சுருக்குப்பை

குழிவிழுந்த கண்கள்,சுருங்கிய தோல்,ஒட்டிப்போன கன்னங்கள் என்பதெல்லாம் அவளுக்கே உரித்தான அடையாளங்கள்.பத்தாததற்கு அவள் முதுகும் லேசாக வளைந்தே இருக்கும்.அவள் இடுப்பில் எப்போதும் ஒரு சுருக்குப்பை தொங்கிக்கொண்டேஇருக்கும்.அவளுக்கென்று அவளை போலவே சில தோழிகள்.பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்பாள்.என்னதான் பேசுவாளோ?. ஆனால் பேசுவாள்.அவளுக்கு மட்டும் மூன்று கால்கள்.ஆம்.ஊன்றி நடக்க அவள் பயன்படுத்தும் அந்த கம்புதான்அவளின் மூன்றாவது கால்....என் அம்மாதான் அவளின் ஒரேபெண்குழந்தை.அதனால் என் மாமாவை விட, என் அம்மா மீது அவளுக்கு அளவுகடந்த பாசம்.அந்த பாசமகளின் வயிற்றில் பிறந்ததாலோ என்னவோ,என் மீதும் அதே பாசத்தை காட்டி வளர்த்தாள்.அவள் இடுப்பில் தொங்கும் அந்த சுருக்குப்பைதான் அவள்கஜானா.எந்நேரமும் அதில்சில்லறைகாசுகளுக்கு பஞ்சமே இருக்காது."காசு வேணும்" என கேட்டால் போதும்,உடனே அவள் அந்த சுருக்குப்பையை எடுத்து,அதன் கழுத்தை இறுக்கிக்கொண்டிருக்கும் கயிற்றை தளர்த்தி,சில்லறைகாசுகளை எடுத்து தருவாள்.அப்படி தருவது அவளுக்கு தினமும் வாடிக்கையான ஒன்றுதான்.எங்கள் வீட்டு திண்ணைதான் அவளுக்கு சிம்மாசனம்.அந்ததெருவில் பல்லில்லாத கிழவிகள் எல்லோரும் அவள் தோழிகள்.எல்லோரும் ஒன்று கூடும் இடமும் அந்த திண்ணைதான்.அந்திநேரத்தில் அனைவரும் உட்கார்ந்து,"அந்த காலத்துல நாமல்லாம்"என பேச ஆரம்பித்தால்,இரவுவரை பேசிக்கொண்டே இருப்பார்கள்.அவள்தான் சபைக்கு தலைவி.என்னை யார் எதுசொன்னாலும் பொறுத்துக்கொள்ள மாட்டாள்.என் அம்மாவைக்கூட ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டாள்.ஒருமுறை வாத்தியார் என்னை பிரம்பால் அடித்துவிட்டார் என்பதற்காக,பள்ளிக்கூடம் சென்று,அத்தனை பேரும் கூடி நின்று பார்க்கும்படி அவரோடு சண்டை போட்டுவிட்டு வந்தாள் என்ற நினைவு.இதெல்லாம் எங்களின் கடந்தகாலம்.இப்போதோ என் வயது இருபத்து ஐந்தை நோக்கி பயணமாகிக்கொண்டிருக்கிறது.நான் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துக்கொண்டிருக்கிறேன்.அம்மாவும் என்னுடன் இருக்கிறார்.அவள் கிராமத்தில் என் மாமா வீட்டில் இருந்தாள்.எப்போதாதாவது வருடத்திற்கு ஒருமுறைதான் அவளை சென்று பார்க்க எனக்கு அனுமதி கொடுத்தது ,இந்த நகர்ப்புற எந்திர வாழ்க்கை.தொடர்ச்சியாக நான்குநாட்கள் விடுமுறை கிடைத்தது.அவளை சென்று பார்க்க என் இதயம் என்னை தூண்டியது.நான் அவளை பார்க்க கிராமத்திற்கு கிளம்பினேன்.கிராமம் வந்து இறங்கிவிட்டேன்.புகை,இரைச்சல் என நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து மீண்டு,திரும்பவும் கிராமம் வர,வயல்வெளிகளை ஒட்டிய தார்சாலையில் நான் பேருந்திலிருந்து இறங்கிய உடனேயே என்னை வரவேற்க்க தென்றல் காற்று என்னை நோக்கிவந்தது.கார்ப்பரேட் நிறுவனங்களின் காலடித்தடம் இன்னும் அந்த மண்ணில் பதியவில்லை என்பதை நான் புரிந்துகொள்ள,எனக்கு வெகுநேரமாகவில்லை.அந்த அளவுக்கு கண்ணுக்கு எட்டியதூரம் வரை பச்சை போர்வையால் தன்னை போர்த்திக்கொண்டிருந்தது அந்த பூமி.புகை,மாசு இல்லாத காற்றை வெகுநாட்களுக்கு பிறகு சுவாசிக்க ஆரம்பித்த சந்தோசத்தில் பாட்டி வீடு இருக்கும் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தது என் கால்கள்.ஒவ்வொரு இடத்தை நான் கடக்கும்போதும்,என் சிறுவயது நினைவுகள்.வழியெங்கும் பார்த்த சொந்தங்கள் என்னை நலம் விசாரிக்க தவறவில்லை.சீக்கிரமே பாட்டியின் வீட்டை அடைந்தேன்.அதே அவளது சிம்மாசனம்.ஆனால் அவள் இல்லை.அவள் இல்லாத அந்த சிம்மாசனம் எனக்கு வெறும் திண்ணையாகவே தெரிந்தது.உள்ளே நுழைந்தேன்.வீட்டுக்குள் யாருமில்லை."அத்தை,அத்தை,மாமா"...பதிலில்லை....வீட்டுக்கு பின்புறம் போனேன்.அவள் படுத்திருந்தாள்.ஆம்....அவள்தான்.அவளேதான்...யார் என்னைஅன்போடு வளர்த்தாளோ அவள்,யார் எனக்கு சுருக்குப்பையிலிருந்து பணம் கொடுப்பாளோஅவள்.....யார் எனக்காக வாத்தியாரிடம் சண்டை போட்டாளோ அவள்.. இப்போது அவள் முதுகு சற்றுஅதிகமாகவே கூன் போட்டிருந்தது....என்னை பார்த்ததும் சந்தோஷப்பட்டாள்.ஆனந்த கண்ணீர்வடித்தாள்.தட்டுத்தடுமாறி எழ முயன்று,அவளுடைய மூன்றாவது காலை தேடினாள்.நான் அவள் தோளை பிடித்து அமர்த்திவிட்டு அவள் அருகில் அமர்ந்தேன்."ஆரத்தழுவினாள்.அழுதாள்.அன்பை பொழிந்தாள்.அவளது பல்லில்லாத வாயைக்கொண்டு கன்னத்தில் அன்பு முத்தமிட்டாள்.பேசினாள்.பேச நினைத்ததெல்லாம் பேசினாள்.என்னதான் ஆயிரக்கணக்கில் சம்பாதித்தாலும்,அவள் சுருக்குப்பையிலிருந்து சில்லறைகாசுகளை வாங்கிய சந்தோசம் கிடைக்கவில்லை.காலங்கள் கடந்த பிறகும் அந்த சுருக்குப்பை தன் இருப்பிடம் மாற்றிக்கொள்ளவில்லை.காசு கேட்டேன்.சுருக்குப்பையிலிருந்து எடுத்துக்கொடுத்தாள்.என்னோடு வந்துவிடு என கூப்பிட்டேன்."தாத்தா வாழ்ந்த வீடு கண்ணா.இங்கேதா என்னோட உசுரு போகணும்"என்றாள்.அத்தையும் மாமாவும் வந்தார்கள்.இரண்டு நாட்கள் இருந்துவிட்டு,சென்னைக்கு வந்தேன்.மாதங்கள் சில உருண்டோடின.ஒருநாள் தொலைப்பேசி அழுதது.அந்த அழுகையை நிறுத்திவிட்டு பேசினேன்.எதிர்புறத்தில் மாமாவின் குரல்.நானும்,அம்மாவும் வேகமாக கிராமத்திற்கு போனோம்."வயசான ஒடம்பு.ரொம்ப நேரம் போட்டுவைக்கக்கூடாதுன்னு எரிச்சிட்டோம்"என்றார்கள்.வீட்டிலிருந்து,வீதிவரை எங்கும் பூக்கள்.வெளியே கிடந்த நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.அம்மா கதறி அழுதுகொண்டிருக்க,அத்தை எதையோ கொண்டுவந்து வெளியில் வைப்பதை பார்த்தேன்.அதில் அவளது பழைய புடவைகளும்,பாயும்,அந்த சுருக்கு பையும் இருந்தது.அந்த சுருக்குப்பையை எடுத்து என் முகத்தில் ஒட்டிக்கொண்டு அழுதுவிட்டு,நிமிர்ந்து பார்த்தேன்.அப்போதும்கூட போட்டோவில் இருந்துகொண்டே என்னை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் என் *பாட்டி*.....

எழுதியவர் : முஹம்மது இனியாஸ் (26-Apr-21, 9:27 am)
சேர்த்தது : Mohamed iniyas
பார்வை : 219

மேலே