இறுதியில் சாம்பலென்று

கொட்டிக் கிடந்தன
சாம்பல் குவியலாக
இடுகாட்டில் !
அழைத்துக் கூறினேன்
அங்கிருந்த காவலாளியை
அப்புறப்படுத்த !
அவனும் உரைத்தான்
அவனின் மொழியில்
அதிர்ந்து போனேன் !
இருக்கும் போதுதான்
இவர்களுக்குள் மோதல்
இன்றோ ஒன்றிவிட்டனர் !
கலந்து உள்ளனரிங்கே
களைந்த சாதிவெறியுடன்
கலந்த இதயங்களாய் !
இணையட்டும் இதிலாவது
இதுதான் வாழ்வென்று
இறுதியில் சாம்பலென்று !
எரிந்துப் போகுது
எலும்பும் தோலும்
எரியாதது சாதிமதம்!
உள்ளத்தில் கொள்க
மனிதஇனம் ஒன்றேயென
உணருங்கள் இனியேனும் !
எரியுங்கள் பிரிவினையை
புரியுங்கள் வாழ்வியலை
அழியுங்கள் பேதங்களை !
பழனி குமார்
15.10.2020