குலவீரர் எஞ்ஞான்றும் பொன்றாமல் நிற்பர் புகழ் - வீரம், தருமதீபிகை 807

நேரிசை வெண்பா

போராற்றல் நேர்மை பொறுமை தறுகண்மை
பேராற்றல் மானம் பெருவாய்மை - ஓராற்றும்
குன்றாமல் நிற்கும் குலவீரர் எஞ்ஞான்றும்
பொன்றாமல் நிற்பர் புகழ். 807

- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

போர் ஆற்றும் தீரம், பொறுமை, நேர்மை, வாய்மை, மன உறுதி, மானம், ஆண்மை முதலிய மேன்மைகள் யாண்டும் குறையாமல் உடையவர் என்றும் அழியாத புகழை அடைந்து எவ்வழியும் ஒளி மிகுந்து உயர்ந்து திகழ்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அமைதியாகவும் சுகமாகவும் வாழ விரும்புவது மனித இயல்பாயினும் சமயம் நேரும் போது போராடவும் அவன் உரியவன் ஆகின்றான். தாய் தந்தையரைப் போற்றி, மனைவி மக்களைப் பேணி, ஒக்கல் சுற்றங்களை ஓம்பித் தான்பிறந்த குடியை உயர்ந்த நிலையில் சிறந்து திகழச் செய்வது ஒவ்வொரு மகனுக்கும் தனி உரிமையான இனிய கடமையாம்.

முறையான சிறந்த அறிவுடையனாய் மனிதன் பிறந்திருத்தலால் துறைதோறும் அவனுடைய பொறுப்புகள் தோய்ந்து நிற்கின்றன. உற்ற வீட்டுக்கும், உரிய நாட்டுக்கும், பெற்ற அரசுக்கும் ஆள்வினை ஆற்றி ஆதரவு புரிய அவன் நேர்ந்திருக்கிறான். சமாதான காலத்தில் அமைதியாய் வாழ்ந்தாலும் தன் நாட்டின் மேல் மறுபுலத்தவர் படையெடுத்து வர மூண்டால் அவரைக் தடையற நீக்கித் தனது அரசுக்கு உதவி புரியும் கடமை ஆண் மகனாய்ப் பிறந்த எவனுக்கும் உரிய உடைமையாய் அமைந்துள்ளது. காலம், இடம், பக்கச் சூழல், அரசுமுறை, ஆட்சிநிலை முதலியவற்றிற்குத் தக்கபடி ஒக்க இசைந்தொழுகுவதே உலக ஒழுக்கமாய் உற்றிருத்தலால் அவ்வழிகளைத் தழுவி வாழ்வது மனிதனுக்கு விழுமிய கடமையாய் யாண்டும் மேவி வந்துளது.

தன் பொறுப்பையும் உறுப்பையும் குறிப்போடு கூர்ந்து செய்து வருபவன் யாண்டும் சிறப்பெய்தி வருகிறான். தங்கள் கடமையை ஒவ்வொருவரும் ஓர்ந்து செய்து வந்தால் அந்த மனித சமுதாயம் மருவியுள்ள நாடு பெருமகிமையுடையதாய்ப் பெருகி விளங்கும். உள்ளப் பண்பாடும் உணர்ச்சியும் உடையவர் உரிய கடமைகளைத் தாமாகவே உவந்து. செய்கின்றார். ஆடவர் போலவே மகளிரும் உரிமையோடு கருதிச் செய்யவுரியது கடன் என வந்து வாழ்வின் நிலைமையைத் துலக்கியது.

நேரிசை ஆசிரியப்பா

ஈன்றுபுறத் தருத லென்றலைக் கடனே
சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே
வேல்படித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
5 ஒளிறுவா ளருஞ்சம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! 812 புறநானூறு

வீரக் குடியில் பிறந்த ஒரு தாய் இவ்வாறு கூறியிருக்கிறாள்:

உரிய கடப்பாடுகளைக் காட்டி வந்துள்ள இப்பாட்டு அரிய பல உண்மைகளை உணர்த்தி நிற்கிறது. அந்தக் காலத்து நிலைகளும் அரசு முறைகளும் மக்களுடைய உறுதி ஊக்கங்களும் இதனால் அறிய வந்தன. இந்தக் காலத்துத் தாய்மார் இப்படி வீரப்பாடுகளை ஆர்வத்தோடு கூறமாட்டார். என் பிள்ளை நல்ல உத்தியோகம் பார்த்து எங்களுக்குச் சோறு போடவேண்டும் என்றே கூற நேர்வர். காலநிலை வாழ்க்கை வகையை வரைந்து காட்டி நாட்டின் தகைமையை விளக்குகின்றது.

