ஞாலம் பழிக்கும் நவை மூன்று - பழி, தருமதீபிகை 718

நேரிசை வெண்பா

இல்லாளை அஞ்சும் இழுதையும் ஏதிலான்;
நல்லாளை நாடும் நடலையும் - கல்லாமல்
காலம் கழிக்கும் கலதியும் இம்மூவர்
ஞாலம் பழிக்கும் நவை. 718

- பழி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தனது மனைவிக்குப் பயந்து நடக்கும் பேயனும், பிறனுடைய மனையாளை விரும்பிக் களிக்கும் தீயனும், கல்லாமல் காலத்தைக் கழிக்கும் மூடனும் இவ்வுலகில் பழி நிலையங்களாம்; அவ்வாறு பழிபடாமல் வாழ்வதே விழுமிய வாழ்வாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒரு மனிதனது வாழ்க்கைக்கு இனிய துணையாய் இருப்பவள் மனைவி. வாழ்க்கைத் துணை என அவளுக்கு ஒரு பெயர் அமைந்திருத்தலால் அவளது நிலைமையும் நீர்மையும் தெரியலாகும். வீட்டிலிருந்து எல்லாக் காரியங்களையும் நன்கு நடத்துபவளாதலால் இல்லாள் என நேர்ந்தாள். இந்த இல்லாள் நல்லாளாய் அமைந்த போதுதான் அந்தக் குடும்பம் உயர்ந்து விளங்கும். அன்பு நலம் சுரந்து கணவனும் மனைவியும் பண்பு படிந்து வரின் வாழ்வு இன்பமாய்ப் பெருகி வரும். மாறுபடின் துன்பமாம். தன்னிடம் மரியாதையோடு பணிந்து ஒழுகி வரவுரிய மனைவியிடம் ஒருவன் அஞ்சி ஒடுங்க நேர்ந்தால் அவன் பஞ்சை ஆகின்றான். அச்சம் என்ற குறிப்பால் அவளது நச்சுத் தன்மையும், இவனது கொச்சை நிலையும் அறிய வந்தன. இவ்வாறு இல்லாளை அஞ்சுகின்றவன் நல்லது யாதும் செய்ய முடியாமல் அல்லலுழந்து எவ்வழியும் இழிந்து அவலமுறுகின்றான்.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்(று) எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். 905 பெண்வழிச் சேறல்

இல்லாளை அஞ்சுகின்றவனது இழிநிலையை வள்ளுவர் இங்ஙனம் விளக்கியிருக்கிறார். மனைவிக்குப் பயந்தவன் பெற்ற தாய்க்குக் கூடச் சோறு போட மாட்டாமல் மாறுபட்டு மறுகி நிற்கின்றான். பெண்டாட்டி வாய்க்குப் பயந்து பேடியாயுள்ளவர் இந்நாட்டில் கோடியாயுள்ளனர். பிழைபாடான இப்பழி நீங்கி ஆண்மகன் ஆண்மையோடு மேன்மையாய் வாழ வேண்டும். அவ்வாழ்வே இனிய வாழ்வாம்,

அயலானுடைய மனையாளை ஒருவன் மயலாய் விரும்புவது கொடிய பழியாம். நெறிகேடான இந்த விழைவால் பல தீமைகள் விளைகின்றன. மனித சமுதாயம் நீசமாய் நாசமடைவதற்கு விபசாரமே மூலகாரணமாயுள்ளது. பிறனுடைய மனைவியை ஒருவன் விழைய நேரின் அவனுடைய மனைவி அயலானைத் தழுவ நேர்கின்றாள். தலைமையான நிலையிலுள்ளவர் தவறு செய்வது பலரையும் பழிச்செயல்களைச் செய்யத் தூண்டுவது போலாம். ஒரு பழி பல பழிகளுக்கும் வித்தாய் விரிகிறது. தொற்று நோய் போல் அது விரைந்து பரவித் தேசத்தைப் பாழாக்கி விடுகிறது. கெட்ட நடத்தைகளால் மனித இனம் கெட்டு மாய்ந்து போகிறது. கேடுகள் நாடுகளை நாசம் செய்கின்றன.

பெண்மை கற்பால் பெருமையுறுகிறது; ஆண்மை சீலத்தால் மேன்மை அடைகிறது. கற்பும் சீலமும் இருபாலையும் அற்புத நிலையில் உயர்த்துகின்றன. இந்தப் புனித நீர்மைகளை மருவி வருமளவே மனித மரபு மாண்பாய் உயர்ந்து வருகிறது. வழுவிய பொழுது பழியும் பாவமும் தழுவி இழிவுற்று எவ்வழியும் அழிவுகள் விளைகின்றன.

தரும நீதிகளை உணர்ந்து நெறி நியமங்களோடு ஒழுகி வருபவர் விழுமியராய் விளங்கி மிளிர்கின்றார். சிறந்த தன்மைகள் அமைந்த போதுதான் மனிதன் உயர்ந்தவன் ஆகின்றான். ஒழுக்கத்தால் உயர்கின்றான்; இழுக்கத்தால் இழிகின்றான்.

கல்வி நல்ல அறிவை நல்கி மனிதனை மகிமைப் படுத்துகின்றது; அதனை இளமையிலிருந்தே பழகித் தெளிந்து கொள்வது சிறந்த மேன்மையாம். கல்லாது கழிந்து நின்றால் பொல்லாத மிருகமாய் அவன் இழிந்து படுகின்றான்.

பழி நிலையாளரை இழுதை முதலிய இழி மொழிகளால் வரைந்து குறித்தது. அவருடைய ஈன நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள பழி நிலையாளரை இழுதை முதலிய இழி மொழிகளால் வரைந்து குறித்தது.

இழுதை - பேதை, பேடி, பேயன். நடலை - கபடன், தீயவன், தூர்த்தன்; கலதி - மூதேவி, மடையன், முட்டாள்.

அறிவும் ஆண்மையும் நெறியும் நீர்மையும் புகழ் ஒளி பரப்பி உயர்நலங்களை விளைத்து வருகின்றன. இந்த உயர்ந்த பண்புகளை உரிமையாக வுடையவர் பெருமைகள் மருவிச் சிறந்த மேன்மக்களாய் உயர்ந்து யாண்டும் சீரும் சிறப்பும் பெறுகின்றார்.

மேலான நல்ல தன்மைகளை இழந்தவர் கீழாயிழிந்து பாழாயழிந்து யாண்டும் அல்லல்களையே அடைகின்றார்.

நேரிசை வெண்பா

புல்லர் கயவர் புலையர் கடையரெனப்
பல்லவர் கூறும் பழிமொழிகள் - அல்லல்
வழியில் இருந்து வளர்ந்து கிளர்ந்த
பழியின் விளைவே படிந்து.

பழி இயல்புகள் படிந்தபோது கயவர், கடையர் முதலான இழிமொழிகளால் மனிதர் இகழப்படுகின்றார். யாதொரு இழிவும் நேராமல் எவ்வழியும் தம்மைச் செம்மையாகப் பேணி வருபவரே நன்மையாளராய் உயர்ந்து நலம் பல பெறுகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Dec-20, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே