அரவணைப்பு

இரவு எட்டு மணி.எதிரே வருவது யார் என்பதை கூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு கும்மிருட்டு.வேகவேகமாக நடைபோட்டு வந்துக்கொண்டிருந்தான் சுந்தர்.அவனுக்கு அந்த இருட்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை பழகிபோன ஒன்றுதான்.அன்றைய நாள் அந்திப்பொழுதில் வானம் மழைபொழிந்துவிட்டு அப்பொழுதுதான் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது.அந்த மழையில்,பள்ளத்தில் நிரம்பி இருந்த நீரை அந்த கும்மிருட்டிலும் அவன் கண்டுக்கொள்ள தவறவில்லை.அந்த பள்ளத்தை வேகமாக ஒரு தாண்டு தாண்டினான்.அவன் காலில் போட்டிருந்த செருப்பு அறுந்துவிட்டது.அதை அவன் இரண்டு நாட்களாகவே எதிர்பார்த்து இருந்தான்.அறுந்த செருப்பை கைகளில் எடுத்துக்கொண்டுவேகமாக நடக்கத்துவங்கினான்.பெய்த மழையால் மண் எழுப்பிய மண்வாசனையை பிரிய மணமில்லாத காற்று,இன்னும் தன்னுடனேயே தக்கவைத்துக்கொண்டிருந்தது.இரவு தங்கிவிட்டு காலையில் போகலாம் என அவன் அக்கா சொல்லியும்,அப்பாமட்டும் வீட்டில் தனியாக இருப்பார் என சொல்லி அவன் கிளம்பி வந்துவிட்டான்.வேகமாக நடந்துவந்த அவன் கால்கள் சீக்கிரமே பஸ்ஸ்டாண்ட் வர தவறவில்லை.பஸ் ஸ்டாண்டில் ஒரே ஒரு பெரியவர் மட்டுமே இருந்தார்.அவரது முதுமை அவரை நிற்க விடாமல் உட்கார வைத்திருந்தது.தெருவில் ஒரே ஒரு மின்விளக்கு மட்டும் பளிச்சென்று எரிந்துகொண்டிருந்தது.எதிரே இருந்த பெட்டிக்கடைகாரர் கடையை பூட்டிக்கொண்டிருந்தார்.பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த பெரியவரை சுந்தர் ஏறெடுத்து பார்த்தான்.பரட்டை தலை,மெலிந்த உடல்,குழிவிழுந்த கண்கள்,அழுக்கடைந்த உடை என பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார்.அதே கணம்,அவன் எதிர்பார்த்துவந்த அந்த கடைசி பேருந்து,அவன் அருகே மெதுவாக வந்து நின்றது.சுந்தர் முதலில் பேருந்தில் ஏறி,இன்னொருவர் அருகே இருந்த இருக்கையில் இடம்பிடித்து உட்கார்ந்தான்.அந்த பெரியவர் தன்னால் முடிந்த அளவு முயற்சி எடுத்து,தட்டுத்தடுமாறி பேருந்தில் ஏறினார்.அவருக்கு இருக்கை கிடைக்கவில்லை. பயணிகளை சுமந்துகொண்டு அந்த பேருந்து தன்னுடைய கடமையை செவ்வனே செய்ய தன் பயணத்தை துவங்கியது.அடுத்த நிறுத்தத்தில் சுந்தர் அருகிலிருந்தவர் இறங்க,சன்னலோரமாக தள்ளி அமர்ந்தான் சுந்தர்.அந்த வயதான பெரியவர் மெதுவாக வந்து அவன் பக்கத்தில் அமர்ந்துகொண்டார்.பேருந்து நகர ஆரம்பித்தது.சன்னல் வழியாகவந்த அந்த குளிர்ந்த காற்று சுந்தரின் தலைமுடிகளை வருடிசெல்ல,அந்த இயற்கையின் சுகத்தை அனுபவித்தவாறு பயணிக்க ஆரம்பித்தான் .அந்த பெரியவரோ தன்னுடைய கையிலிருந்த பழைய மஞ்சப்பையை எடுத்து,அதிலிருந்த சில்லறை காசுகளை ஒவ்வொன்றாக எண்ணத்தொடங்கினார்.இப்போது எதேச்சையாக திரும்பிய சுந்தர்,அவரை கவனித்தான்.அதே பரட்டைத்தலை பெரியவர்.அவனை கண்டுகொள்ளாமல் அந்த பெரியவர் தன்னுடைய சில்லறை காசுகளை எண்ணிக்கொண்டிருந்தார்.அவனுக்குள் அவரிடம் பேசவேண்டுமென தோன்றியது.ஆனால் காரணம் தெரியவில்லை.மெதுவாக பேச ஆரம்பித்தான்.அய்யா எந்த ஊரு போறீங்க?...அவன் முகத்தை ஏறெடுத்துப்பார்த்த பெரியவர்,தன் வேலையை தொடர்ந்தவாறே பதில் சொன்னார்,மொரப்பூர் போறேன் தம்பி.