ஈட்டிய ஒண்பொருளை நல்லறத்தில் புரியாதான் மாண்டு படும் - உலோபம், தருமதீபிகை 672
நேரிசை வெண்பா
கூட்டித் தொகுத்துவைத்த குப்பைதனைத் தன்புலத்தில்
ஊட்டி உதவா உழவன்போல் - ஈட்டிவைத்த
ஒண்பொருளை நல்லறத்தில் ஓர்ந்து புரியாதான்
மண்புதைய மாண்டு படும். 672
- உலோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தான் கூட்டிவைத்த குப்பையைத் தன் நிலத்தில் பரப்பி விளைவை விருத்தி செய்யாத உழவன் போலத் தான் ஈட்டி வைத்த பொருளை நல்ல தருமங்களில் பரப்பி நலங்களை அடைந்து கொள்ளாத உலோபி இழிந்து அழிந்து படுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உலக வாழ்க்கைக்குப் பொருள் மிகவும் தேவையாயிருத்தலால் யாவரும் அதனை ஆவலோடு வருந்தித் தேடுகின்றனர். அவ்வாறு தேடித் தொகுத்த பொருளை நாடி வகுத்து நல்ல வழிகளில் வழங்கிவரின் அது எவ்வழியும் சிறந்த செல்வத் திருவாய் உயர்ந்து வரும். தேடியதை நாடிச் செலவு செய்பவன் செல்வச் சீமானாய்ப் பேரும் சீரும் பெறுகிறான்; அவ்வாறு செய்யாதவன் புல்லிய உலோபியாய்ப் புலையுற்று இழிகின்றான்.
கிணற்றில் ஊறிய நீரைப் பயிர்களுக்குப் பாய்ச்சுதல் போல் முயற்சியால் ஏறிய பொருளை உயிர்களுக்கு ஊட்டின் அந்தச் செல்வன் நல்ல புண்ணியவானாயுயர்ந்து எண்ணிய இன்ப நலங்களையெல்லாம் எளிதே எய்துகின்றான். அங்ஙனம் உதவாதவன் பொருளின் பயனையிழந்து வறிதே அழிகின்றான்.
பொருளைச் சேர்ப்பது இன்பமும் அறமும் புகழும் அடையவேயாம்; உரிய பயன்களைத் தக்க பருவத்திலேயே பக்குவமாயடைந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு அடையாவழி அப்பொருள் கடையாய்க் கழிந்தே போகும்.
தான் தேடிய பொருளின் பயனைச் செவ்வையாய் அடையாமல் வீணே சேர்த்து வைத்திருப்பவன் குப்பையைக் கூட்டி வைத்த விளக்குமாறு என இளிக்கப்பட்டுள்ளான்.
நேரிசை வெண்பா
பல்வே(று) இடத்தில் பரந்து கிடந்திருந்த
புல்லாதி யெல்லாம் புடைதொகுத்து - நல்ல
பயன்ஒன்(று) அறியாப் படுசோ தனிபோல்
நயனறியான் லோபி நவை.
பாடுபட்டுச் சேர்த்தும் பொருளின் பயனை அனுபவியாமையால் உலோபியை விளக்குமாறு என்று காரணம் காட்டி இது விளக்கியுள்ளது.
சோதனி - துடைப்பம். உவமானம் அவமானமாய் வந்திருந்தாலும் உள்ள ஒப்பு நிலைகளை, நுட்பமாய் ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
கூட்டி வைத்த குப்பையை நிலத்தில் இட்டுப் பரப்பினால் அந்த நிலம் சிறந்த உரமுடையதாய் உயர்ந்து நல்ல விளைவுகளை நல்கி அருளும்; அவ்வாறு பரப்பாமல் குவித்தே வைத்திருந்தால் அது வீணே கெட்டு விளிந்து போகும்; ஈட்டிவைத்த பொருளை எளிய பிராணிகளுக்கு ஊட்டி உதவினால் அது புண்ணியமாய்ப் பொங்கிப் பெரும் போகங்களை நீட்டியருளும்; அங்ஙனம் உதவாமல் இருந்தால் அது தானாகவே கெட்டழிந்து போகும். வருந்தித் தொகுத்த பொருளை வறிதே அழிந்து போக விடுவது கொடிய மதிகேடாய் முடிகின்றது. அந்த முடிவைத் தனது சொந்தமாக்கி உலோபி நிந்தனையடைந்து முடிகின்றான்.
