத்தையும் அளப்பறிய இரக்க சிந்தை உள்ளவனைப்போல நீங்கள் எவரும் இதுநாள் வரை சந்தித்திருக்கமாட்டீர்கள் என்று குழுமியிருந்த தேவர்களிடம் கூறினான். அப்போது ஒருவன் இந்திரனை நோக்கிக் குரல் எழுப்பினான்”
கதையை இப்போது தொடரவா வேண்டாமா?
முழுகனும் வந்திக்காகத்தியும் ஆர்வத்துடன் தலையை ஆட்டினார்கள்.
எங்கே கதையை விட்டேன்? ஆங்.. “அப்போது ஒருவன் குரல் எழுப்பி தேவர்களே அனைத்து அண்டங்களையும் ஆள்பவர்கள். அவர்களே மிகச் சிறந்தவர்கள். கேவலம் ஒரு மானிடப்பிறவியை பற்றி இந்த அளவிற்கு உயர்வாகக் கூறும் உயர்ந்த குலத்தில் பிறந்த இந்திரனின் பேச்சு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்றான். பிறகு அவன் தான் இப்போதே பூலோகம் சென்று அவனிடம் உள்ள குறைகளை எடுத்துக்காட்டுகிறன் என்று இந்திரனிடம் சவால் விட்டு பூலோகத்திற்கு விரைந்தான்.
அரசனான கிருஷ்ண தேவன் வரும் வழியில் தேவலோகத்திலிருந்து வந்தவன் ஓர் இறந்த நாயின் வடிவத்தில் விழுந்து கிடந்தான். அந்த நாயின் உடலில் இருந்து சகிக்கவே இயலாத துர்நாற்றம் வீசியது. அதன் வாய்ப்பகுதியும் கிழிந்து அவலட்சணமாகக் காணப்பட்டது. அந்த நாயைக் கண்ட எவரும் அருவருப்புடன் அதைத் தாண்டி விரைவாக நிச்சயம் சென்றுவிடுவார்கள்,
முழுகனும் வந்திக் காகத்தியும் கோவனின் மடியில் தலையை வைத்துக்கொண்டு சோகமே வடிவாக அவனையே ஏக்கமாகப் பார்த்தார்கள். அருவருப்புடன் அதைத் தாண்டி விரைவாக சென்றுவிடுவார்கள் என்று சொன்னேன் இல்லையா? ஆமாம் என்பது போல இருவரும் தலையை ஆட்டினார்கள். கோவன் கதையைத் தொடர்ந்தான்.
“அரசர் கிருஷ்ணதேவனின் கண்ணோட்டம் வேறு விதமாக இருந்தது. அவர் நாயின் அழுகிய உடலைப் பற்றியோ இல்லை அதிலிருந்து வீசிய துர்நாற்றத்தைப் பற்றியோ துளியும் சிந்திக்காமல் “ஆகா, இந்த நாயின் பற்களின் வரிசை எவ்வளவு அழகாக முத்துக்களைப் போல பிரகாசிக்கின்றன என்று வாய்விட்டுக் கூறி வியப்பிலாழ்ந்தான்.
சாலையோரம் இருக்கும் துர்நாற்றத்துடன் அருவருப்பான ஒரு உயிரினத்திடம் கூட இருக்கும் தனிப்பட்ட கருணைப் பார்வைதான் மன்னனின் சிறப்பிற்குக் காரணம் என்பதை உணர்ந்த தேவன் சுய உரு பெற்று அரசனின் முன்பு நின்று “மன்னா! உண்மையிலேயே உங்களிடம் குணத்தை மட்டுமே நாடும் தன்மையும், நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பும் இருக்கிறது. இந்த உலகத்தில் தங்களைப் போன்ற குணவான்களே சுகமாக வாழ்வார்கள்” என்று கூறி அவரை ஆசீர்வதித்து தேவலோகம் சென்றான்.
