வழக்கு ஒன்று

வழக்கு ஒன்று

புகை மண்டலமாக இருந்த அறையில் வாயில் சிகரெட்டுடன் இருந்த மாலினிக்கு கை கொஞ்சம் நடுங்குவதாக உணர்ந்தது. சே’ கைகளை சற்று உதறிக்கொண்டாள்.
எதிரில் உட்கார்ந்திருந்த கார்த்திகாவும், அகிலும் அவள் எதற்கு இந்த வார்த்தையை உதிர்த்தாள் என்று வியப்பாய் அவள் முகத்தை பார்த்தனர்.
அவர்களின் பார்வையை சட்டென புரிந்த மாலினி “ஓண்ணுமில்லை” கொஞ்ச நாளா கையில் நடுக்கம் தெரியுது.
கவலையாய் அவள் முகத்தை பார்த்தவர்கள் ‘மேடம் கொஞ்சம் ஸ்மோக்கை’ குறைச்சுக்குக்குங்க, அதனால கூட இருக்கலாம், தயங்கி தயங்கி சொன்னார்கள்.
உதட்டை சற்று ‘கோணியபடி’ அவர்கள் சொன்னதை அலட்சியமாய் ஒதுக்கியவள், அதை விடுங்க இப்ப நாம ‘ஸ்டோரி டிஸ்கசனுக்குள்ள போகலாம்”
மாலினியின் நடவடிக்கை ‘கார்த்திகாவுக்கு’ ஒவ்வாததாக இருந்தது. ‘கதை டிஸ்கசன் டிஸ்கசன்’ என்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. மாலினி ஊதிய சிகரெட்டை மட்டும் கணக்கிட்டால் இந்த மூன்று மாதங்களில் ‘ஐந்தாயிரம்’ வரைக்கும் செலவாயிருக்கும். இதை வாய் விட்டு சொல்ல முடியாது, கத்துவாள் “உனக்கென்ன மாசமானா சம்பளம் அழுகறனுல்லை” நீ வாயை மூடிகிட்டு உன் வேலையை மட்டும் பாரு”
இதுவரை மாலினியும்,அவளது கணவனும், சேர்ந்து வெளியிட்ட முதல் இரண்டு படங்கள் “ஓஹோ” என்று ஓடி இவர்களை ‘உச்சாணி’ கொம்பில் நிறுத்தியது. அதற்கு அடுத்த இரண்டு படங்கள் “பிளாப்” என்னும் பாதாளத்துக்கு சென்ற நிலைமைக்கு அடுத்த நிமிடத்தில் அவர்களை கடனாளியாக்கி இருந்தது.
மாலினியின் கணவன் சரவணனால் இந்த தோல்வியை தாங்க முடியவில்லை, ஒரு நாள் தன்னைத்தானே முடித்து கொண்டான்.
அதன் பின் அவன் விட்டு சென்றிருந்த மூன்றாவது படத்தை மாலினி தொடர்ந்து கொண்டு வர முயற்சியில் இறங்கினாள். இதற்காக உறவுப்பெண்ணான கார்த்திகாவையும், அகிலையும் வேலைக்கு வைத்து கொண்டாள்.
கார்த்திகாவும், அகிலும் தனித்தனியாக சினிமா உலகில் வேறு வேறு இயக்குநர்களின் கீழ் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள். இருவரையும் பணியில் சேர்க்கும் போதே அவள் தெளிவாக சொல்லி விட்டாள். என் வீட்டுக்காரர் தொடர்ந்து இரண்டு படம் தோல்வியினால மனம் உடைஞ்சு அந்த முடிவுக்கு போயிட்டாரு, அதனாலயே நான் ‘இந்த பீல்டுல’ ஒரு பெரிய வெற்றியை கொடுக்கணும்னு நினைக்கிறேன்.
ஏற்கனவே நிறைய கடன், அவர்களை பயமுறுத்தி கொண்டிருந்தது. கிட்டத்தட்ட எல்லா சொத்துக்களும் அடமானத்தில் இருந்தது.
