ஒரு மெல்லிய புன்னகை
'என்னப்பா வண்டி ஓட்டுறே.கொஞ்சம் சீக்கிரமா போப்பா.எத்தனை தடவை சொல்லுறது'என்று ஆட்டோ காரரை கடிந்துகொண்டாள் தீபா."நா என்னம்மா செய்றது?ரோடு எவ்ளோ மோசமா இருக்கு.எப்புடி வேகமா போறது"என்று பதிலுக்கு தன் பக்க நியாயத்தை சொன்னார் அந்த ஆட்டோகாரர்.அவர் சொல்வதும் உண்மைதான்.அந்த சாலை குண்டும் குழியுமாகதான் இருந்தது.சர்க்காருக்கு இதையெல்லாம் கவனிக்கதான் நேரமேது?...அந்த ஆட்டோவின் ஆட்டத்திற்கு ஏற்ப,தீபாவின் கைபேசி இசைக்க தொடங்கியது.எடுத்து பேசினாள்.எதிர்புரத்தில் ஒரு பெண்ணின் குரல்கேட்டது.அவள்வேறுயாருமில்லை.தீபாவின் நெருங்கிய தோழி ரமாவின் அம்மா சுந்தரிதான்.அவளுடைய சூழ்நிலையில் யார் இருந்தாலும் பதற்றமாகத்தான் செய்வார்கள்."எங்கம்மா வர்ற தீபா"என்று கேட்டாள் சுந்தரி....."இதோ,இன்னும் பத்து நிமிஷத்துல ஆஸ்பத்திரி வந்துடுவெம்மா"....இது தீபாவின் குரல்...."டாக்டர் ரெண்டு தடவை கேட்டுட்டாரும்மா.கொஞ்சம் சீக்கிரம் வந்துடும்மா"என்றாள் சுந்தரி அதே பதற்றத்துடன்."சரிம்மா.நா வந்துடுறே.பயப்படாதீங்க.பணம் ரெடி பண்ணிட்டே" என்று சொல்லிக்கொண்டே கைபேசிக்கு ஓய்வுகொடுத்தாள் தீபா.தீபாவும்,ரமாவும் நெருங்கிய தோழிகள்.பள்ளிப்பருவத்திலிருந்தே அவர்களின் நட்பு தொடங்கியது.தீபா வீடும்,ரமா வீடும் ஒரே தெருதான்.ரமா அப்பாவை சிறிய வயதிலேயே பறிகொடுத்தவள்.வீட்டுக்கு ஒரே பெண்.சுந்தரி அவளை கூலி வேலை செய்து வளர்த்து ஆளாக்கினாள்.தீபாவும் ஒரு சாதாரண வீட்டு பெண்தான்.அவள் அப்பா ஒரு டைலர்.அம்மா வீட்டு வேலைகளை கவனிப்பாள்.இவளும் படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.சம்பளம் பெரிய அளவில் இல்லை என்றாலும்,செலவுக்கு ஆகுமே என்பதால் வேலைக்கு செல்கிறாள்.தீபாவுக்கு திருமணம் செய்ய அவள் அப்பா கங்காதரன் ஏற்பாடு செய்திருந்தார்.மாப்பிள்ளை படித்தவர்.கலெக்டர் ஆபீஸில் எழுத்தராக இருக்கிறார்.எனவே தட்சணையாக இருபத்தைந்து சவரன் கேட்டிருந்தார்கள் மாப்பிள்ளை வீட்டில்.கொஞ்சம் கொஞ்சமாக குருவி போல கங்காதரன் சேர்த்துவைத்திருந்தார்.அதுபோக கொஞ்சம் கடனும் வாங்க நினைத்திருந்தார்.தட்சணை கொடுப்பது தீபாவுக்கு பிடிக்கவில்லை.அவள் அப்பாவிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.அவளும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாள்.அந்த குண்டும்,குழியுமான பாதையிலும் ஆட்டோ எப்படியோ பயணம் செய்து அதன் இலக்கை அடைந்துவிட்டது.தீபா ஆட்டோவை விட்டு இறங்கினாள். வைத்திருந்த பையையும் அவளுடன் எடுத்துக்கொள்ள மறக்கவில்லை.அவளுக்கு இருந்த அவசரத்தில் ஆட்டோவிற்கு பணம்கொடுக்க மறந்தவளாக,மருத்துவமனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்."அம்மா,ஆட்டோக்கு காசு"என்றவாறே தன் இருக்கையை விட்டு இறங்கினார் அந்த ஆட்டோகாரர்."மன்னிச்சிடுங்க.மறந்துட்டே"என்றவாறே பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு,மீண்டும் தன் அவசர நடையை தொடர்ந்தாள்.ரிசெப்ஷனில் நின்றிருந்த நர்சிடம்,ஐசியு எங்கே இருக்கு?என கேட்டாள்.