இங்க என்னோட பையன் வீடு இருக்கு.அங்க வந்துட்டு போறேன்....என்றார்.அதற்கு மேல் என்ன பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை.அவரே பேச்சை தொடர்ந்தார்.எனக்கு ஒரு மகளும்,மகனும் தம்பி.ரெண்டு பேருக்கும் கல்யாணமாச்சு.பையன என் தங்கச்சி மகளுக்கு கட்டிவச்சேன்.....பொண்ண பிரத்தில குடுத்துருக்கு....பக்கத்துலதா இருக்கு.பையன் கல்யாணமாகி கொஞ்சநாள்லயே தனியா இங்க வந்துட்டான்,என்றார்.உங்க மனைவி என்ன பண்றாங்க,என கேட்டான்.மகராசி.பூவும் பொட்டுமா சுமங்கலியா அவ போய் சேர்ந்துட்டா தம்பி.நா மட்டும் இங்கே கிடந்து கஷ்டப்படுறே...என்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டார்.அந்த பெருமூச்சே அவர் பட்ட கஷ்டங்களை விவரித்தது.உங்க பசங்க உங்களுக்கு எதுவும் உதவி பண்றதில்லையா?என அவன் கேட்க,டிக்கெட் வாங்க சொல்லி அவர்கள் அருகே வந்து நின்றார் நடத்துனர்.தான் எண்ணி வைத்திருந்த சில்லறைகாசுகளை எடுத்து,பெரியவர் நடத்துனரிடம் கொடுக்க,நா பணம் கொடுக்குறே அய்யா,நீங்க வைங்க,என்றான் சுந்தர்.இல்ல தம்பி.எனக்கு பணத்துக்கெல்லாம் ஒன்னும் கஷ்டமில்ல,நா வச்சிருக்கே,என்றார் பெரியவர்.நடத்துனர் டிக்கெட் கொடுத்ததும் அதைவாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார் பெரியவர்....என் பையன் என்னோட இல்ல.அவனுக்கு என்னை வச்சிக்குறது பெரிய சுமையா நெனச்சுட்டான்.என் பொண்ண கொஞ்சம் வசதியான எடத்துல கட்டிக்கொடுத்திருக்கு.பொண்ண கொடுத்த இடத்துக்கு அடிக்கடி போக சங்கடமா இருக்கு.அப்பப்போ பேரப்புள்ளைங்களை பாக்க மகன் வீட்டுக்கு வருவே.ஒரு நாள் முடிஞ்சதும் நூறு ரூபாவ கைல கொடுப்பான்.நா வந்துடுவே...என்றார்.கதையை கேட்டுக்கொண்டே பேருந்து படிக்கட்டு பக்கம் சுந்தர் பார்க்க,ஒரு பெண் தன்னுடைய குழந்தையை தூக்கிக்கொண்டு பேருந்தில் ஏறி,இவர்கள் அருகில் வந்து நின்றாள்.உங்க செலவுக்கு என்ன பண்றீங்க அய்யா?என அவன் கேட்க,நா ஒரு பசுமாடு வச்சிருக்கே தம்பி.இப்போ அதா எனக்கு சோறு போடுது.இந்த காலத்து பசங்க பெத்தவங்களையெல்லாம் கடைசி காலத்துல கவனிக்கிறத பாரமா நினைக்கிறாங்க தம்பி.நா என்ன புள்ளகிட்ட காசு பணம் எதுவும் கேட்கல தம்பி.கடைசிகாலத்துல பேரப்புள்ளைங்களோட இருக்கணும்னுதான் ஆசைப்படுரே.ஆனா என் பையனுக்கு அது புரியல.என சொல்லிய அந்த பெரியவரிடம் அதற்கு மேல் ஒன்றும் கேட்க தோணவில்லை அவனுக்கு.அந்த பெண்ணின் கையிலிருந்த குழந்தை வாயில் எச்சில் ஒழுக அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது.ஒரு நூறு ரூபாயை எடுத்து அந்த பெரியவரிடம் அவன் நீட்டினான்.இல்ல தம்பி.பணமெல்லாம் வேணாம்.என்றார் பெரியவர்.அவன் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் மறுத்துவிட்டார்.சுந்தர் இறங்கவேண்டிய இடம் வந்ததும்,அந்த பெரியவரிடம் நன்றி சொல்லிவிட்டு வேகமாக கீழே இறங்கினான்,வீட்டில் தனியாக இருக்கும் தன் அப்பாவை பார்க்க.....இதோ இங்கு ஒரு புதிய தலைமுறை,பழைய தலைமுறையை ஆதரிக்க முடிவெடுத்து நடக்க ஆரம்பித்துவிட்டது.....

எழுதியவர் : முஹம்மது இனியாஸ் (26-Apr-21, 9:25 am)
சேர்த்தது : Mohamed iniyas
Tanglish : aravanaippu
பார்வை : 179

மேலே