மாலினியின் அப்பா வீட்டு தாத்தா வழி சொத்தாக ஊட்டியில் இருந்த எஸ்டேட், இவளது பெயரில் இருந்தது, பெற்றோர்களுக்கு தெரியாமல், அதை இப்பொழுது அடமானத்தில் வைத்து பணத்தை வாங்கியிருந்தாள்.
மாலினியின் கணவன் ‘சரவணனின்’ குடும்பம் கொஞ்சம் பெரியது, ஆனால் அவர்கள் கோயமுத்தூரில் ‘சின்னாம்பாளையம்’ என்னும் கிராமத்தில் பெரும் நில புலன்களுக்கு உரிமையாளர்களாக இருந்து கொண்டிருக்கிறார் கள். சரவனணனுடன் பிறந்த இரண்டு அண்ணன்மார்களும் சினிமா உலகம் பக்கம் எட்டி பார்க்காதவர்கள். நன்கு படித்திருந்தாலும் விவசாயம் தொழில் என்று அதில் கவனம் செலுத்தி கொண்டிருந்தார்கள். சரவணன் மட்டும் சினிமா வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தவன்.
சரவணனின் இந்த போக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவன் சென்னையில் கெளவரவமாக வாழ ‘மாதமாதம்’ பணம் அனுப்பி கொண்டுதான் இருந்தார்கள்.
சரவணன் முதல் படம் சொந்தமாக தயாரிக்க முயற்சித்த பொழுது பணம் கொடுக்க மறுத்து விட்டார்கள். அப்பொழுது இவனைப் போலவே சினிமாவுக்காக என்றே வந்த ‘மாலினியின்’ அறிமுகம் கிடைத்தது. அதற்கு முன்னரே அவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே அறிமுகம் இருந்ததால், பழகிய ஐந்தாறு மாதங்களிலேயே திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் இரு குடும்பத்தார்களுக்கும் இதில் விருப்பமில்லை. சினிமாவை விட்டு இருவரும் ஊருக்கு வந்தால் இரு குடும்பமும் சேர்ந்தே கல்யாணத்தை செய்து வைப்பதாக சொன்னார்கள். மாலினியின் குடும்பம், நல்ல வசதியுடன் இருந்தார்கள். ஊட்டியில் இருந்து மைசூரு போகும் வழியில் பெரும் பெரும் எஸ்டேட்டை சொந்தமாக நிர்வகித்து கொண்டிருந்தார்கள்.
மாலினியும், சரவணனனும், அதற்கு சம்மதிக்கவில்லை, நண்பர்கள் சூழ ஒரு கோயிலில் மாலை மாற்றி கொண்டார்கள். மலிலாப்பூரில் தனியாக வீடு எடுத்து தங்கினார்கள்.
இருவரும் தங்களது பெயரில் இருந்த சொத்துக்களை அடமானம் வைத்தும், நண்பர்களிடம் கடனையும் வாங்கி படம் தயாரித்தார்கள். அவர்கள் தயாரித்த படம், அதிர்ஷ்டவசமாக நன்றாக ஓடியது, அதனால் அவர்கள் அதில் கிடைத்த லாபத்தில் அடுத்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
சினிமா தயாரிப்புக்கு முற்பட்டு இப்பொழுது வரை இடைபட்ட ஏழு வருடங்களில் ‘மாலினி திருமணமான முதல் வருடத்தில்’ முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகளுக்கு தாயாராகியிருந்தாள்.
அப்படி பிள்ளை பெற்றும் மாலினிக்கும், சரவணனுக்கும் சினிமா ஆசை விட்டு விடவில்லை. இவர்களின் போக்கு தெரிந்து மாலினியின் பெற்றோர் தாங்கள் வளர்த்து கொள்வதாக இரு குழந்தைகளையும் எடுத்து சென்று விட்டனர்.
இது இருவருக்கும் இன்னும் வசதியாக போயிருந்தது. காலையில் சென்றால் இரவு வரைக்கும் சினிமா டிஸ்கசன், இப்படியாகவே பொழுதை போக்கி விட்டு வீடு வந்து தூங்கி மீண்டும் காலையில் ஓட ஆரம்பிப்பார்கள்.
