வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்
வாழ்க்கை நீண்ட ஒரு பயணம்
ராமசாமி மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலம் மனைவியோடு அவர் கிராமத்தில் இருந்த காலம் தான். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னும் தன்னை அவள் கவனித்துக் கொண்ட அந்த பாங்கை நினைக்கும் பொழுது இப்பொழுதும் கண்கள் நிறைகிறது. கிராம அதிகாரிக்கு உதவி செய்யும் வேலை எப்பொழுதும் அவர் கூடவே இருக்கவேண்டும். அதிகாரிக்குக் கையில் வரும் சிறிய கவர்களை அவரிடம் சேர்ப்பதில் அவருக்கும் சில நேரங்களில் ஒரு பங்கு கிடைக்கும். கிராமத்தில் எல்லோரிடமும் நல்ல பேர் எடுத்து, மேல் அதிகாரிகளுக்கு விசுவாசமாக எல்லா பணிகளையும் செய்து, வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கழித்த அந்த நாட்கள் வாழ்க்கையின் மிக இன்பமானவை.
ராமசாமியின் மனைவிக்கு தெரிந்த குடும்பத்தில் இருந்து பெண் பார்த்து அந்த பெண்ணையே தன் முதல் மகனுக்கு திருமணத்தை முடித்தார். மருமகள் வந்த யோகம் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது.பூபதி கிராமத்தில் இருந்து பட்டணம் சென்றான். அங்கேயே வீடு வாங்கி வசதியாக வாழ ஆரம்பித்தான்.
இரண்டாவது மகன் கணேசன் தான் வேலை செய்யும் இடத்தில் பார்த்த பெண்ணைப் பற்றி கூறிட,அவளையே அவனுக்கு பேசி மணமுடித்தார் ராமசாமி.
ராமசாமியின் மனைவி இரண்டு திருமணங்கள் முடித்ததும் தனது கடமைமுடிந்தது எனக் கூறுவது போல் அவரை தனியாக்கி விட்டு காலமானார். ராமசாமி கிராமத்தில் சில வருடங்கள் மிக மனவருத்தத்துடன் கழித்தார்.அவர் மனைவியின் மறைவு மனதை மிகவும் பாதித்து விட்டது. தெரிந்த மருத்துவர் ஆலோசனையின் பேரில் இட மாற்றம் அவருக்கு நன்மையளிக்கும் என்று பட்டிணத்தில் மகனிடம் வசிப்பதற்க்காக வந்து தாங்கினார். கிராமவீட்டை விற்று விட்டு நகரத்தில் உள்ள மூத்த மகன் பூபதியின் வீட்டில் வந்த சில மாதங்களில் அவர் தினமும் காலையில் கேட்கும் மூத்த மருமகளின் பேச்சு அவர் மனதை ரணமாக்கி நிம்மதியில்லாமல் அவரைக் குறுக்கியது .சில நேரங்களில் அவர் இருக்கும் பொழுது அவர் காதில் விழவேண்டும் என உரக்க அவள் மகனிடம் பேசுவது எதற்கு இப்படி வாழவேண்டும் என்ற விரக்திக்கு தள்ளியது.
ஒரு நாள் காலையில் அவர் எழுந்ததும் மருமகளின் பேச்சு காதில் ஒலித்தது.
"ஏங்க உங்க அப்பாவுக்கு வேற வேலையே இல்லையா ?,எப்போ பாத்தாலும் ஏதோ ஒன்னு கேட்டுகிட்டே இருக்காரே வயசான காலத்துல இப்படி நம்ம உயிரை வாங்கறாரே " ,முதல்ல இவரை
எங்கேயாவது ஒரு ஆசிரமத்துல விட்டுட்டு வாங்க அப்போதான் நாம நிம்மதியா இருக்க முடியும் என்று மருமகள் காலையிலிருந்து ஒரே புலம்பல் .
இதை தினமும் கேட்டுக் கேட்டு வேதனையில் நொந்து தன் விதியை நினைத்து மனம் புழுங்கினார் ராமசாமி, பையனும் அவளிடம் திரும்ப எதுவும் கூறாமல் அவள் கூற்றை செவிமடுப்பது இன்னும் வேதனை கூடியது . இவன் பிறந்து கல்வி கற்க எத்தனை பேரிடம் தான் அலைந்து அந்த பெயர்பெற்ற பள்ளியில் இடம் வாங்கி,மகனை தன் மிதிவண்டியில் கொண்டு பள்ளியில் விட்டது பின் படித்து முடித்ததும் அவன் கேட்ட கல்லூரியில் தனக்கு தெரிந்த ஒரு பெரும் புள்ளியிடம் சிபாரிசு வாங்கி அவனை கல்லூரியில்சேர்த்தது அவனுக்காகவே தானும் தன் மனைவியும் வாழ்ந்த அந்த எளிமையான வாழ்க்கை நினைவில் நிழலாக வந்து போனது.
