மீண்டும்
இரவின் விழிப்பை இப்போது காண்கிறேன்
தவழும் உறைபனியாக நழுவும் மேகங்கள்
நிராதாரவான நிலவு
மின்னி மறையும் நட்சத்திரங்கள்
வளிகள் சுற்றி அலையும் வெளிகள்
அனைத்தும் ஈரமாக பெய்த மழையில்
நனைந்த உடைகளோடு ஈரக்குடைப் பிடித்து
மோகப்புன்னகை புரிந்து என்னருகே நெருங்கி வருகின்றாய்
இமைக்க மறந்த விழிகளோடும் சுரக்க மறந்த மொழிகளோடும் தேகம் சிலிர்சிலிர்க்க உன்னை காண்கிறேன்
உடைகள் தழுவிய ஈரத்தால் வெளிப்படும் உன் அந்தரங்கள் என்னுள் எழுப்பும் காம கனலில் தேகம் அனலாகின்றது
உலகை ஈரமாக்கிய மழை ஏனோ உடலை அனலாக்கியது
உன் மெல்லுடல் பிடிக்க விரைந்த என் கரங்களில் இப்போது உன் உடை ஏந்திய உடல் இல்லை
இருள் வெளிகளை தாண்டி எங்கோ நீ கேலியாக சிரிக்கிறாய்
உன் ஏளனப் புன்னகையில் என் ஏக்கம் தழல்கிறது
உடல் உரசும் ஈரக்காற்றில் தேகம் குளிர்கிறது
உன் எழில் முகம் மட்டும் காணவே இப்பொழுது விழைகிறேன்
தனிமையின் நுனியில் ஊசியேற்றும் நிமிடங்கள்
உன் வருகையின் அறிவிப்பை எப்போது தெரிவிப்பாய்
உன் கூந்தலின் வாசத்தை எப்பொழுது என் நாசி நுகரச் செய்வாய்
இரவின் மடியில் தலை வைத்து காத்திருக்கிறேன்
கனவில் மீண்டும் வருவாய் தானே...