நேரா போய் இடது பக்கம் திரும்புங்க....என்று சொன்னாள் அந்த நர்ஸ்.அவளும் வேகமாக நடந்து சென்றாள்.அறைக்கு வெளியே சுந்தரி நின்றிருந்தாள்.தீபாவை பார்த்தவுடன் அவள் முகத்தில் ஒரு ஒளி பிரகாசித்தது."வா தீபா,வந்துட்டியா"என்று சொல்லிக்கொண்டே வந்தவள்,அவள் அருகே வந்ததும் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்."அழாதீங்கம்மா,அதான் நா வந்துட்டேனே.அப்புறம் என்ன.நம்ம ரமாவுக்கு ஒன்னும் ஆகாது.அவள் நல்லபடியா இருப்பா"என தன் மனதில் உள்ள சோகத்தை மறைத்துக்கொண்டு,அவளை சமாதானப்படுத்தினாள் தீபா."எப்டிமா அழாம இருப்பது.ஒரே பொண்ண பெத்து,அவ காலத்துக்கும் கஷ்டப்பட்டா.இப்போ இப்டி ஆயிடுச்சு"என்றாள் சுந்தரி.."சரிம்மா.நேரமாகிட்டே இருக்கு.நா போய் பணம் கட்டிட்டு வந்துடுறே"என்று சொல்லிக்கொண்டே,பணப்பையை கையிலெடுத்துக்கொண்டு,பணத்தை கட்ட கிளம்பிச்சென்றாள் தீபா.ஆப்ரேஷனுக்கு பணம் கட்டிவிட்டு மருத்துவரை பார்த்து விவரம் கேட்டாள் தீபா."தலைல நல்லா அடிபட்டு இருக்கு.ரோடு கிராஸ் பண்ணும்போது வந்த லாரிதான் அடிச்சிருக்கு.ஆபரேஷன் பண்ணாலும் பொழைக்க வாய்ப்பு கம்மிதான்.முயற்சி பண்ணலாம்"என்றார் மருத்துவர்.அதை கேட்டதும் தீபாவுக்கு தலையே சுற்றியது.உலகமே இருண்டது.கண்கள் கண்ணீரை சிந்தின.நா தழுதழுக்க "எப்படியாச்சும் அவளை காப்பாத்துங்க டாக்டர்" என்றாள்."என் கையில என்னமா இருக்கு.எல்லாம் இறைவன் கைல.நாங்க இப்பவே ஆப்பரேஷன் ஏற்பாடு பண்றோம்"என்று சொன்னார் மருத்துவர்.தீபா அந்த அறையை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்தாள். சுந்தரியிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.சிறிய வயதிலேயே கணவனை இழந்தவள்.அவள் உயிராக நினைத்த மகளும் இப்பொழுது இல்லை என்றால் அவள் கதி? .கண்கள் சுந்தரியை பார்த்துவிட்டு.கால்கள் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தன."என்னம்மா ஆச்சு"என்ற எதிர்பார்ப்போடு வந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை தீபாவுக்கு.மனதை திடப்படுத்திக்கொண்டவளாக பேச ஆரம்பித்தாள்."ஆபரேஷன்க்கு பணம் கட்டியாச்சு.இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிச்சிடுவாங்க.பயப்பட ஒன்னுமில்லம்மா"என்றாள் அவள் பயந்துகொண்டே.அங்கே இருந்த இருக்கையில் தீபா அமர்ந்தாள். சுந்தரி கீழே உட்கார்ந்து,ஏதோ யோசனையில் இருந்தாள் அழுதுகொண்டே.கொஞ்சநேரத்தில் நர்ஸ் அங்கே வந்தாள்.பேஷண்ட்க்கு கல்யாணமாயிடுச்சா? என கேட்டாள்.இல்லை என தீபா சொல்ல,சுந்தரியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்பிச்சென்றாள் அந்த நர்ஸ்.சிறிதுநேரத்தில் இரண்டுபேர் வந்து அறைக்குள் சென்று ரமாவை தூக்கி ஸ்டரச்சரில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.அவள் தலையில் பலத்த அடியால் கட்டு போடப்பட்டிருந்தது.முகமெல்லாம் காயங்களாக இருந்தது.அவளை பார்த்ததும் இருவரும் கதறி அழுதனர்.தாயன்பும்,நட்பும் அவர்களை அழவைத்ததில் ஆச்சரியமில்லை.அறுவைசிகிச்சை அறைக்குள் கொண்டுசென்றனர்.வெளியே இப்பொருத்தப்பட்டிருந்த சிவப்பு விளக்கு எரிய தொடங்கியது.