மகன்களுக்கு ஒன்றுமே தெரியாமல் எவ்வளவு இரவுகள் பல வேலைகள் செய்து சிறுது சிறிதாக பணம் சேர்த்து அவர் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து வைத்தது. அவர் மனைவிக்கு மட்டுமே தெரிந்த சில மனக் கஷ்டங்கள், மகன்கள் விடுமுறைக்கு வரும் நேரம் அதை வெளியே காட்டாமல் அவள் பக்குவமாக நடந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிவற்றை குறையில்லாமல் செய்தது.
இவைகள் யாவும் கண்முன்னே தோன்றின பூபதி மௌனமாக
இருப்பதை காணும் பொழுது.
பெரியவனுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை ,சின்னவனுக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது,அவனுக்கு இரண்டு குழந்தைகள் ஒன்று ஆண் ,மற்றொன்று பெண்,பெரிய மருமகள் ஏசும் பேச்சை கேட்டுக் கேட்டு மனமுடைந்த ராமசாமி, ஒரு ஆறுதலக்காகவாவது சின்ன பையன் வீட்டுக்கு சென்று குழந்தைகளைப் பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டார் , வெகு நேரமாக பேருந்து வரவேயில்லை கடும் வெயில் வேறு, ஆட்டோவில் செல்லலாம் எனறால் மகன் அதற்குக் கூட கணக்கு கேட்பான் ,சிறு வயதில் தன் மகன்களை படிக்க வைக்க அவர்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கணக்கில்லாமல் செலவு செய்தார். இப்பொழுது மகனிடம் பெட்டிக் கடைக்கு செல்லக் கூட அனுமதி வாங்கவேண்டியிருக்கிறது ஏன் எதற்கு என்ற கேள்விகள் அதனுடன் கணக்கு வேறு ஒரு கடலை மிட்டாய் கூட வாங்க முடிவதில்லை. நினைக்கையில் கண்ணீர் பொங்கியது. தூரத்தில் ஒரு பேருந்து வந்தது அதையும் பத்தடி தள்ளியே நிருத்தினார் அதன் ஓட்டுனர் ,ஒடிச் சென்று ஏறுவதற்குள் பேருந்தை எடுத்து விட்டான் ,மூச்சு வாங்கியது,
விரைவில் அடுத்தொரு பேருந்து வந்தது அதில் ஏறினார் , டிக்கெட் வாங்க நூறு ரூபாய் நோட்டை நீட்டினார் , "யோய் உனக்கு அறிவில்ல நூறு ரூபாய நீட்டுரியே, நான் என்ன இங்கே உட்கார்ந்து சில்லறையா அடிச்சிட்டிருக்கேன் சில்லறை இருந்தா டிக்கெட் எடு இல்லாட்டி வர ஸ்டாப்ல இறங்கீக்க" என்று கோபத்தோடு நடத்துனர் கடுமையாக பேசினார்.
தம்பி ,என்னை பாதிலேயே இறக்கி விட்டா நா என்ன பண்ணறது கோவிச்சுக்காம மீஞ்சூருக்கு ஒரு டிக்கெட் கொடுப்பா என்று பரிதாபமாக கெஞ்சினார் , சரி,இந்தா டிக்கட் ,சில்லறை இப்ப இல்ல வந்தா கொடுக்குறேன் என்று கூறி டிக்கட்டை கொடுத்து விட்டு நூறு ரூபாயை பெற்றுக் கொண்டார் ,
பேருந்து வேகமாக செல்ல மீஞ்சூர் பக்கத்தில் வந்தது , நடத்துனரிடம் மீதி சில்லறை கேட்க பேருந்து நின்றது ,மறுபடியும் நடத்துனரிடம் மீதி சில்லறையை கேட்க, நடத்துனர் ,சில்லறை எல்லாம் ஒன்னுமில்ல நீ மரியாதையா இறங்குலேனா உன்னை அடுத்த இரண்டு ஸ்டாப் தள்ளி கொண்டு பொன்னேரியில் போய் விட்டுடுவேன் என்று நடத்துனர் மிரட்ட ,ராமசாமிக்கு வேதனையில் நெஞ்சு வலித்திட , வேறு வழியில்லாமல் நெஞ்சில் கை வைத்துக கொண்டே இறங்கினார்.