கதை பிடிச்சிருக்கா? கோவன் ஆர்வத்துடன் முழுகனும் வந்திக் காகத்தியிடம் கேட்க இரண்டும் தலையாட்டிக்கொண்டே கோவனின் மேல் பாய்ந்து கட்டிப்பிடிப்பதும் நக்கிக்கொடுப்பதுமாக தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
அன்று இரவு எதிர்பாராமல் தொடங்கிய மழை சிறிது நேரம் அடர்ந்து பொழிவதும் பிறகு தணிவதுமாக இருந்தது. திண்ணையிலிருந்து வந்திக்காகத்தி வித்தியாசமாக குரல் எழுப்பியதைக் கேட்ட கோவன் வெளியே வந்து பார்த்தான். திண்ணைக்கு அருகில் ஊர்ந்து சென்ற ஒரு நாகம் வந்திக்காகத்தியைப் பார்த்து படம் எடுத்து ஆடியது. இருவருக்குமான இடைவெளி தூரம் ஐந்தடிக்குள்தான் இருக்கும். இதைப் பார்த்த கோவன் சற்றே நிலை தடுமாறினாலும் அசையாது அப்படியே நின்றான். வந்திக்காகத்தி நாகத்தின் மேல் பாய்ந்தது. இதையறிந்த முழுகனும் வேகமாக ஓடி வந்து அவனுடன் சேர்ந்துகொண்டு நாகத்தைத் தாக்கியது. இந்த இருமுனைத் தாக்குதலுக்கு துளியும் தாக்குப்பிடிக்க முடியாத நாகம் அருகில் இருக்கும் புதரின் பக்கம் ஓடி மறைந்துகொண்டது. நாகம் வெளியே வரும் வரை இருவரும் மிகவும் பொருமையாகக் காத்திருந்தார்கள். நாகத்தின் வால் பகுதி வெளியே தெரிய முழுகன் அதை மிகவும் லாவகமாக வாயில் கவ்விக்கொண்டு நாகத்தை முழுவது வெளியே இழுத்துப்போட வந்திக்காகத்தி அதன் கழுத்தை கவ்விக்கொண்டு முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி கால்களின் போட்டு மிதித்து மீண்டும் முன்பை விட வேகமாக வாயில் அழுத்திப் பிடித்து உதறியது. தளர்ந்து துவண்ட நாகம் வந்திக்காகத்தியின் வாயில் உயிரற்ற கயிறு போலத் தொங்கியது. அதை கீழே உதரிப்போட்டுவிட்டு அருகில் குவித்து வைத்திருக்கும் மணல் மேட்டில் ஒருவர் மேல் ஒருவர் தாவி விழுந்து புரண்டு விளையாடினார்கள். இருவரையும் கோவன் உணவருந்த அழைக்க குழந்தைகளின் துள்ளளுடன் இருவரும் திண்ணையில் வந்தமர்ந்தார்கள்.
அப்போது மழையில் நனைந்துகொண்டே தெக்குப்பட்டிலிருந்து கோவனின் உறவுக்காரப் பையன் வந்துகொண்டிருந்தான். மழையில் முழுவதும் தொப்பலாக நனைந்து திண்ணைக்கு அருகில் இருக்கும் படியில் நீண்ட நேரம் நின்றவனின் உடையிலிருந்து நின்றுபோன மழை மீண்டும் தொடர்ந்தது.
“மாமா, வயக்காட்டிலே காட்டுப்பன்னிகளோட அட்டகாசம் தாங்கலை. அறுவடைக்குத் தயாராயிருந்த கடலைச் செடியை பாதிக்கு மேல வெளியே இழுத்துப்போட்டு நாசம் பன்னுது. ரெண்டு நாளைக்கு வந்திக்காகத்தியை ஊருக்குக் கூட்டிக்கிட்டு போகத்தான் வந்தேன்? என்றான்
அதற்கு பதில் ஏதும் கூறாமல் வந்திக்காகத்தியின் அருகில் வந்தமர்ந்தான் கோவன். சுருண்டு படுத்திருந்த அதன் கழுத்திலிருந்து துளிர்த்து வடிந்த குருதியை முழுகன் நக்கிக்கொடுப்பதைப் பார்த்தவன் அதன் கழுத்து ரோமங்களை விலக்கிப்பார்க்க பாம்பு கடித்த தடம் போல கரும்புள்ளிகள் இருந்தது. உடனே அவனை அப்படியே அள்ளிக்கொண்டு வேகமாக மருத்துவரைப் பார்க்க ஓடினான். முழுகனும் அவனைப் பின் தொடர்ந்தான்.
அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நினைவு திரும்பிய வந்திக்காகத்தி கண்களைத் திறந்து கோவனின் கைகளை வாஞ்சையுடன் நக்கிக்கொடுக்க அவன் தன் நிலை மறந்து இறுக அணைத்துக்கொண்டான்.
அடுத்த நாள் கிராமப் பஞ்சாயத்து கூட்டம் ஏற்பாடாயிருந்தது. அம்மலூர் மக்களுடன் அடுத்து இருக்கும் கிராமத்திலிருந்தும் மக்கள் வந்திருந்தார்கள். பல குழுக்களாக அமர்ந்து கொண்டு அனைவரும் ஒரே விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு சில வாரங்களாக காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. அவைகள் கூட்டம் கூட்டமாக வந்து விளைந்த பயிர்களை நாசம் செய்வது மட்டுமில்லாமல் கொட்டிலில் கட்டி வைத்திருக்கும் கால் நடைகளையும் தாக்கியது. கிராமத் தலைவர் தெருவிற்கு இரண்டு இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து இரவு முழுவதும் காவல் காக்க வேண்டும் என்று கூற கிராமத்து இளசுகள் வேகமாக தங்களின் பேர்களை பதிவு செய்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு கோவனும் வந்திருந்தான். அவனுடைய பெயருடன் தன் செல்லப்பிராணியான வந்தைக்காகத்தி மற்றும் முழுகனின் பெயரையும் எழுதினான். இதைக் கவனித்த கிராமத் தலைவர் கோவனின் முதுகைத் தட்டிக்கொடுத்தபடியே அவனைக் கடந்து போனார்.