இரண்டாவது படமும் நல்ல வெற்றியை கொடுக்க, இருவருக்கும் தெம்பாகி விட்டது. சுற்றி வர இவர்கள் வாங்கியிருந்த கடன்களை குறைத்தவர்கள் கொஞ்சம் ‘பெரிய பட்ஜெட்டில்’ அடுத்த படத்தை தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
அதற்குள் இருவரிடமுமே புகைபிடிப்பதும், மது அருந்துவதும் மெல்ல தொடங்கி பின் அதுவே வழக்கமுமாகியிருந்தது. ‘போதாதற்கு’ தொடர்ந்த இரு படங்களின் ‘வெற்றி’ அவர்களை இன்னும் கொஞ்சம் இந்த பழக்கத்திற்கு ஆழமாக்கி இருந்தது.
பெரும் செலவு செய்து ‘எட்டு மாதங்களில்’ தயாரித்து வெளி வந்த மூன்றாவது படம் இவர்களின் காலை வாரி விட்டு விட்டது. இந்த தோல்வி சரவணனுக்கும், மாலினிக்கும் பெரும் மானப்பிரச்சினையாகி விட்டது. அதே சூட்டோடு அடுத்த படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.
அடுத்து வந்த வருடத்தில் வெளிவந்த இந்த படமும் சுத்தமாக காலை வாரி விட இந்த தோல்வி சரவணனை மனமுடைய செய்து வாழ்க்கையின் முடிவுக்கு போக வைத்து விட்டது.
கோயமுத்தூரிலிருந்தும், ஊட்டியில் இருந்தும் வந்திருந்த சுற்றத்தார்கள், பெற்றோர்கள் எவ்வளவோ வற்புறுத்தி மாலினியை ஊருக்கே வர சொன்னார்கள். அவள் வெறி பிடித்தவள் போல் சரவணனின் பெயருக்காவது ஒரு வெற்றியை கொடுத்து விட்டு அதன் பிறகு பார்க்கலாம் என்று பிடிவாதமாய் இங்கேயே இருந்து விட்டாள்.
கிட்டத்தட்ட இரவு ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது, அப்பொழுதுதான் கார்த்திகாவையும், அகிலையும் வெளியே அனுப்பினாள் மாலினி, அதற்குள் அவள் முக்கால் போதையில் முழுகியிருந்தாள்.
ஒரு வழியாக ‘கதை இதுதான்’ இதில் சில ‘நகாசு’ வேலைகளை செய்து விட்டால், அதன் பின் விறு விறுவென வேலையை ஆரம்பிக்கலாம் என்று ஒரு திரைக்கதையை வடிவமைத்து முடிவு செய்திருந்தார்கள்.
மாலினியை கொண்டு போய் அவளது வீட்டில் விடவா? கேட்ட இருவரையும் முறைத்த மாலினி எனக்கு போக தெரியாதா? அவளின் கத்தலுக்கு இருவரும் பதில் சொல்லாமல் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட்டனர்.
மறு நாள் காலை பத்து மணி வரை சினிமா அலுவலகத்தில் காத்திருந்த கார்த்திகாவும், அகிலும், அவளுக்கு பலமுறை போன் செய்து பார்த்தும் எடுக்காததால் அவள் வீட்டிலேயே இன்னும் தூங்கி கொண்டிருக்கிறாளோ? என்னும் சந்தேகத்தில் அவளது வீட்டுக்கு வந்தனர். வீடு பூட்டி கிடந்தது.
எங்கு போனாள்? அக்கம் பக்கம் விசாரித்தனர், தினமும் காலையில் வீட்டுக்கு வந்து வீட்டை சுத்தம் செய்து பாத்திரங்கள் எல்லாவற்றையும் கழுவி வைத்து விட்டு செல்லும் பணிப்பெண், காலையில் வந்து வீடு பூட்டியிருப்பதை பார்த்து விட்டு திரும்பி சென்றதாக அக்கம் பக்கத்தார் சொல்ல, அந்த பணிப்பெண்ணின் வீட்டுக்கு போய் அவளிடம் விசாரித்தனர்.
