நட்ட கல்லும் பேசுமோ 13 ஓக்கதிந்தன் பட்டை பொத்தன்

அன்று சித்திரா பௌர்ணமி. வழக்கத்திற்கு மாறாக மல்லாம் கிராம மக்கள் அன்று மாலை நடக்க இருக்கும் சிறப்புக் கொற்றவை பூஜைக்காக ஆவலாகக் காத்திருந்தார்கள். பௌர்ணமி பூஜையைக் காண பெருந்திரளான மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வெளியூரிலிருந்தும் வந்து கொண்டிருந்தார்கள். மல்லாம் கிராமம் திருவிழாக் கோலம் கொண்டிருந்தது. கிராமத்து தலைவரின் உத்தரவிற்கிணங்க வெளியூரிலிருந்து வரும் வண்டிகளை ஊர் எல்லையில் இருக்கும் ஐய்யனார் பொட்டைத் திடலிலேயே நிறுத்தியிருந்தார்கள். ஒரு சிலர் தட்டையான கல்லில் சிறிது புளி, காய்ந்த மிளகாய், சிறிது உப்பு, சின்ன வெங்காயம் கையளவு, அதனுடன் நல்லெண்ணை விட்டு சதைத்து அந்தக் கலவையை ஆவி பறக்கும் தினைச் சோற்றுடன் கலந்து பசியாறிவிட்டு கொற்றவைக் கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
அதே சமயம் ஒக்கதிந்தன் தன் குடிசையில் கொற்றவையை நினைத்து மானசீகமாக உருகி பூஜை செய்ய வேளியே காவல் காத்துக் கொண்டிருக்கும் அவருடைய மகன் வரிசையாக நிற்கும் மக்களை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினான். அவர்கள் கொண்டு வந்திருந்த பழங்களையும், இனிப்புகளையும் திண்ணையில் வைத்துவிட்டு ஒக்கதிந்தனைக் கண்டு வழிபட உள்ளே சென்றார்கள். அமைதியாக ஒக்கதிந்தன் அமர்ந்திருந்தார். அவர் உடம்பு முழுவது பூசிய சந்தனத்தின் நறுமணம் குடிசை முழுவதும் வியாபித்திருந்தது. கூடுதலாக புனுகு, சாம்பிராணி, மஞ்சளின் மணம் கலவையாக அவரை தரிசிக்க வருவோரின் நாசியில் புக பய பக்தியுடன் அவரை வழிபட்டனர். சிலரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒக்கதிந்தன் எதற்கும் சலனப்படாமல் அனைவருக்கும் நன்றி கூறுவது போல தலை தாழ்த்தி தன் இரு கைகளையும் குவித்து கம்பீரமாக வணங்கினார். வந்திருந்தவர்களில் வயதில் மூத்த ஒருவர் “எதற்கும் மனதில் தைரியம் வேண்டும். நம்ம ஐய்யா கொற்றவை பக்தர். மிகவும் கொடுத்து வைத்தவர். அனைத்தையும் கொற்றவை பார்த்துக்கொள்வாள்” என்று கலங்கிய கண்களுடன் கொற்றவை கோயிலிற்குக் கிளம்பினார்.

கொற்றவை கோயில் பூசாரி ஒக்கதிந்தனை அனைத்து மரியாதைகளுடன் குடிசையில் இருந்து அழைத்து செல்ல வந்திருந்தான். மக்களின் கூட்டம் கூடிக்கொண்டே போனது.

ஒக்கதிந்தன் அனைத்தையும் மறந்து கொற்றவையை மட்டும் மனத்தில் இருத்தி தன் பூஜையை முடித்தார். அவரைச் சுற்றி பயபக்தியுடன் நின்றிருந்த ஊர்ப்பெரியவர்கள் ஒக்கதிந்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றக் காத்திருந்தனர். குடிசையைவிட்டுக் கொற்றவைக் கோயிலிற்குக் கிளம்பும் முன் தன் மகனை அழைத்தார். அவன் பறை அடிப்பதை விட்டு தந்தையிடம் பணிவுடன் வந்து நின்றான். “கொற்றவை துணையிருப்பாள். அவளே உன்னையும் என்னையும் வழிநடத்துபவள். தைரியமாக இரு” என்று அவனை இறுக அணைத்துக்கொண்டார். மகனின் கண்ணீர்த் துளிகள் தந்தையின் தோள்களில் பட்டுத்தெறித்து முதுகில் படர ஒக்கதிந்தன் அணைப்பிலிருந்து மகனை உடனே விடுவித்து தன் இரண்டு கைகளாலும் அவன் தோள்களைப் பிடித்து கம்பீரமாக மகனை நேருக்கு நேராகப் பார்த்தார். “உன் ஒவ்வொரு கண்ணீர்த்துளிகளும் என்னை பலவீனப்படுத்தும் என்று உனக்குத் தெரியாதா. என் திட மனதை சஞ்சலைப்பட வைக்காதே மகனே. உன் தந்தை மிகவும் கொடுத்து வைத்தவன். இது கொற்றவையின் தீர்ப்பு. இதை மாற்ற எவராலும் இயலாது. மகிழ்ச்சியுடன் என்னை வழியனுப்பு” என்று கூறி அவனுடைய நெற்றியில் திருநீரு பூசினார்.
அனைவரும் ஒக்கதிந்தனைத் தொடர்ந்தார்கள். கோயில் பூசாரி அனைவரையும் வழி நடத்த மணமுள்ள சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, நறுமணப் புகை முதலியவற்றைத் தாங்கியபடி இளம் பெண்கள் சென்றார்கள். அவர்களுக்கு பின் வழிப்பறியின் போது கொட்டும் பறையுடனும், சூறையாடும் போது ஊதப்படும் கொம்பினையும் இசைத்துக்கொண்டு இளைஞர்கள் தொடர்ந்து வந்தார்கள்.

