பாந்தளனை யார்துயரம் பண்ணுவார் – கொடுமை, தருமதீபிகை 663

நேரிசை வெண்பா

சாந்தகுண மாந்தர் தனிஒதுங்கி வாழ்ந்தாலும்
பாந்தளனை யார்துயரம் பண்ணுவார் – நேர்ந்த
வனத்தமர்ந்த மானினத்தை வல்வேடர் சென்று
சினத்தடுவர் அந்தோ செயிர்த்து. 663

- கொடுமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வனத்தில் மறைந்து வாழுகிற மான் இனங்களை வேடர் வலிந்து சினந்து வதைத்தல்போல் அமைதியான நல்ல குணமுள்ள மேலோர்களைப் பொல்லாத கொடியவர் வீணே புகுந்து அல்லல் புரிந்து வருத்துவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உள்ளம் கெட்டதாயின் மனிதன் கொடிய மிருகத்தினும் நெடிது தீயவனாகி விடுகிறான். எவ்வழியும் அல்லல்களையே செய்ய நேர்கின்றான். புலி கரடி முதலிய தீய விலங்குகளும் தமக்கு இடர் நேர்ந்த போதுதான் ஆங்காரமாய்ச் சினந்து பாய்ந்து தீங்குகள் புரிகின்றன. மனித வடிவிலுள்ள தீயவர்கள் தமக்கு யாதொரு இடரையும் எண்ணாதவர்க்கும் வீணே இன்னல் புரிந்து இடர்கள் செய்கின்றனர்.

கொடியவரைப் ’பாந்தள்; என்றது அவரது நிலைமைகளை நினைந்துணர வந்தது. பாந்தள் - பாம்பு. கொடிய நஞ்சுடைய பாம்புகளுள் நெடியது பாந்தள் என நேர்ந்தது.

எந்தவகையிலும் பிறருக்கு அச்சத்தையும் அல்லலையும் தருவதாதலால் கொடியவிடப் பாம்பு எனக் கொடியவர் முடிவாகி நின்றனர். நெஞ்சம் கெடவே உரை செயல் யாவும் நஞ்சமாகின்றன. அந்த நாச காலர் நீச நிலையமாய் நிலவி நிற்கின்றார்.

நேரிசை வெண்பா

ஈக்கு விடம்தலையில் எய்துமிருந் தேளுக்கு
வா’ய்’க்கும் விடம்கொடுக்கில் வாழுமே - நோக்கரிய
பைங்கணர வுக்குவிடம் பல்அளவே துர்ச்சனருக்(கு)
அங்கமுழு தும்விடமே யாம். 18 நீதி வெண்பா

தேனீக்குத் தலையில் விடம், தேளுக்குக் கொடுக்கில் விடம்; பாம்புக்குப் பல்லில் விடம், துர்ச்சனர்க்கோ உடம்பு முழுவதும் விடமாம் என இது உணர்த்தியுள்ளது. கொடிய துட்டர் தீமையே வடிவமாயிருப்பர்; அவரைக் கண்டாலும், அவர் பேச்சைக் கேட்டாலும் அல்லலேயாம் என்பது அறிய வந்தது. நெஞ்சம் கொடுமையாய போது அவர் நஞ்சின் பிண்டமாய் நாசங்களையே செய்கின்றார்; அந்த நீசங்களை அஞ்சி அகல வேண்டும். நவையே கருதி நாசமே புரிதலால் நீசப் பாம்பினும் தீயராய் நிமிர்ந்து கொடியவர் நெடிய நீசராயினார்.

நேரிசை வெண்பா

துர்ச்சனரும் பாம்பும் துலைஒக்கி னும்பாம்பு
துர்ச்சனரை ஒக்குமோ தோகையே - துர்ச்சனர்தாம்
எந்தவிதத் தாலும் இணங்காரே பாம்புமணி
மந்திரத்தால் ஆமே வசம்.

துர்ச்சனர் பாம்பினும் தீயவர்; யாண்டும் தீம்பே புரிவர்; எதற்கும்.அவர் கட்டுப்பட்டு நில்லார் எனத் துட்டரைக் குறித்து வந்துள்ள இது உய்த்துணர வுரியது.

பாம்பு மிதித்தால் கடிக்கும்; தேள் தொட்டால் கொட்டும்; துட்டர் யாதொரு காரணமுமில்லாமலே வீணே வலிந்து போய்ப் பிறர்க்கு அல்லல் செய்வராதலால் பாம்பு முதலிய கொடிய பிராணிகளினும் தீயவர் மிகவும் கொடியராயுள்ளனர்.

நெஞ்சம் கொடுமையாய்த் தீமையே செய்யும் தீம்பர் யாதொரு வகையிலும் நல்லது நாடார்; எவ்வழியும் அல்லலே செய்வர்; பொல்லாத அந்தப் புலையாளர் எந்த நிலையிலும் திருந்தாமல் ஈனமே புரிதலால் அவரைப் பார்ப்பதும் பழிகேடேயாம்.

பாம்பு கடித்தால் அதுவும் நீக்க வல்லோம்;
பசாசு அறைந்தால் நீறிட்டுப் பார்க்க வல்லோம்;
வேம்பு கசப்பறக் கறியும் ஆக்க வல்லோம்:
விறல்வே ழத்(து)அதி கமதம் தணிக்க வல்லோம்;
சாம்பொ ழுதுதிட மாகப் பேச வல்லோம்;
தரணி யின்மேல் கல்லாத(து) ஒன்று மில்லை;
தீம்பரை நல்லவ ராக்கிக் குணமுண் டாக்கும்
திறமொன் றுமறி யாமல் திகைக்கின் றோமே.

தீயவர் யாதும் எவ்வகையிலும் திருந்தாமல் தீமையிலேயே செருக்கித் தீங்கு புரிந்து திரிவார் என இது உணர்த்தியுள்ளது.

உள்ளம் கொடுமையாய்ப் பாழ்பட்டபொழுது இப்படிப் படுபாதகனாய் நிமிர்ந்து மனிதன் இழிந்து அழிந்து போகிறான்.

நெஞ்சில் கொடுமை வளர்ந்து வரவே அங்கே இரக்கம், அன்பு முதலிய நல்ல பண்புகள் ஒழிந்து போகின்றன; பொல்லாத புலைகளே தலையெடுத்து நிற்கின்றன. தீய பழக்கங்களில் பழகி வந்துள்ள அவ்வளர்ச்சி தீமைகளைத் துணிந்து செய்கின்றது. நல்லோர் அஞ்சி நடுங்குகின்ற தீமையைப் பொல்லாதவர் அஞ்சாமல் செய்வது நெஞ்சம் படிந்துள்ள கொடுமையினாலேயாம். கொடிய பழக்கத்தினாலேயே மனிதன் கொடியவனாய் மாறி நெடிய நீசங்களைச் செய்கின்றான்.

There is a method in man’s wickedness, It grows up by degrees. - Beaumont

மனிதனுடைய தீமையும் படிமுறையே வளர்ந்து வருகிறது” என்னும் இது இங்கே அறியவுரியது.

அன்புநலம் என்றும் அமுதாம்; கொடுமையோ
துன்ப விடமாம் தொடல்.

கொடுமையைப் பழகிக் கொடியவனாயிழிந்து போகாமல் நன்மையைப் பழகி யாண்டும் நல்லவனாய் உயர்ந்து கொள்ளுக என்றும், துன்பநிலை ஒருவி இன்பநலம் பெறுக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Oct-20, 7:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே