மனநிறைவு
அவன் அலுவலகத்திற்குள் நுழைந்த போது ஃபாத்திமா சோர்ந்து போன முகத்தை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு இருந்தாள். அவன் அவளருகே சென்று அழைத்த போது அவள் தோளை அசைத்த போது அவள் அதிர்ந்து திரும்பினாள்
பெருமூச்செறிந்தவள் "ஃபூ நீதானா. எங்க அந்த ஆளுதான் வந்துட்டாரோனு பயந்துட்டேன்"
"என்ன ஆச்சு ஃபாத்திமா? சார் எங்க"
"அத ஏன் கேக்கற. நீ வருவே வருவேனு எதிர்பார்த்து ஏமாந்து போய், சரி என்ன ஆனாலும் பார்த்துடலாம்னு உள்ள வந்து பார்த்தா, ஆளு அவசர அவசரமா லேப்டாப்ப தூக்கி பைக்குள்ள சொருவிட்டு இருந்தாரு"
"என்ன ஆச்சு சார்"
"ஃபாத்திமா என் பெரியம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் சோ கொஞ்சம் எமர்ஜென்சி. நான் கிளம்பறேன்"
நான் சும்மா விடுவேனா. இதான் சாக்குனு "சார் மீட்டிங்காக ரொம்ப ப்ரீபேர்டா இருந்தேன். எனிவே நீங்க முதல உங்க பெரியம்மாவ பாருங்க சார். நான் அவங்களுக்காக ப்ரே பண்ணிக்கிறேன்"
"தாங்யூ ஃபாத்திமா.சரி நான் கிளம்பறேன். சேகர் வந்தா எனக்கு கொஞ்சம் கால் பண்ணச் சொல்லு"
"சரிடா நீ ஏன் இவ்வளவு லேட்"
"அதுவா ரோட்ல ஒரு பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துட்டா அதான்"
"வர வர உன் இரக்க குணத்துக்கு அளவில்லாம போயிடுச்சு. இப்படியே போனா கடைசியா நீ ரோட்ல தான் நிக்கப்போற பார்த்துக்க"
"ஏன் ஃபாத்திமா, மனிதாபிமானத்தோட இருக்கறது அவ்வளவு பெரிய தப்பா"
"இந்த காலத்தில மனிதாபிமானத்த எந்த மனிஷன்டா மதிக்கிறான். உண்மையையே பணம் கொடுத்து வாங்கற காலம், நல்லவன ஏதோ தெருநாய பாக்கறது போல தான பாக்குறாங்க"
"நீ சொல்றது கரெக்ட் தான். ஆனா எல்லாருமே அப்படி இல்ல ஃபாத்திமா. நாம ஏன் எப்பவுமே மத்தவங்களையும், அவங்க பண்ற தப்பையும் மட்டுமே முன்னுதரணமா எடுத்துக்கணும். நாம செய்யற நல்லத மத்தவங்களுக்கு சொல்லி கொடுத்து அவங்களுக்கு ஒரு வழிகாட்டியா இருக்கலாமில்லையா"
"சரிங்க கர்ணபிரபு, நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்கறேன். போதுமா"
அவன் சிரித்தான் அவளுடன் சேர்ந்து
"சரிவா, கேண்டின் போய் ஒரு காஃபி சாப்பிடலாம். ரொம்ப தலவலியா இருக்கு"
இருவரும் கேண்டின் நோக்கி நடந்தனர்
------
உடைந்த குடத்தில் பாதி நிறைத்த தண்ணீரோடு பயமும், பதட்டமும் கலந்த எண்ணத்தோடு மாடிப்படியேறினாள் பாரதி. ஏனோ அவளையும் மீறி அழுகை கண்ணீராக வழிந்தது, உடைந்த குடத்திலிருந்து தண்ணீர் ஒழுகுவது போல.
பூஜையறையில் ஏற்றி வைத்த ஊதுவத்தி யின் மனம் நாசியைத் தீண்டியது.சமையலறைச் சென்று குடத்தை இறக்கினாள்.மாமியை ஆளைக் காணவில்லை.பூஜையறைக்கதவு சாத்தியிருக்க, சந்தேகத்துடன் கதவைத் திறக்க, அங்கே மாமி பேச்சு மூச்சற்றுக் கிடந்தாள்.பதட்டமடைந்து ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து, அக்கம்பக்கத்து வீட்டார் உதவியுடன், அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
-----
ஃபாத்திமா காபியை அருந்த தொடங்க சேகர் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருத்தான்
"டேய் என்னடா ரொம்ப யோசிக்கிற, இந்த காபியை யாருக்கு கொடுக்கலாம்னா"
"என்னனே தெரியலை ஃபாத்திமா. காலையில பார்த்தேனு சொன்னேன்ல அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கு"
"ஓ ஹோ கத அப்படி போகுதுதா. சார் காதல் வலையில விழுந்துட்டிங்களோ"
"சீ.. சீ... நான் அந்த அர்த்தத்தில சொல்லல. வேலைக்கு போற பொண்ண வழிமறிச்சு, அவ செயின அடகு வைக்க வாங்கிட்டு போன அப்பாவ இன்னிக்கு என் கண்ணால பாத்தேன் ஃபாத்திமா. அதான் ரொம்ப கஷ்டமாயிருக்கு"
"எல்லாம் காலக்கொடுமை. நாம என்ன பண்றது விடு"
அவன் காஃபி கோப்பையை கையிலெடுக்க மொபைல் போன் சிணுங்கியது
-----
மொபைலை எடுத்து யாருக்கு போன் செய்வது என்று யோசித்தவாறே இருந்த பாரதிக்கு, சட்டென பாலு அண்ணாவின் ஞாபகம் நினைவில் உதித்தது.அவர் மாமியின் தங்கை பிள்ளை என்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது மாமியை பார்க்க வரும் ஒரே ஜீவன்.
மாமியும் விளையாட்டாக சொல்வாள் "எனக்கு கொள்ளிப்போட நீ தான் வருவியோனு தோணுது பாலு"
சட்டென்று நினைவிலிருந்த அவர் எண்ணை மொபைலில் அழுத்தி கால் செய்தாள்
ரிங் சென்றது....
-------
"ஹலோ சொல்லுங்க சார்" மொபைலையெடுத்து காதில் வைத்தான் சேகர்
"சேகர் ஆஃபிஸ் வந்துட்டியா"
"எஸ் சார். இப்பதான் வந்தேன்"
"சேகர், அர்ஜெண்டா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா"
"சொல்லுங்க சார்"
"ட்ரால என்னோட பர்ஸ மிஸ் பண்ணிட்டு வந்துட்டேன். இப்ப நான் ஒரு எமர்ஜென்சி விஷயமா அப்போலோ ஆஸ்பிடல்வரை வந்திருக்கேன். அதுல தான் ஏடிஎம் கார்ட்ஸ்லாம் இருக்கு.சோ உடனடியா நீ என்னோட பர்ஸ எடுத்துட்டு அப்போலோ வரைக்கும் வரமுடியுமா"
"இதோ சார் கிளம்பிட்டேன்"மொபைலை கட்செய்தவன்
"ஃபாத்திமா உன் ஸ்கூட்டிய கொஞ்சம் கொடேன்"
"காஃபி கூட குடிக்காம, அவ்வளவு அவசரமா எங்க டா கிளம்பிட்ட"
"வந்து சொல்றேன்"
"வழியில யாருக்காவது தர்மம் பண்ண மறந்திட்டியா"
"கொடு ஃபாத்திமா விளையாடாத"
"சரி இந்தா புடி. வரும் போது வண்டியில பெட்ரோல் போட மறந்துடுதா. இல்லைனா நான் இன்னிக்கு வீட்டுக்கு பாதயாத்திரை தான் போகணும்"
அவன் கிளம்பும் போது மழைத்தூறல் போடத் தொடங்கியது
ஆறிப்போன அவன் காஃபியை வீணாக்காமல் அருகிலிருந்த நாய்க்குட்டிகளுக்கு சிறிய பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி வைத்தாள் ஃபாத்திமா.
அவை குடிப்பதையே வேடிக்கை பார்த்தவளுக்கு ஏனோ மனநிறைவாகவும், அவன் நினைவாகவும் இருந்தது.