அவள் தினக்கும் காலையில் ‘ஏழு மணிக்கு’ போயி பத்து மணி வரைக்கும் எல்லா வேலையும் செஞ்சுட்டு அடுத்த தெருவுல இருக்கற ஒரு வயசானவங்க வீட்டுக்கு போயிடுவன், நான் வேலை செய்யும் போதே இவங்க கிளம்பிட்டா கூட ‘சாவிய’ ஒரு இடத்துல வச்சுட்டு போக சொல்லிடுவாங்க. அப்படித்தான் நானும் செஞ்சுடுவேன். இன்னைக்கி வீடே திறக்காம இருந்ததால நான் அவங்க ‘வெளிய போயிட்டாங்கன்னு’ நினைச்சு வந்துட்டேன் என்றாள்.
மீண்டும் அவர்கள் அந்த வேலைக்கார பெண்ணையும் அழைத்து கொண்டு மாலினியின் வீட்டுக்கு சென்று பார்த்தார்கள். வீடு பூட்டிய நிலையிலேயே இருந்தது, இவர்களாக திறப்பதை விட போலீசில் தகவல் சொல்லி திறக்க சொல்லலாம் என்று போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து தகவல் தந்தார்கள்.
மாலினி காணாமல் போய் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன. கார்த்திகாவும், அகிலும் வந்து பார்த்த அன்று அவர்களுடன் வந்த காவல் துறையினர் ‘பூட்டை’ உடைத்து உள்ளே சென்று பார்க்க எல்லா பொருட்களும் அப்படியே இருந்தன. உடைகள் மட்டும் அங்கங்கு கழட்டி வீசப்பட்டு கிடந்தாலும் பெரும் அசம்பாவிதம் எதுவும் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் தெரியாததால் காவல் துறை மாலினியை காணவில்லை என்னும் தகவலை மட்டும் பதிவு செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.
கார்த்திகாவுக்கும், அகிலுக்கும் “மேடம்” காணாமல் போயிருந்தாலும் அவரை சுற்றியிருந்த கடன்காரர்கள் சும்மா இருக்கமாட்டார்களே? என்னும் கோணத்தில் விசாரித்து பார்த்தார்கள். அவர்களின் கடன் ஏதோ ஒரு வகையில் அடைக்கப்பட்டிருந்தது. எப்படி? என்று கேட்டதற்கு அவர்களால் தெளிவான பதிலை சொல்ல முடியவில்லை, என்றாலும் கடன் தொகை வந்து விட்டதால் அமைதியாகியிருந்தார்கள்.
கடன்காரர்களின் நச்சரிப்பு இல்லாததால் காவல்துறை மாலினி காணவில்லை, அவர் இங்கிருந்து மறைந்திருக்க வேண்டும், என்னும் அடிப்படையிலேயே புலனாய்வை மேற்கொண்டிருந்தார்கள். கடத்தப்பட்டிருந்தாலோ, அல்லது கொலை செய்யப்பட்டிருந்தாலோ இந்த
நேரத்தில் வெளிப்பட்டிருக்கும் என்பது அவர்களின் அனுமானம். அது மட்டுமல்ல மாலினியின் கடன்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டிருந்ததும் அவர்களின் பார்வைக்கு சென்றிருந்ததால் மாலினி எங்கோ உயிருடன் இருந்து கடனை அடைத்து கொண்டிருக்க வேண்டும் என்னும் எண்ணத்திலேயே அமைதியாக அவரை தேடி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சென்னை ‘புறநகர் காவல் நிலையத்தில்’ மாலினி திடீரென தோன்றி “தான் கடத்தப்பட்டு ஆறுமாதமாக ஒரு இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்ததாக புகார் கொடுத்திருந்தாள்.
