பாவிகள் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தண்டாங்கூர் மாசனங்காள் சற்குணர்நீர் என்றிருந்தேன்
பண்டங் குறையவிற்ற பாவிகாள் - பெண்டுகளைத்
தேடியுண்ண விட்டீர் தெருக்க டெருக்கடொறும்
ஆடிமுத லானிவரைக் கும். 203
- கவி காளமேகம்
பொருளுரை
தண்டாங்கூர் என்ற ஊரில், ஓர் ஒருந்தாயக் காலத்தில், வியாபாரிகள் பண்டங்களை அநியாயமான விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டு மனம் வெதும்பிப் பாடியது இது.
'தண்டாங்கூர் என்னும் ஊரில் இருக்கின்ற மிகவும் பெரிய மனிதர்களே! நீங்கள் அனைவருமே நல்ல குணம் உடையவர்கள்; என்று நான் இதுவரை எண்ணியிருந்தேன்.
பொருள்களைப் பெற்ற விலையின் அளவுக்கேற்பக் கொடாமல் அளவைக் குறைத்து விற்ற பாவிகளே! ஆடி முதல் ஆனிவரைக்கும் ஆண்டு முழுவதும் பெண்களைப் பொருள் தேடி உண்ணுமாறு கைவிட்டீர்களே? நீங்கள் உருப்படுவீர்களா?”
அகவிலை அதிகரித்ததால் பெண்கள் உணவுக்காகப் பொருள் தேட முனைந்த கொடுமையை எடுத்துக் காட்டிக் கடைக்காரர்களைப் பழிக்கிறார் கவிஞர்,