சர்வதேச உளநல தினம் யாவருக்கும் உளநலம்
இன்றைய காலகட்டத்தில் உடல் நலம் பற்றி வெகுவாக சிந்தித்துக்கொண்டிருக்கும் நாம் உளநலம் பற்றி ஏனோ அலட்டிக்கொள்வதில்லை. பெரும்பாலனவர்கள் இதற்கு முக்கியத்துவமும் வழங்குவதில்லை. ஒருவரின் உடல்நலம் என்பது அவரது உளநலத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒருவர் சந்திக்கும் நாளாந்த நிகழ்வுகளை, சந்தர்ப்பங்களை எவ்வாறு கையாளுகின்றார் என்பதில் அவரது மனநிலை பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றது.
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை எம்மையும் இயந்திரதனமாக சிந்திக்க வைத்தது மட்டுமன்றி விளைவாக உடலியல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கும் தோற்றுவாயாக அமைந்துவிடுகின்றது. நாளாந்த வாழ்க்கையில் எமது வீடுகளில் தொடங்கி வீதியில் பயணிப்பது தொட்டு அலுவலகங்களில் பணிகளை நிறைவேற்றும் போதும் பல்வேறுபட்ட மன அழுத்தங்களுக்கு ஆளாகவேண்டியிருக்கின்றது. என்னதான் சுயமுன்னேற்ற புத்தகங்களை வாசித்தாலும் எமக்கு நாமே உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டாலும் எம்மால் அவ்வப்போது மனஅழுத்தங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடிவதில்லை.
எமக்கு ஏற்படும் நோயின் வீரியத்தன்மை, குணங்குறிகள் , குறித்த நோய் குணமாக எடுக்கும் காலம் போன்றன எங்கள் எண்ணங்களால் கட்டுப்படுத்தப்படுவதாக அண்மைக்கால ஆராய்ச்சிகள் நிருபிக்கின்றன. எனவேதான் எமது உளத்தினை நலமாக பேணும் போதும் எமது வாழ்வியல் சார்ந்த தெளிவான புரிதல்களை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும்போதும் பெரும்பாலான பிரச்சினைகளிலிருந்து எம்மால் விடுபட முடியும். ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையினை வாழ முடியும். இது போன்ற விழிப்புணர்வுகளுக்காகவே இவ்வருட சர்வதேச உளநல தினமானது “யாவருக்கும் உளநலம்” என்ற தொனிப்பொருளில் நினைவுகூரப்படுகின்றது.
எமது நாட்டைபொறுத்த வரையில் உலகளாவிய ரீதியில் தற்கொலைகள் அதிகமாக நிகழும் நாடாக இருக்கும் அதேவேளை தற்போதய நிலவரப்படி போதைக்கு அடிமையாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. இவற்றின் நிமித்தம் பல புறக்காரணிகளை முன்வைக்க கூடியதாயிருப்பினும் ஒருவரின் அகம் சார்ந்த விடயங்களை நெறிப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மதவழிபாட்டுதலங்கள் என பலதரப்பட்ட பங்காளர்களர்களுடன் தகுந்த விழுமியங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர உளவியல் தீர்வுகளை எட்டமுடியும் என்பது எனது அபிப்பிராயமாகும். இதற்காக அடித்தளத்திலிருந்து உளவியல் கல்வி புகட்டப்படவேண்டும்.
எமது நாட்டில் சராசரியாக 500 000 நபர்களுக்கு ஒரு மனநல வைத்திய நிபுணர் என்ற வீதத்தில் உளநலம் சார்ந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. உண்மையில் இது போதாத ஓர் நிலையாகும். எதிர்ப்புறம் பொதுமக்களும் தங்களது உளநலம் குறித்து வெளியில் பேசுவதற்கோ, மனநல வைத்தியரை அணுகி ஆலோசனை பெறுவதற்கோ தயாராக இல்லை. உளநலம் குறித்து சமுகம் சார்ந்த புரிதல்கள் நேர்நோக்குக்குரியதாக இல்லாமலிருப்பதும் இதற்கு ஓர் காரணம் எனலாம். எனவேதான் நான் ஏற்கனவே கூறியதைப்போன்று அடிப்படையிலிருந்து இவ்விடயங்கள் புகட்டப்படுகையில் சமுகம் சார் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
எம்மைச்சுற்றி நடப்பவற்றை எம்மால் மாற்றமுடியாது. மாறாக அவற்றை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தினை மாற்றுவதனூடாக அவற்றுக்கு எதிர்வினையாற்றி அவை எம்பால் ஏற்படுத்தவல்ல எதிர்மறை தாக்கங்களை குறைக்கவோ, தவிர்த்துக்கொள்ளவோ முடியும். இதற்காகவே எமது மனத்தினை பண்படுத்த வேண்டியதேவை உள்ளது. ஆற்றுப்படுத்தல்களும் , உளவியல் கல்வியும் இதற்கு பெரிதும் துணைநிற்கும்.
எனவே ஒவ்வொருவரும் உளநலம் குறித்து அதிக கவனமெடுப்பதுடன் உதவிகள் தேவைப்படும் போது அல்லது எப்போதாவது உளச்சோர்வடைந்து தவறான முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் நின்று நிதானமாக யோசித்து உங்கள் மீது கரிசனை வைத்துள்ளவர் என நீங்கள் கருதும் ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள். உங்களுக்காகவே கரிசனையுடன் எந்நேரமும் சேவை வழங்குவதற்கு சுமித்ரயோ (0112682535) இலங்கை தேசிய உளவளத்துணையாளர்கள் நிறுவனம் (0718699225 , 0773680930) , சாந்தி மார்க்கம் (071-7639898) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான உளவளத்துணை நிலையம் (065-2226469) என பல நிறுவனங்களும் தயாராக உள்ளன.
எம் ஒவ்வொருவரினதும் உளநலமானது மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய சிறந்த முதலீடாகும் என்பதனை இந்த சர்வதேச உளநலதினத்தில் உணர்ந்துகொண்டு முன்னோக்கிச் செல்வோம்.
சிந்தனை:
ச.ரகுவரன்
சுகாதார விஞ்ஞான பீடம்
உளவியல் கற்கைகள் பிரிவு
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்