இந்த செய்தி பரபரப்பாகி பெரும் விவாத பொருளானது. அவரிடம் காவல்துறை மேற்கொண்டு விசாரித்ததில் அவள் எங்கு வைக்கப்பட்டிருந்தாள் என்பது தமக்கு தெரியவில்லை என்றும், ஆனால் நல்ல வசதியாகவே வைத்திருந்தார்கள் எனவும் தெரிவித்தாள். அது மட்டுமல்ல, வாரம் இரண்டு முறை மருத்துவர் ஒருவர் வந்து அவளது உடலை பரிசோதித்து பார்த்து சில மருந்துகளை உட்கொள்ள சொன்னதாகவும், தான் மறுத்தாலும் தன் உடலுக்கு தேவையானதுதான் என்று வற்புறுத்தியதால் தான் ‘உட்கொண்டதாகவும்’ கூறினாள்.
எப்பொழுதும் மாலினியுடன் ஒரு வேலைக்கார பெண்மனி இவளை பார்த்து கொண்டதாகவும் சொன்னாள். அவளிடம் இவள் எவ்வளவோ கேட்டும் பதில் தரவும், வெளியே அனுப்பவும் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தாள். அவள் சிறை வைக்கப்பட்டிருந்த வீட்டை சுற்றி மாமரங்கள் அடர்ந்து தோப்புக்களாகவும், மறுபக்கம் வயல்களாவும் இருந்ததையும் சொன்னாள். தான் ‘மேல் மாடியில்’ அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், அங்கிருந்து ஜன்னல் வழியாக சுற்றி வர பார்த்ததாகவும் சொன்னாள். இதை வைத்து என்னை ‘என் கணவனின் குடும்பத்தார்தான்’ சிறை வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தாள்.
இவளின் பேச்சு ஊடக வெளி உலகிற்கு இன்னும் பரபரப்பை கொண்டு வந்தது. காவல் துறை மேற்கொண்டு சரவணனின் பெற்றோரிடம் விசாரித்த பொழுது அவர்கள் இதற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.
மாலினி கொடுத்த புகார் மனு நீதிமன்றத்திற்கு சென்று அது ஏற்று கொள்ளப்பட்டு இவள் சார்பாக ‘வக்கீலையும்’ நியமித்து கொண்டாள். கார்த்தியின் பெற்றோர்கள் சார்பாக வக்கீல் ஒருவரும் நியமிக்கபட்டிருந்தார்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நீதிபதி தனது தீர்ப்பை அளித்த போது
மாலினி அவர்கள்,அவரின் கணவனின் பெற்றோர்கள் தான் தன்னை கடத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான ஒரு சில சாட்சியங்களையும் நீதி மன்றத்தில் சமர்ப்பிந்திருந்தார். அனைத்தும் ஏற்று கொள்ளப்பட்டன, அதே நேரத்தில் மாலினியின் கணவரான சரவணனின் பெற்றோர்கள் மட்டுமே தன்னை கடத்தி வைத்திருந்ததாக சொன்னது சரியல்ல, என்பதை காவல்துறையினர் கண்டு பிடித்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.
அதில் அவர்கள் தெரிவித்திருப்பது சரவணனின் பெற்றோர் மீது குற்றம் சுமத்தியிருந்த மாலினியின் பெற்றோர்களின் துணையுடன் தான் சரவணனின் பெற்றோர் மேற்கண்ட செயலை செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான காரணங்களை அவர்கள் தங்கள் வக்கீல் மூலமாக தெரிவித்திருந்தார்கள், அதை நிருபிக்க தேவையான சாட்சியங்களையும் அளித்திருந்தார்கள். அதனடிப்படையில் இந்த வழக்கை ஆராய்ந்து அலசி கீழ்க்கண்ட சாராம்சங்களின் அடிப்படையில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது.
ஒன்று இருவருமே தங்களது பெற்றோர்களின் எந்த அறிவுரைகளையும் ஏற்று கொள்ளாமல், தங்களின் விருப்பப்படி வாழ்ந்துள்ளனர்.