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
எருவைச் சேர்ப்பது நிலத்தினுக்(கு) இடுவதற்(கு) அன்றிப்
பெருமை யாய்க்குவித் துயர்வுறப் பேணுதற்(கு) அன்றே
அரிய நன்பொருள் படைத்தவன் அறம்இன்பம் அடையா(து)
ஒருமை யாய்த்தொகுத் திடினது பழியுடன் ஒழியும், 1
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
ஆக்கிய பொருளைநல் அறத்தில் ஆக்கினான்
பாக்கிய வான்;அதைப் பதுக்கி வைத்தவன்
தேக்கிய கழிவுநீர்ச் சிறுகி டங்கென
மேக்குயர் பழியொடு வெம்பி வீழுமே. 2
கழிந்தவெங் குட்டத்துள் கலந்து நிற்குநீர்
பொழிந்தபுண் ணாற்றமே புறத்து வீசல்போல்
இழிந்துறும் உலோபர்பால் இருக்கும் வெம்பொருள்
வழிந்தபுன் பழியையே வளர்த்து மாயுமால், 3 - வீரபாண்டியம்
உலோபியின் பொருள் நிலையை இவை குறித்து வந்துள்ளன..
செல்வம் எவரிடமும் நெடிது நிலைத்து நில்லாதது; அது தன்னிடம் நிலைத்திருக்கும் போதே மனிதன் நல்லதைச் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தவன் உய்தி பெற்று உயர்ந்து போகிறான்; செய்யாதவன் வெய்ய பேதையாய் இழிந்து போகிறான். பண நசை பழி வசையாய் வருகிறது.
ஈயாத உலோபியை எவரும் வெறுக்கின்றார், உற்ற மனைவியும் இகழ்கின்றாள்; பெற்ற பிள்ளைகளும் பிழைபடப் பேசுகின்றார். அவனது வாழ்வு அவலமாயழிகின்றது.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
ஈகையில் லாதுபொன் ஈட்டு வோன்கொண்ட
தோகையும் மைந்தருந் தொலைகி லானென
ஓகையாய் அருவிடம் உணவில் இட்டவன்
சாகையே கருதிமா தவஞ்செய் வார்களே. 7
- கடும்பற்று, நீதிநூல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொன் காத்த பூதம் போல் பணத்தை உலோபி பற்றி நிற்பானாதலால் அவன் செத்துத் தொலைவதையே எல்லாரும் விரும்பி எதிர்பார்த்து நிற்பர் என இது குறித்துள்ளது.
நேரிசை வெண்பா
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். 22 நல்வழி
ஈட்டிய பொருளை அனுபவியாமலும், அறம் செய்யாமலும் வீணே தொகுத்து மறைத்து வைத்திருக்கும் உலோபிகளை நோக்கி இரங்கி ஒளவையார் இவ்வாறு புத்தி போதித்திருக்கிறார். பொருளால் அடையவுரிய பயனை இழந்து வறிதே மடிந்து போவது பெரிய மருளாயுள்ளது. மருண்ட மனப்பற்றால் இருண்ட இழிவுகள் திரண்டு வருவதால் யாதும் அறியானாய் அவலமாயிழிந்து அவன் கவலையோடு அழிகின்றான்.
பித்து பணத்தில் பெருகவே எத்திறத்தும்
செத்தவன் ஆவன் சிதைந்து.
என்கிறார் கவிராஜ பண்டிதர். உலோபியின் செத்த வாழ்வை இது உணர்த்தியுள்ளது.