இருவரும் ஆளுக்கொரு மூலையில் நின்றுகொண்டு,அழுதுகொண்டிருந்தனர்.நேரம் அதிகரிக்க அதிகரிக்க இருவரின் மனமும் படபடத்தது.அதற்குள் தீபாவின் அம்மாவும்,அப்பாவும் அங்கே வந்து சேர்ந்தனர்.இருவரின் முகத்திலும் கலவரம்.வந்த வேகத்தில் "என்னாச்சு தீபா" என்றார் கங்காதரன் படபடப்புடன்."ஆபரேஷன் நடக்குதுப்பா.முடிஞ்சதும்தான் என்னனு தெரியும்" என்றாள் தீபா."கணவர் எங்கேனு கேட்டிருப்பாங்களே?என்ன சொன்னீங்க?....என்றாள் தீபாவின் அம்மா ."கல்யாணம் இன்னும் ஆகலன்னு பொய் சொல்லிட்டோம்.அம்மாதா கையெழுத்து போட்டாங்க"என்றாள் தீபா மெதுவாக.......ஆம்.உண்மைதான்.ரமாவுக்கு கல்யாணம் ஆகி இருந்தது.அவன்தான்.அவனேதான்.அந்த அபலை பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி,கல்யாணம் செய்துவிட்டு,வரதட்சணை கேட்டு தினமும் அவளை அடித்து கொடுமை படுத்தினானே அவன்தான்.ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுமை தாங்காமல் யார் முகத்தில் தாலியை கழற்றி வீசிவிட்டு வைராக்கியமாக வந்தாளோ,அவன்தான்.ஆனால் இப்போது அவன் இருக்கும் திசை கூட தெரியாது.அவன் கடந்த காலத்தில் வந்து போன கதாபாத்திரம்.அவ்வளவுதான்.சிவப்பு விளக்கு அணைந்தது.எல்லோரும் பதற்றத்துடன் கதவருகே சென்றனர்.மருத்துவர் வெளியே வந்தார்."ஆபரேஷன் முடிந்தது.ஆனால் இரண்டு நாளைக்கு பிறகுதான் உறுதியா சொல்ல முடியும்.அதுவரை ஐசியு ல இருக்கணும்" என்றார்.அனைவரின் முகத்திலும் கவலை குடி கொண்டது.சிறிது நேரத்தில் அவள் ஐசியு க்கு மாற்றப்பட்டாள்.இரண்டுநாட்கள் ஓடி விட்டன.ரமா கண் திறக்கும்போது அருகே தீபாவுக்கு,சுந்தரியம் இருந்தனர்.அவள் அழுதாள்.அவர்களும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்."என்னாச்சு ரமா" என்றாள் தீபா."ரோடு கிராஸ் பண்ணும்போது ஒரு மினிலாரி வந்து இடிச்சு தள்ளிட்டு போய்ட்டான்" என்றாள் ரமா.அப்போது கங்காதரன் உள்ளே வந்தார்.ரமாவை நலம் விசாரித்தார்.அவர் கொண்டுவந்த பழங்களை பங்கஜத்திடம் கொடுத்தார்.ரமா பேச்சினூடே மெதுவாக கேட்டாள்,"அம்மா,எப்படி பணம் ரெடி பண்ணுன"....."நா எங்க ரெடி பண்ணேன்.தீபாக்கு கால் பண்ணேன்.அவதான் பணத்தோட வந்தா" என்றாள் பங்கஜம்."தீபா,இவ்ளோ பணம் எப்டிடி ரெடி பண்ணுன?"...மீண்டும் ரமா......."இல்லடி.என்னோட கல்யாணத்துக்காக இருந்த எல்லா பணத்தையும் கொண்டுவந்துட்டே" என்றாள் தீபா."என்னடி சொல்ற.இப்போ மாப்ள வீட்ல என்ன சொல்லுறது?" என கேட்டாள் ரமா."உன்னவிட எனக்கு அந்த மாப்ள முக்கியமில்லை.வரதட்சணை வாங்குற அவனை கட்டிக்கிட்டா எனக்கும் உங்கதிதான்.பணம் முக்கியம்னு சொல்ற அவனை விட எனக்கு நீதாண்டி முக்கியம்.எனக்கு வேற மாப்ள கிடைப்பான்.ஆனா இன்னொரு ரமா கிடைப்பாளா?" என்று சொல்லி வாயை மூடவில்லைI,அவளை அப்படியே கட்டி அணைத்துக்கொண்டாள் ரமா.அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது.அழுதுகொண்டே தீபா தன் அப்பாவை பார்த்தாள்,அவள் பார்வையின் கேள்வியை புரிந்துகொண்ட அவரிடமிருந்து பதிலாக கிடைத்தது ஒரே ஒரு மெல்லிய புன்னகை.....