இரண்டாவது ‘சினிமா’ என்னும் தொழிலில் தங்களது அனைத்து முதலீடுகள் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தது மட்டுமில்லாமல் சுற்றிவர கடன்களையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்
மூன்றாவது இவர்கள் அடகு வைத்தோ,விற்றோ செலவு செய்த சொத்துக்கள் யாவும் இரு குடும்பத்தின் மூதாதையர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள், அதை இவர்களின் பெயரில் அவர்களின் பெற்றோர்கள் நம்பி பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள்.
நான்காவது அவர்கள் சொத்துக்கள் தொலைத்ததை பற்றி கூட கவலைப்படவில்லை எனவும், தனது மகன் அநியாயமாக இத்தகைய ‘மோகத்தால்’ உலக வாழ்க்கையை முடித்து கொண்டதை தங்களால் தாங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள்
ஐந்தாவதாக மிக முக்கியமான இவர்களது இரு குழந்தைகள். ஏற்கனவே ‘தந்தையை’ இழந்து விட்ட குழந்தைகள் அடுத்து இதே போல் ‘தாயையும்’ இழந்து விட கூடாது என்னும் உயரிய நோக்கம்.
ஆறாவதாக இந்த நோக்கத்தை அவர்கள் ‘அழுத்தி சொல்வதன்’ காரணம் இருவருக்குமே போதை, மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் தொற்றி கொண்டிருப்பதையும், முன் கோபத்தாலும், நிதானமில்லமல் இருந்ததாகவும் சுட்டி காட்டியிருக்கிறார்கள்.
ஏழாவதாக அவர்கள் மாலினியை துன்புறுத்தவோ, அடாத செயல்களை செய்யவோ வற்புறுத்தவில்லை, இந்த ஆறு மாதத்தில் அவளது புகை பிடிக்கும் பழக்கத்தையும், போதை பழக்கத்தையும், மருத்துவ ரீதியில் முற்றிலும் மறக்க செய்திருக்கிறார்கள். இதை மாலினியின் உடலை பரிசோதித்த டாக்டர் உறுதிபடுத்தி இருக்கிறார்.
எட்டாவதாக இவர்களால் வாங்கப்பட்ட அனைத்து கடன்களையும் நேர்மையாக அடைத்தும் இருக்கிறார்கள்.
இப்படி எல்லாவிதத்திலும் மாலினி அவர்களுக்கு நன்மை கிடைக்கவும், அவள் ‘கணவன்’ எடுத்தது போல் முடிவை இவள் எடுத்து விட கூடாது என்னும் நோக்கத்துடன் மாலினியின் பெற்றோரும், தங்களது மகன் இறந்து விட்டாலும் அவனது வாரிசுகளாவது அம்மாவுடன் இருந்து வாழவேண்டும் என்னும் நோக்கத்துடன் சரவணனின் பெற்றோரும் இணைந்தே இந்த செயலை செய்திருக்கிறார்கள்.
இது சட்டப்படி மற்றொருவரின் ‘வாழ்வின் உரிமையில்’ தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டாலும், இதன் நோக்கத்தையும் எதிர்பார்ப்பையும் பார்க்கும் பொழுது, இந்த குற்ற செயலுக்கு “இது போல எதிர்காலத்தில் செய்ய கூடாது” என்னும் எச்சரிக்கையுடன். அபராத தொகையுடன், இந்த வழக்கை முடித்து கொள்ளலாம் என்று இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
மாலினிக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளித்தாலும், அதை தெளிவாக எப்படி ஏற்று நின்று கொண்டிருக்கிறோம்? என்பது வியப்பாகத்தான் இருந்தது. அவள் கைகள் இப்பொழுது நடுக்கம் தரவில்லை, புகை பிடிக்கவேண்டும் என்னும் பரபரப்பு இல்லை, மதுவின் ஞாபகமே வரவில்லை.
ஒரு வேளை நாம் இதுவரை செய்தது சரியான செயலில்லையோ? அவளுக்கு முதன் முதலாக தன்னுடைய குழந்தைகள் ஞாபகம் வந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Dec-25, 12:07 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vazhakku ondru
பார்வை : 15

மேலே