அன்று இரவு மொத்தமாக அனைத்து இளைஞர்கள் ஊர்த் திடலில் ஒன்றாகக் கூட பிறகு சிறிய குழுக்களாக பல திசைகளுக்குச் சென்றார்கள். கோவனுடன் வந்த வந்திக்காகத்தியும் முழுகனும் வடக்குத் திசையில் இருக்கும் நாயக்கர் தோட்டத்தில் காவலிற்குச் சென்றார்கள். இரண்டு நாட்கள் இரவுப் பொழுது அமைதியாகக் கழிந்தது. அடுத்த நாள் பௌர்ணமி கழிந்து எட்டாவது நாள். கோவனிற்கு இரவு நீண்டு கொண்டே போனது போலத் தெரிந்தது. தூரத்தே கேட்ட சலசலப்பு அவர்களை நெருங்கி வருவதையுணர்ந்த கோவன் முனை சீவிய மூங்கிலை எடுத்துக்கொண்டு அரவமில்லாமல் முன்னேறினான். இரண்டு காட்டுப்பன்றிகள் மெலிதாக உறுமுவதும், விளைந்த பயிர்களை கிளர்த்திப் போடுவதுமாக இருந்தது. தன் கையில் வைத்திருக்கும் மூங்கிலை வேகமாக பன்றிகளின் மேல் பாய்ச்ச அவைகள் நொடியில் சுதாரித்துக்கொண்டு கோவனை நோக்கி சீறிப்பாய்ந்தது. இதைக் கவனித்த முழகனும், வந்திக்காகத்தியும் பன்றிகளின் மேல் பாய்ந்து அதன் தொண்டையைக் கவ்வ, அவைகள் பலவீனமாகப் பிளிறியது. இதைக் கேட்ட மேலும் சில பன்றிகள் வந்திக்காகத்தியைத் தாக்கியது. பன்றிக் கூட்டங்களின் பேரிரைச்சலைக் கேட்ட கோவன் செய்வதறியாமல் நிலைகுலைந்து செயலற்று அப்படியே உரைந்து போனான். சிறிது நேரத்தில் மரணத்தை ஒத்த பெரும் அமைதி சூழ்ந்தது. இடையிடையே சிறிய முனகலைக் கேட்ட கோவன் விரைந்து சென்று அங்கே பார்த்தான். மரணத்தின் விளிம்பில் எஜமானனை பார்த்த திருப்தியில் இருவரும் பலவீனமாக வாலை ஆட்டிக்கொண்டே கோவனின் கையை நக்கிக் கொடுத்தார்கள். உணர்ச்சி மேலீட்டால் எழும்பிய கோவனின் பெருத்த அழுகுரல் அன்று இரவு மேகங்களை கிழித்துப் போட்டு பெருமழையை பொழிய வைத்தது.
அம்மலூரின் அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து மக்கள் கோவனின் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தார்கள். கட்டிலில் கிடத்தி வைத்திருந்த முழுகன், கோவன் வந்திக்காகத்தியின் சிதைந்த உடலை அரவணைத்தபடி தலையைக் கவிழ்த்து அழுதுகொண்டிருந்தான். ஊர்ப்பெரியவர்கள் எவ்வளவு ஆறுதல் கூறியும் அவனை சமாதானப்படுத்த இயலவில்லை. அனைவரும் செய்வதறியாது குழம்பிய நேரத்தில் அங்கே வந்திருந்த ஒரு முதியவர் இறுதிச் சடங்குகளுக்கான வேலையை தானே இழுத்துப்போட்டுக்கொண்டு முன்னின்று செய்தார். ஒரு வழியாக கோவனின் தோட்டத்திலேயே இருவரையும் புதைக்க ஏற்பாடானது. அவர்களை புதைத்த பிறகு கோவன் அருகில் அமர்ந்துகொண்டு “நான் ஒரு கதை சொல்லப்போகிறேன். இருவரும் என் அருகில் வாருங்கள்” என்று அழுதுகொண்டே பிதற்ற கூடியிருந்தவர்கள் கண்களில் நீருடன் வாய்பொத்திக் கலைந்து போனார்கள்.
(அந்தக் காலத்தில் மக்கள் தம் சிறப்பு வினைக் கருதி அவர்தம் நினைவில் நடுகல் நிறுத்தியதைப் போலவே தாம் செல்லமாக வளர்த்த கிளி, கோழி, எருது, குதிரையை ஆகிய பறவைகள் விலங்குகள் முதலியவற்றுக்கும் நடுகல் எழுப்பியிள்ளார்கள். அவ்வழியே கோவனும் தான் உயிருனும் மேலாக நேசித்த வந்திக்காகத்திக்கும், முழுகனுக்கும் தன் தோட்டத்திலேயே நடுகல் நிறுவி வழிபட்டான்.)