குடிகளிடம் பேரன்பு புரிந்து அவரை அரசன் நன்கு ஆதரித்து வந்தமையால் போரில் அவனுக்கு உதவியாகத் தம் ஆருயிரையும் அவர் உவந்து வழங்க நேர்ந்தார். தேச உணர்ச்சி, இராச விசுவாசம், மான வீரம் இந்நாட்டு மக்களிடம், மருவியிருந்துள்ள நிலைகளைப் பழம் பாட்டுகள் நேரே காட்டி நிற்கின்றன.

ஒரு வீரமகன் போரில் மூண்டு பொருது மாண்டு போனான். அவனுடைய உடல் முழுதும் பாணங்கள் ஊடுருவி நின்றன; தலை வாளால் துணிபட்டுப் போயது; வாய், கண், மூக்கு எங்கும். அம்புகள் தங்கின. அந்த நிலையில் மடிந்து கிடந்த மகனை அவன் தாய் வந்து கண்டாள் "ஐயோ மகனே! அடையாளம் தெரிய வில்லையே' என்று அழுது மறுகினாள். அந்த அன்னை கூறிய இன்னல் உரைகளை அயலே காண வருகிறோம்.

எற்கண்டு அறிகோ எற்கண்டு அறிகோ?
என்மகன் ஆதல் எற்கண்டு அறிகோ?
கண்ணே கணைமூழ் கினவே; தலையே
வண்ண மாலை வாள்விடக் குறைந்தன;
5. வாயே, பொருநுனைப் பகழி மூழ்கலின் புலால்வழிந்(து)
ஆவ நாழிகை அம்புசெறித் தற்றே;
நெஞ்சே வெஞ்சரம் கடந்தன: குறங்கே
நிறம்கரந்து பல்சரம் நிறைந்தன; அதனால்
அவிழ்பூ வம்பணைக் கிடந்த காளை
10. கவிழ்பூங் கழற்றிண் காய்போன் றனனே! - தகடூர்

இந்தக் கவியைக் கண் ஊன்றிக் காணுங்கள். போரில் இறந்த ஒரு அதிசய தீரனையும், அவனைப் பெற்ற அருமைத் தாயையும் வியந்து நோக்கி நாம் இரங்கி நிற்கின்றோம். போரில் சாவதை வீரர்கள் ஆர்வமாய்க் கொள்ளுகின்றனர். அந்த வீர மக்களைப் பெற்ற தாயரும்.அதனை மதித்து மகிழ்ந்து நிற்கின்றார்,

ஒரு வீர மகன் போரில் தீரமாய்ப் பொருது யானைகளோடு போராடினான்; கையில் இருந்த வேல் ஒழிந்து போயது; வேறு ஆயுதம் இல்லாமையால் மாறி வந்தான்; அவனைத் தாய் கண்டாள்; தன் மகன் மீண்டு வந்தது நீண்ட பழி என நெடிது கவன்றாள். அவள் கவலையோடு கூறியன அடியில் வருவன.

வாதுவல் வயிறே வாதுவல் வயிறே
நோலா அதனகத் துன்ஈன் றனனே
பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி
அக்களத்(து) ஒழிதல் செல்லாய் மிக்க
புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம்
அதன்முகத்(து) ஒழிய நீபோந் தனையே
எம்மில் செய்யா அரும்பழி செய்த
கல்லாக் காளைநின் ஈன்ற வயிறே! - தகடூர்

போரில் மாளாமல் மகன் மாறி வந்தது தன் வீரக்குடிக்கு வெய்ய பழியாயது என அத்தாய் வருந்தி நொந்திருக்கும் நிலையை இதில் அறிந்து கொள்கிறோம். பிள்ளைப் பாசத்தையும் கடந்து வீரம் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது. பெண்டிரும் வீரத்தைப் பெருமையாய்ப் பேணி வந்திருப்பது கருதியுணர வந்தது. வீரநாடு என இப்பாரதம் பாரறிய நின்றதை நேரே பார்த்து மகிழ்கிறோம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-May-21, 9:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே