உள்ளம் கொடியார் உலகிற்கோர் நஞ்சாம் - கொடுமை, தருமதீபிகை 662
நேரிசை வெண்பா
உள்ளம் கொடியார் உலகிற்கோர் நஞ்சாகி
எள்ளும் இடரே இயற்றுவார் - வெள்ளம்
படிந்த விடம்போல் படியில் அவர்காண்
கடிந்து விடுக கடிது. 662
- கொடுமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உள்ளம் கொடியவர் உலகத்திற்கு ஓர் நஞ்சாய் அல்லல்களைச் செய்வர்; நீரில் படிந்த விடம் போல் நிலத்தில் அவர் கலந்துள்ளார்; அந்தக் கொடியரைக் கடிது கடிந்து விடுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
மனத்தில் கொடுமை மண்டிய பொழுது மனிதன் கொடியவன் ஆகின்றான். நெடிய பாதகங்கள் எல்லாம் கொடுமையால் விளைந்து வருகின்றன. நெஞ்சம் தடித்து நெடுந்தீமைகளைச் செய்கின்றவன் கொடிய வன விலங்குகள் போல் அஞ்சத் தக்கவனாய் அவலம் அடைகின்றான். புலி, கரடி முதலிய மிருகங்கள் காடுகளில் ஒதுங்கி வாழ்கின்றன. ஈன ஊன்களை உண்டு இயல்பாகவே இடறுகள் புரிவனவாதலால் மான மனிதன் அவற்றைக் காண நேர்ந்தபோது பயந்து ஒதுங்குகிறான். பயங்கரமுடைய அவையும் மனிதனைக் கண்டு பயப்படுகின்றன. செயல்கள் கொடுமையாகவே உயர்வுகள் குன்றுகின்றன; அச்சமும் திகிலும் மண்டி யாண்டும் அவலங்கள் உறுகின்றன.
உள்ளம் இரக்கமாய் உருகிய அளவு அந்த உயிர் பரகதியை நோக்கி உயர்ந்து செல்லுகின்றது. கொடுமையாய்க் கடுமை படிந்த அளவு இழிந்த நிலையில் அழுந்தி ஈனமடைந்து போகிறது.
கல்ஏனும் ஐயஒரு காலத்தில் உருகுமென்
கல்நெஞ்சம் உருக இலையே!
கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன்
கற்பிக்க ஒரு கடவுளோ?” - தாயுமானவர்
என் உள்ளம் உருக வில்லையே! என்று இறைவனை நோக்கித் தாயுமானவர் இப்படி உருகி அழுதிருக்கிறார். கருணை வள்ளலான அவர் இவ்வாறு மறுகியிருத்தலால் உருக்கம் எவ்வளவு மகிமை யுடையது' என்பதை ஊன்றி உணர்ந்து கொள்ளுகிறோம்.
நெஞ்சம் உருக உருக உயிர் பரமாய் உயர்கின்றது. அது இறுக இறுகக் கடையாய் இழிகின்றது. உயர்ந்த மனிதப் பிறவியை அடைந்தும் உய்தி பெுாறமல் ஒழிவது வெய்ய துயரமாய் முடிகின்றது. முடிவு தெரியாமல் களிப்பது மூடமாய் நின்றது.
உள்ளத்தின் கொடுமையால் மனிதன் எள்ளல் இழிவுகளையே அடைகின்றான், நெஞ்சத் தடிப்பு நெடுந் தடியனாக்கி நீசங்களையே விளைத்து விடுகின்றது. பொல்லாத கொடியவன் என்று ஒருவன் சொல்லப் படுவானானால் உள்ளத்தின் கொடுமையால் அந்த இழிநிலையை அவன் அடைந்திருக்கிறான் என்று தெளியப்படுகின்றது. உள்ளம் கொடுமையாய்க் கெடவே கொடியவன், கெட்டவன், கயவன், கீழ்மகன் என்று எள்ளப்படுகின்றான். வன்னெஞ்சம் வசைகளை வளர்த்து வருகின்றது.
இன்னிசை வெண்பா
வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும் அஃதேபோல்
வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு. 31 அறநெறிச்சாரம்
கீழ்மக்கள் உள்ளம் கல்லினும் வலியதாய்க் கடுமை மண்டியிருக்கும்; நல்ல தரும நீதிகளை எவ்வளவு சொன்னாலும் அவர் நெஞ்சம் இரங்கி இதம் செய்யார் என இது உணர்த்தியுள்ளது.
கொடியனாயிழிந்து போகாதே; இரக்கமுடையனாய் உயர்ந்து கொள்க. பரிவும் பண்பும் பரமஇன்பம் அருளுகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.