கடிதம் ஒன்று

அனுப்புநர்

சரவணன்,
த/பெ.தாயப்பன்
நோயாளிகள் பிரிவு
அரசு மருத்துவமனை,
கோயமுத்தூர்.

அன்புள்ள நண்பா
உன்னை சந்தித்து சுமார் நாற்பது வருடங்களாகியிருக்குமா ? இது நம் வாழ்க்கையில் கடந்து வந்த நீண்ட தொலைவு அல்லவா? இந்த தொலைவை கடக்க இந்த உலகில் நாம் எப்படியெல்லாம் போராடியிருக்கிறோம். அன்று உன்னை பார்த்த பொழுது யாரோ ஒரு முதியவர் தடுமாறிக் கொண்டு வருகிறார் என நினைத்து உன்னை பார்த்துக்கொண்டிருந்த பொழுது எதிரில் வந்த நீ என்னை சற்று நேரம் உற்றுப்பார்த்து நீங்கள்..நீ..சரவணன் தானே என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் ‘ஆம்’ என்று தலையசைக்க டேய் நான் சங்கரன் “ஜவ்வு மிட்டாய் சங்கரன்” என்று கூவி என்னை கட்டிப்பிடித்துக்கொண்டாயே. அப்பொழுது தான் உன்னை உணர்ந்து சங்கரா என்று உன்னை தழுவிக்கொண்டேன்.

. சங்கரன் என்று சொன்னது கூட எனக்கு நினைவு வரவில்லை. ஆனால் ஜவ்வு மிட்டாய் சங்கரன் என்று சொன்னவுடன் சட்டென அந்த வயதிற்கு நினைவுகள் போய் அங்கிருந்து உன்னை மீட்டு எடுத்து வந்து அடையாளம் கண்டு கொண்டேனே.

உன் அப்பா தினம் தினம் ஜவ்வு மிட்டாய் தயார் செய்து தட்டில் வைத்து தெரு தெருவாய் விற்க செல்வாயே. நானும் உன்னுடன் சுற்றி வருவேனே. அதற்கு பின் தானே உனக்கு “ஜவ்வு மிட்டாய் சங்கரன்” என்று பெயர் வந்து விட்ட்து. உடனே உன்னை அடையாளம் கண்டு பிடித்து விட்டதால் நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன் என்று சொன்னேன். அப்பொழுதாவது எனக்கு இன்னும் வயதாகவில்லை என்று ஒத்துக்கொண்டாயா? ஹூம் நீ ஒத்துக்கொள்ளவே மாட்டேனென்று விட்டாய்.

என் தலை முடி காணாமல் போயிருந்ததையும் முகம் ஒடுக்கு விழுந்து கிடந்ததையும் உடல் சுருங்கி இருந்ததையும் காட்டி என்னதான் மிக விரைவாக என்னை உன்னால் அடையாளம் கண்டு பிடித்து விட்டாலும் உன் தோற்றம் என்னை விட வயதானவனாகத்தான் காட்டுகிறது என்று சொன்னாய்.

அப்பொழுதுதான் என் தோற்றத்தை பற்றி என் அறிவுக்கு புலப்பட்டது. அதுவரை எதிரில் வந்த உன்னை பெரியவர் என்று நினைத்தற்கு வெட்கப்பட்டுக் கொண்டேன்.

எதற்கு வெட்கம்? வயதாகிவிட்ட்து என்பது நம்மால் ஒத்துக்கொள்ள முடியாத ஒரு விசயம்தானே. உள்ளத்தால் இளமையாக இருக்கும் நாம் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்வோமா?

அந்த இளமை குறும்புகள் என்பது நம்மால் மறக்க கூடியதா? நினைவு இருக்கிறதா? உன் அம்மாவுடன் என் அம்மாவும் நம் இருவரையும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வந்த பொழுது நீ என் கையில் இருந்த சிலேட்டு குச்சி வேண்டும் என்று அடம் பிடித்ததையும் உடனே என் அம்மா என்னிடம் இருந்த சிலேட்டு குச்சியை வாங்கி இரண்டாக உடைத்து ஆளுக்கு ஒன்றாய் கொடுத்தார்கள்.. இதை பார்த்த எனக்கு அழுகை அழுகையாக வர உன் முகம் சந்தோசத்தில் சிரிக்க நானும் உன் முகத்தை பார்த்து என் மனதை தேற்றிக்கொண்டு விட்டேனே?

அன்று முதல் நம்முடைய நட்பு ஆரம்பித்தது இல்லையா? இருவர் வீட்டிலும் வறுமை காரணமாக ஒரே காற்சட்டையை ஒரு வாரமாய் போட்டுக்கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்று ஓட்த்திற்கு போய் போட்டி போட்டுக்கொண்டு துவைப்போமே. நம்முடைய அம்மாமார்கள் பேசிக் கொண்டே நாம் துவைத்ததை மீண்டும் மீண்டும் துவைத்து அதை ம்ணலில் காயவைப்பார்களே. மதியம் மூன்று மணிக்கு மேல் அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லும்போது அந்த சட்டையும் சராயும் எவ்வளவு மொட மொடப்பாய் இருக்கும். அதை உடலில் தேய்த்தால் எவ்வளவு இத்மாய் இருக்கும். அந்த பசியில் கூட நமக்கு அந்த துணிகளை உடலில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு ஒட்டப் பந்தயம் வைத்து ஓடுவோமே. ஞாபகம் இருக்கிறதா?

