நாராயணன் - நேரிசை வெண்பா
கம்பர் பெருமான், செய்யுளின் சந்தத்தை நோக்கி 'நாராயணன்' என்ற சொல்லை, ‘நராயணன்' என்றனர். அவர் செயலை ஏளனஞ் செய்யும் கவிஞர் இப்படிப் பாடுகிறார்.
நேரிசை வெண்பா
நாரா யணனை நராயணனென் றே,கம்பன்
ஓராமற் சொன்ன வுறுதியால் - நேராக
வாரென்றால் வர்ரென்பேன் வாளென்றால் வள்ளென்பேன்
காரென்றாற் கர்ரென்பேன் யான் 204
- கவி காளமேகம்
பொருளுரை
"கம்பன் சற்றும் ஆராயாமல், 'நாராயணன்' என்ற சொல்லை, நராயணன்' என்று சொன்ன அதே நெஞ்சின் உறுதியினாலே, அதற்கு ஒப்பாக, யானும் இனிமேல் 'வார்’ என்றால் "வர் என்பேன், வாள்' என்றால் வள்’ என்பேன், ‘கார்’ என்றால் ‘கர்’ என்பேன்." என்கிறார் கவி காளமேகம்.
நாராயணன் என்பது, திருமாலின் திருநாமம்; இதற்கு, ஜலத்திலே இருப்பவன் என்பது பொருள். நராயணன் என்றால், மனிதரில் இருப்பவன் என்பது பொருளாகிறது. இப்படிப் பொருள் முற்றவும் வேறுபடுகிறதனால் கவிஞர் கம்பரின் போக்கினைக் கண்டித்து உரைக்கின்றார்.