மெதுவாக பேருந்து நிறுத்தத்தில் இருந்து தன் சின்ன பையன் வீட்டிற்கு நடந்தே வந்து வி்ட்டார்,தன் பேர பிள்ளைகளுக்கு எதாவது வாங்கி செல்லலாம் என்றால் கையில் இருந்த பணம் அத்தனையும் அந்த நடத்துனரே பிடுங்கி விட்டான் , திரும்பி ஊருக்கு போகக்கூட தனது மகன் கணேசனிடம் பணம் கேட்கும் நிலை ,
வீட்டிற்கு மெதுவாக வந்துவிட்டார் வாசலில் சில கார்கள் நின்றிருந்தது.உறவினர் யாரேனும் வந்துள்ளனரோ என்று நினைத்த படியே உள்ளே கேட்டைத் திறந்து மிதியடியை வைத்தார்.
மெல்ல வீட்டின் உள்ளே நுழைந்தார் , தனது தந்தையைக் கண்ட கணேசன் ,"ஏங்க வந்தீங்க,இப்ப எதுக்கு இங்க வந்தீங்க" என்று சொல்லுடன் தந்தையைக் கடிந்து கொண்டான் ,
என்னைப் பார்க்க என் அலுவலகத்தில் இருந்து என் நண்பர்கள் வந்திருக்காங்க ,அவங்க போனதுக்கு அப்புறம் உள்ள வாங்க ,அது வரைக்கும் வெளியே ஓரமா நில்லுங்க என்றான் , இதை கேட்ட அவர் அழுதே விட்டார் ,
நண்பர்கள் எல்லாம் சீக்கிரமே வெளியே வந்தனர்,அவர்கள் சென்ற பிறகு உள்ளே நுழைந்தார் , "நீ எப்படி இருக்கே குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க மருமகள் எப்படி இருக்கா" என்று ராமசாமி நலம் விசாரிக்க , கணேசன் அனைவரும் நலமாக இருப்பதாக கூறினான் ,
,உன் அண்ணன் வீட்டில் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டது ,அதான் கொஞ்சம் நாள் குழந்தைகளுடன் இங்க தங்கிட்டு போலாம் என்று வந்திருக்கேன் என்றார்,
அதற்கு கணேசன் ,நீங்கள் இங்கே இப்ப தங்க முடியாது, நாங்க ஊட்டிக்கு போறோம் நீங்க திரும்பி அண்ணன் வீட்டிற்கே போயிடுங்க என்றான், வேதனை தரும் பதில் ,
குழந்தைகளையாவது கூப்பிடு பார்த்து விட்டு போய் விடுகிறேன் என்றார்.
அவள்,குழந்தைகள் ,எல்லோரும் அவங்க ஊர்ல இருக்காங்க நானும் இப்போ அங்க போறதுக்கு கிளம்புகிறேன் ,அங்கிருந்து நாங்க கார்ல ஊட்டிக்கு போய் விடுவோம்,நீங்க முதல்ல கிளம்புங்க என்று தந்தையை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான் கணேசன்.
நான் வரும் போது என்று ஆரம்பித்து ராமசாமி நடந்ததையெல்லாம் கூறி திரும்பி செல்ல பணம் கொஞ்சம் கூடக் கையில் இல்லை என்று கூறி தன் மகனிடமே பணத்திற்கு கையேந்தி நின்றார்.
ஏதோ ஒரு பிச்சைக்காரனுக்கு போடுவதை போல கொஞ்சம் பணத்தை கொடுத்துத் அவரை தட்டி விட்டான்.
இந்த நடத்தை ராமசாமிக்கு பெரும் வேதனையை தந்தது ,ஒரு அடிமையை போல உணர்ந்தார் , தினம் தினம் இப்படி அவமானப்பட்டு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா எனப் புலம்பி அழுதபடியே மெல்ல நடந்து வந்து பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்தார். உடனே பேருந்தும் வர ஏறிக் கொண்டார் , தனது பெரிய பையன் பூபதியின் கே மீண்டும் பயணம் வீட்டிற்கே திரும்பி செல்ல மீண்டும் பயணம்.
பேருந்தில் ஏறி காலி இடத்தில் அமர்ந்தபின்னும் மனம் ஒருநிலைப் படவில்லை.தன் மனைவி மிகவும் புண்ணியம் செய்தவள் அதனால் தான் இவை யாவையும் காணாமல் போய் சேர்ந்துவிட்டாள்.
அவள் இருந்திருந்தால் நிச்சயம் மகன்,மருமகள் இருவரிடமும் பக்குவமா பேசி தன்னை மரியாதையுடன் நடத்த வைத்திருப்பாள் என்று நினைத்த பொழுது கண்கள் குளமாகியது.