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மூணாவது பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் மீனா மாங்காய் கொண்டு வந்து உனக்கு கொடுத்ததை நீ பத்திரமாய் வைத்து மதியானம் காக்காய் கடி கடித்து கொடுத்தாயே, அந்த சுவை இன்று எந்த உணவிலும் கிடைக்கவே இல்லையடா.

என்னைவிட நீ ந்ன்றாக மரம் ஏறுவாயே ? என்னை எப்படியாவது மரம் ஏற்றி விடவேண்டும் என்று புளிய மரத்தில் உன் கையை வைத்து என்னை துன்ப்ப்பட்டு ஏற்றி விட்டு அதன் பின் நீயும் மரம் ஏறி இருவரும் மர கிளைகளில் உட்கார்ந்து கொண்டு புளியங்காய்களை அதுவும் “தொவுறு” பழமும் இல்லாமல் காயும் இல்லாமல் நாக்கால் நக்கி கண்களில் நீர் வர சாப்பிடுவோமே.

எப்படியோ தட்டு தடுமாறி பத்தாவது வரை வந்த பின் ஒரு வாரம் இருக்குமா ? ஒரு நாள் உன் அப்பா இறந்து விட்டார் என்று என் வீட்டிற்கு ஓடி வந்து கண்ணீர் வழிய சொன்னாயே, நானும் நம்முடைய வகுப்பு நண்பர்களும் உன் கூடவே இருந்து அப்பாவின் காரியங்களை பார்த்தோமே.. நம்முடைய தலைமையாசிரியர், கூட அன்று உன் வீட்டிற்கு வந்து உன் அப்பாவிற்கு அஞ்சலி செலுத்தினாரே?
நண்பா அதற்கு பின் நீயும் உன் குடும்பமும் அந்த ஊரை விட்டு கிளம்பி விட்டீர்களே. என்னிடம் கூட சொல்லாமல் சென்று விட்டாயே? அன்றிலிருந்து ஒரு மாதம் நான் தினமும் உன் வீட்டிற்கு வந்து உன் வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து உன் நினைவுகளை அசை போட்டு அசை போட்டு செல்வேன்.

ஏன் சொல்லாமல் போனாய்? உன்னுடன் பத்து வருடங்கள் ஒன்றாய் இருந்தவன் என்னிடம் கூட சொல்லாமல் போய் விட்டாயே? ஒரு வேளை சொன்னால் அழுது விடுவோம் என்றுதான் சொல்லாமல் போனாயோ? பத்தாவது முடிந்தவுடன் என்னாலும் அதற்கு மேல் படிக்க முடியவில்லை. வீட்டில் கஷ்டம் தாங்க முடியாமல் ஒரு கம்பெனியில் சித்தாளாய் வேலைக்கு சேர்ந்து விட்டேன். அதன் பின் நண்பா என் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே ஆகி விட்ட்து. என்னால் முடிந்த வரை உழைத்து என் குடும்பத்தை கரை சேர்த்து விட்டேன்.
அதற்கு பின் எனக்கு என்று ஒரு மகராசி வந்தாள். அவளால் என்னுடன் பதினைந்து வருடங்கள் கூட வாழ முடியாமல் போய் சேர்ந்து விட்டாள். அதற்குள் இரு குழந்தைகளை பெற்று என்னிடம் விட்டு விட்டு போய் விட்டாள். அவர்களை வளர்க்க அதன் பின் நான் பட்ட பாடு
ஒரு வழியாக என்னால் முடிந்த வரையில் அவ்ர்களை கரையேற்றி அனுப்பி விட்ட பின்னால் என்னை கவனிக்க அதன் பின் ஒருவரும் இல்லை. உடல் ஒத்துழைக்காததால் என்னை பணியில் இருந்து விலக்கி விட்டார்கள். நான்கு வருடங்கள் அதன் பின் எப்படியோ ஓட்டி விட்டேன். அதன் பின் சொல்லவே வெட்க்மாக இருக்கிறது நண்பா. அன்று உன் எதிரில் நின்ற நான் பிச்சை எடுப்பதற்காகத்தான் நின்று கொண்டிருந்தேன்.

நீ என் பெயர் சொல்லி என்னை அழைத்தவுடன் நான் அப்படியே என்னை மாற்றி உன் முன் நாடகமாடினேன். உன்னிடம் உண்மையை சொல்லி இருக்கலாம், ஆனால் நம் நட்பின் இறுதி காலத்தில் சந்திக்கும்போது இப்படியா இருக்க வேண்டும் என்று நீ நினைத்து விடக்கூடாது நண்பா.

விடை பெறுகிறேன் நண்பா இந்த உலகத்தை விட்டு..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Dec-20, 9:05 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaditham ondru
பார்வை : 98

மேலே