அந்த உலகத்தில் அவள்

அவளுக்கு வயது முப்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.பார்க்க திருத்தமான முகத்துடன் அழகாக இருப்பாள்.ஒரு தனியார் நிறுவனத்தில் அவள் வேலை செய்து வந்தாள்.பிறந்தஉடனே தன்னுடைய தாயை பறிகொடுத்தவள்.உறவு என சொல்லிக்கொள்ள அவளுக்கு தன்னுடைய அப்பாவை தவிர வேறு யாருமில்லை.கூடப்பிறந்தவர்கள் என சொல்லிக்கொள்ளவும் யாருமில்லை.அவளுடைய அப்பா ஒரு நிறுவனத்தில் வேலை செய்து தன் மகளை காப்பாற்றினார்.ஆனால் அவளிடம் அன்பு காட்ட அவருக்கு நேரமில்லை.அவளிடம் உட்கார்ந்து,அவளுடன் பேச அவருக்கு தருணங்கள் அமையவில்லை அல்லது அவர் அமைத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை.பணம் சம்பாதித்து,மகளை வளர்த்தால் போதும் என்று இருந்தது அவரின் நிலைப்பாடு.அவளுக்கு அந்த சிறுவயதுமுதலே அன்புகாட்ட யாருமில்லை.அவ்வளவாக யாரிடமும் பேசமாட்டாள்,பழகமாட்டாள்.அவளுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக நெருங்கிய தோழிகள் யாருமில்லை.தனிமையும், அமைதியும் புடைசூழ, அவள் வாழ்க்கை பயணம் தொடர்ந்தது.எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டாள்.அவள் அப்பாவிற்கு தெரிந்தவர் மூலமாக ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது.இதெல்லாம் அவள் வாழ்க்கையில் பழைய நினைவுகள்.அவளுடைய அப்பா கொஞ்சநாள் முன்னால்தான் ஓய்வு பெற்றார்.ஓய்வு பெற்ற அவருக்கு துணையாக அவர் வீட்டு மர நாற்காலி இடம் கொடுத்தது.ஒரு சோடாப்புட்டி கண்ணாடியும்,ஒரு நாளிதலும்,அந்த நற்காலியும் போதுமென அவர் நினைத்துவிட்டார்.இருந்தாலும் அவருக்குள் ஒரு பெரிய மனக்குறை இருக்கத்தான் செய்தது.பெற்ற ஒரே மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்ற மனக்குறையை விட அந்த தகப்பனுக்கு வேறு என்ன மனக்குறை இருந்து விட போகிறது?....அவரும் எத்தனையோ தடவை அவளிடம் சொல்லிபார்த்தார்.அவள் கேட்கவில்லை.அவளுக்கு ஏனோ தெரியவில்லை,திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை.இந்த பிரச்சினையால் அவர்கள் இருவரும் சரியாக பேசிக்கொள்வதே கிடையாது.வேலை முடிந்து வந்ததும்,சமையல் செய்து அவரை சாப்பிடசொல்லிவிட்டு,அறைக்குள் சென்று கதவை தாழ் போட்டுக்கொள்வாள்.அது அவளுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.சிறுவயதிலிருந்து கிடைக்க வேண்டிய நட்பு,அன்பு,பாசமெல்லாம் கிடைக்காததால்,அந்த மன அழுத்தம் அவளுக்குள் மனநோயாக மாறத்தொடங்கியது.அவள் எந்த அன்புக்காக ஏங்கினாளோ,எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ நினைத்தாளோ,அப்படி எந்த ஒரு கதாபாத்திரமும் நிஜ வாழ்க்கையில் தனக்கு கிடைக்காததால்,இது எல்லாவற்றையும் அவள் கற்பனை செய்ய ஆரம்பித்தாள்.தன் மனதிலேயே,எங்கேயோ பார்த்த முகங்கள்,கற்பனை முகங்கள்,தனக்கு தெரிந்தவர்கள்,தன்னை சுற்றி உள்ளவர்கள்,தன்னுடன் படித்தவர்கள்,தன்னோடு வேலைபார்ப்பவர்கள் என எல்லோருக்கும் ஒவ்வொரு கதா பாத்திரங்கள் கொடுத்து,ஒரு கதை உருவாக்கி,அதில் இவளும் ஒரு கதாபாத்திரமாக வாழ ஆரம்பித்தாள்.தான் வேலை செய்யக்கூடிய நேரம் போக மற்ற நேரங்களில் தன் சிந்தனையை கொண்டு இந்த கதாபாத்திரங்களுடன் பழக ஆரம்பித்தாள்.நாளுக்கு நாள் இந்த மனநோய் அவளுக்குள் அதிகரித்துக்கொண்டே போனது.மன நோயின் உட்சகட்டம் நாம் அறிந்ததுதான்.அவள் தானாக பேச,சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.தனிமையில் மட்டும்.இவளுடைய வாழ்க்கை இப்படி ஆக எது காரணம்? இந்த சமுதாயம்தான் என்று சொன்னால் மிகையாக இருக்காது.வாழ வேண்டிய வாழ்க்கையை நிஜத்தில் வாழ முடியாத நிலையில்,இங்கு ஒருத்தி கற்பனையில் வாழ ஆரம்பித்துவிட்டாள்.அவளும் எத்தனை நாள்தான் ஜன்னலோரம் நின்று தெருவை வேடிக்கை பார்ப்பாள்?எத்தனை நாள்தான் அந்த வீட்டின் சுவர்கள் அவளை பார்த்து ஏளனமாக சிரிப்பதை பொறுத்துக்கொள்வாள்?தனிமையை தேர்ந்தெடுத்த அவளை அரவணைத்து ஆதரித்து பாசம்காட்டி,அவளோடு பேசி மகிழ,இந்த சமுதாயம் தயாராக இல்லை.அடுத்தவர்களை ஏளனம் செய்வதை பெருமையாக நான்கு பேர் முன்னாள் காட்டி சந்தோஷப்பட நினைக்கும் இந்த சமுதாயத்திற்கு எங்கே தெரிந்துவிடப்போகிறது அவளின் கஷ்டங்கள்.பக்கத்துவீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் நெடுங்காலமாக வீட்டில் குடியிருக்கும் மக்களுக்கு எங்கே தெரியும் அடுத்தவர்கள் மனம்.அவளின் தலையணைக்கு மட்டுமே தெரியும் அவளின் கண்ணீரின் வலி.இப்போது அவளோ ஒரு மனநோயாளி.இரண்டு உலகங்களில் வாழ ஆரம்பித்துவிட்டாள்.அந்த உலகத்தில் யாருக்கோ திருமணம் என கற்பனை செய்கிறாள்.அதன் விளைவு,இந்த உலகத்தில் கடைக்கு சென்று புது துணி வாங்கி வருகிறாள்.திரும்ப அந்த உலகத்தில் அந்த புது துணிகளை உடுத்தி கல்யாணத்திற்கு செல்கிறாள்.இந்த உலகத்தில் அந்த துணிகளை துவைக்கிறாள்.ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன.இப்போது அவள் அப்பா அவள் எதிர்பார்த்த படி அன்பு காட்டுகிறார்.சாப்பாடு ஊட்டுகிறார்.அன்பாய் பேசுகிறார்.ஆனால் அவளுக்கு அதெல்லாம் தெரியவில்லை.காரணம்,இப்போது எல்லாநேரமும் அந்த உலகத்தில் அவள்.....

எழுதியவர் : முஹம்மது இனியாஸ் (26-Apr-21, 9:23 am)
சேர்த்தது : Mohamed iniyas
பார்வை : 150

மேலே