பிறை சூடிய சிரசு. தெறிக்கும் நெற்றிக்கண். பவளம் பொன்ற உதடுகள். முத்துப்பல் தெரியும் ஒளி வீசும் புன்னகை. நஞ்சை உண்டதினால் கருநிறமான சங்குக் கழுத்து. மார்புக் கச்சையாக கொடிய நச்சுப் பாம்புகளை அணிந்திருந்த கொற்றவையின் கைகளில் சூலம். இடக் காலில் சிலம்பு. வலக்காலில் கழல். மகிடாசுரனைக் கொன்று அவன் தலைமேல் கால் வைத்து கருநிறத்தவளான கொற்றவை முழு அலங்காரத்துடன் கலைமானின் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்தாள்.
பூஜைகான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. படாரி எனும் துர்கைக்குப் படையலாக ஒக்கதிந்தன் தன் உடம்பின் ஒன்பது பகுதிகளிலிருந்து தசைகளை ஒவ்வொன்றாக வெட்ட ஆரம்பித்தான். மக்களின் கூக்குரல் வின்னை எட்டியது. ஊர்ப்பெரியவர்கள் ஒக்கதிந்தனின் மேல் மலர் மாரிப் பொழிந்தார்கள். மேடையைச் சுற்றி தெறித்து குருதி வழிய ஒக்கதிந்தன் தன் தலையை சிறு குவடு போன்ற மேடையின் மேல் வைத்து தன் தலையைக் கத்தியால் தானே அறுத்து கொண்டையைப் பிடித்தபடி அத்தலையை தட்டின் மேல் வைத்தான். அதுவரை கோஷித்துக் குரல் எழுப்பிய மக்கள் அமைதியானார்கள். நறுமணப் புகை அதிகம் பரவி அந்த இடத்தைச் சூழ ஒக்கதிந்தன் அங்கு குழுமியிருந்த மக்களின் பார்வையிலிருந்து மெல்ல மெல்ல மறைந்துகோண்டே வந்தான். விசும்பலுடன் “அப்பா” என்ற குரல் மட்டும் சூழ்ந்திருந்த மக்களின் காதுகளில் பெரும் குரலாய் பட்டு எதிரொலித்தது. அந்த அதிர்வு எழும்பியடங்க நீண்ட நேரம் ஆனது.
இவரின் செயலை மெச்சிய திருவான்மூர் மக்கள் அதற்குப் பரிசாக அவருக்கு ஊர்ப் பறை கொட்ட நடுகல் மேடு நிறுவினார்கள். ஒக்கதிந்தனின் ஆவிக்கு பறை அடிப்புக்கு உரியவர்கள் நிலக் கொடையாக உயிர்த்தியாகம் செய்த வீரனுக்கு தொடுப்பட்டி நிலத்தைக்கொடுத்தார்கள். இதை எவரேனும் ஏற்க மறுத்தால் அவர்கள் கங்கைக்கும் குமரிக்கும் இடைப்பட்ட எழுநூற்றுக் காதமுள்ள இந்த பெருநிலத்தில் வாழும் மக்களின் ஒட்டு மொத்த பாவைத்தையும் ஏற்பர் என்றும், அதோடு அவர்கள் வாழும் காலத்தில் அரசாளும் மன்னனுக்கு கால் பொன் தண்டம் செலுத்த வேண்டும் என்று கல்வெட்டில் பொறித்து உள்ளனர்.
(நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டம் மல்லாம் எனும் சிற்றூரில் உள்ள சுப்ரமணியர் திருக்கோயிலின் செவ்வகக்கல்லில் நவக் கண்டம் கொடுக்கப்பட்ட செய்தி கல்வெட்டாக பதிவாகி உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டென அறியப்படுகிறது)

எழுதியவர் : பிரேம பிரபா (30-Sep-20, 7:17 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 47

மேலே