அந்த நினைவுகளில் இருந்து அவரை நிகழ் காலத்திற்கு கொண்டுவந்தது ஒரு சிறு குழந்தையின் குரல்.தாத்தா தூங்கறியா என்றது. பார்ப்பதற்கு தனது முதல் மகன் போலவே இருந்த அக்குழந்தையிடம், இல்லைம்மா அசதியிலே கண்ணை மூடினேன் என்று அவர் எப்பொழுதும் தன் மகனிடம் கூறுவது போலவே குழந்தையிடம் கூறிட
அதுவும் சிரித்துக் கொண்டே நான் மடியில் உட்காரலாமா என கேட்க, வா என அழைத்து தனது மடியில் அந்த குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டார்.
பேருந்து புறப்பட காற்று அடிக்க அவர் கண்ணை மூடினார்.குழந்தை மடியில் இருந்த நேரம் மனதில் உள்ள பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வில் நன்றாக உறங்கிவிட்டார்.
சில நிமிடங்களில் குழந்தைப் பேசுவதை கேட்டுக் கண்விழித்த பொழுது,குழந்தையிடம் ஒரு அம்மையார் மடியில் இருந்து கீழே இறங்கும் படி கூறுவது கேட்டது.ஏன் அம்மா இங்கேயே இருக்கட்டுமே எனக் கூற நினைத்தபொழுது அந்த அம்மாவின் சொற்கள் அவரை வெகுவாக பாதித்தது.அம்மா அப்பா இல்லாததுபோல், இந்த தாத்தாவும் உனக்கு இல்லை நாம இறங்கவேண்டிய இடம் வந்தாச்சு,இல்லத்திலே நிறைய தாத்தாக்கள் இருகாங்க அங்கே போய் விளையாடலாம் என்ற சொற்கள் காதில் ஒலிக்க என்னம்மா சொல்றே இந்த குழந்தைக்கு அப்பா அம்மா இல்லையா என அதிர்ச்சியுடன் கேட்ட அவரின் குரல் மிகவும் நெகிழ்வுடன் ஒலித்தது. ஆமாங்க இந்த குழந்தை அனாதை இல்லத்தில் வளருது யாரும் இல்லாமே இருந்த இதை நான் தான் கொண்டுவந்தேன். இதோ அடுத்த நிறுத்தத்தில் அந்த இல்லம் இருக்குது என்ற அவளின் சொற்கள் அவர் மனதை உலுக்கியது.
இச்சிறு வயதில் இந்த குழந்தைக்கு இவ்வளவு பெரிய தண்டனையா தான் எல்லா உறவுகள் இருந்தும் அனாதையாகி நிற்கிறேன். இக்குழந்தைக்கு யாருமில்லாமல் மற்றவரை அண்டி வாழும் நிலையா? அந்த கஷ்டங்களை உணராத வயது, இன்முகத்துடன் இருக்கிறது என நினைக்கையில் அவர் கண்கள் குளமாகின. மெல்ல தானும் எழுந்து அந்த அம்மாளிடம் நானும் இல்லத்திற்கு வருகிறேன் என்றார்.
அவள் தலை அசைக்க,அடுத்த நிறுத்தத்தில் இறங்கினார். குழந்தையை ஆவலுடன் இல்லத்தில் இருந்த வயதானவர்கள் வரவேற்றனர். இல்லத்தின் வாயில் படியில் ஒரு தம்பதியினரின் படங்கள் மாலையுடன் காட்சி அளித்தது.
ஒட்டாத உறவுகள் ஒன்றாக கலந்திட
ஓடிய கால்களுக்கு ஓய்வு அளித்திட
ஓர் இல்லம் இந்த அன்பு இல்லம்
என்ற வரிகள் அந்த படங்களின் கீழே இருந்தது.
தன்னை தனது மனைவி தான் இந்த இடத்தில் கொண்டு வருவதற்காக அந்த குழந்தை வடிவில் வந்து வழி காட்டினாள் போலும் என்ற நினைவுகளில் .இருந்த அவரை எழுப்பியது மீண்டும் தாத்தா என்ன தூங்கரய்யா என்ற அந்த குழந்தையின் குரல் தான் .
ராமசாமி ஒரு முடிவுக்கு வந்தார் அந்த இல்லத்தின் தலைவியை சந்தித்து தன்னை அந்த இல்லத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டினார்.
அவரின் கைகளை பிடித்துக் கொண்டு அந்த குழந்தை வா தாத்தா
உள்ளே போகலாம் என்றது.
எங்கேயோ யாருக்கோ பிறந்த அந்த குழந்தை அவருக்கு வாழ்க்கை வாழ ஒரு வழியை காட்டியது

