நீதி விரித்தே வேந்தன் விழைந்து வருகின்றான் - நீதி, தருமதீபிகை 823

நேரிசை வெண்பா

மதியுடைய மாந்தர் மகிழ்ந்தினிது வாழ
விதியுடைய நீதி விரித்தே - அதிபதியாய்
வேந்தன் விழைந்து வருகின்றான் அவ்வழியே
ஆந்துணையும் செல்க அமைந்து! 823

- நீதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல அறிவுடைய மக்கள் எவ்வழியும் செல்லமாய் உவந்து வாழ வேந்தன் விதிமுறையே நீதி புரிந்து வருகிறான்; அதிபதியான அவனுடைய விதிவழி நடந்து இனிது வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தலைமையான நிலைமையில் அரசன் நெறியே வந்துள்ளமையால் உயர்ந்த நீதி முறைகளை உணர்ந்து உயிரினங்களைப் பேண நேர்ந்தான். தன் செங்கோலின் கீழ் வாழுகின்ற மக்கள் எவ்வழியும் செவ்வியராய் அமர்ந்து இனிது வாழ்ந்து வரச் செய்கின்றவனே சிறந்த வேந்தனாய் நன்கு விளங்கி வருகிறான்.

மனித சமுதாயம் யாண்டும் சுகமாய் வாழ்ந்து வரும்படி ஓர்ந்து செய்துள்ள திட்டமே சட்டம் என வந்தது. சட்டம் என்னும் சொல் நியாய வரம்பு, நெறிமுறை, நீதி ஒழுங்கு, திருந்திய நேர்மை, தேர்ந்த செப்பம் எனப் பல பொருள்களை உணர்த்தி வரும். செம்மையாய் வாழச் செய்வதே நீதியாம்.

குடிசனங்கள் அமைதியாகவும் சேமமாகவும் எங்கே வாழ்ந்து வருகின்றார்களோ அங்கேதான் உயர்ந்த இராச நீதி உலாவி வருகிறது. அந்த ஆட்சிதான் யாண்டும் மாட்சிமையாம்.

The good of the people is the chief law. - Cicero

சனங்களுடைய நன்மைதான் சிறந்த நீதியாயுள்ளது' என்னுமிது ஈண்டு நினைந்து கொள்ள வுரியது. பொதுமக்கள் எல்லா வழிகளிலும் சிறந்து நல்லவராய் இனிது வாழச் செய்யின் அதுதான் அரசனது புனிதமான உயர்ந்த நீதி ஆட்சியாம்.

சிறந்த செல்வச் செழிப்பு மாத்திரம் இருந்தால் போதாது; நல்ல குண நலங்களும் மக்களிடம் மருவியிருக்க வேண்டும்; அவை அமைந்த பொழுதுதான் அரிய பல நலங்கள் அங்கே பெருகி வரும். சால்புடைமையால் சகல வுடைமைகளும் சார்கின்றன.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

கலம்சு ரக்கும் நிதியம்; கணக்கிலா
நிலம்சு ரக்கும் நிறைவளம்; நல்மணி
பிலம்சு ரக்கும்; பெறுதற்(கு) அரியதம்
குலம்சு ரக்கும் ஒழுக்கம்; குடிக்கெலாம் 38

கூற்றம் இல்லையோர் குற்றமில் லாமையால்;
சீற்றம் இல்லைதம் சிந்தையின் செவ்வியால்;
ஆற்றல் நல்லறம் அல்லதில் லாமையால்,
ஏற்றம் அல்ல(து), இழித்தக(வு) இல்லையே 39 நாட்டுப் படலம், பால காண்டம், இராமாயணம்

கோசல நாட்டு மக்களுடைய குண நலங்களையும் செல்வ நிலைகளையும் வாழ்க்கை வகைகளையும் இவை சுவையாக உணர்த்தியுள்ளன.

பொருள் நயங்களைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரு தேசமும் அதில் வாழ்ந்து வருகிற மாந்தரும் எவ்வாறு செவ்வையாயிருக்க வேண்டும் என்பதை இங்கே ஓர்ந்து உவந்து கொள்ளுகிறோம். நிலம் முதலியன பல வளங்கள் சுரந்து வந்துள்ளன; சனங்களுடைய உள்ளம் உரை செயல்கள் எல்லாம் இனிய தரும நீர்மைகள் மருவி வரப் புனித போகங்களை அவர் அனுபவித்துள்ளனர். குடிகள் இவ்வாறு இனிய சுகவாசிகளாயிருப்பது கோனின் உயர்ந்த நீதிமுறையை உணர்த்தி நின்றது.

உயிர்களின் சேமத்தையே நாடி நேம நியமமாய் அரசன் ஒழுகி. வருதலால் தெய்வமும் அவனுக்குத் துணை செய்து வருகிறது. தருமவானிடம் தேவதைகள் உரிமையாய் உதவுகின்றன.

முசுகுந்த மன்னனது வீரம், கொடை, நீதிகளை வியந்து இந்திரன் ஐந்து மந்திர தேவதைகளை அவனுக்கு உரிமையோடு உதவியிருந்தான். அவை புகார் என்னும் நகரில் மேவி நின்றன. அந்நாட்டில் தீயோர்கள் தோன்றினும், தீது நேரினும் அவை வெளியே தெளிவாய்க் காட்டி விடும். அதிசயமான அந்த நிலைகளுள் மூன்றை இங்கே முறையே காண வருகிறோம்.

சேம நிலையம்

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய வாகிக்
கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக்
கொட்பி னல்லது கொடுத்த லீயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்

பூத சதுக்கம்

தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்:

பாவை மன்றம்

அரைசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீ ருகுத்துப்
பாவைநின் றழூஉம் பாவை மன்றமும் 5 சிலப்பதிகாரம்

இந்த மூன்று மன்றங்களையும் ஊன்றி நோக்கி நாம் உவப்பும் வியப்பும் உறுகின்றோம். அரிய பல பண்டங்கள் அந்நகருள் எங்கும் காவலின்றிப் பொதிகளாய்க் குவிந்து கிடக்கும்;

அயலிடங்களிலிருந்து புதியராய் அங்கு வருபவர் களவு செய்ய நேரின் களவாடிய பொருளைத் தலையில் சுமத்தி ஊரைச் சுற்றிச் சுற்றி வர அவரை ஒரு தெய்வம் எற்றி அடிக்கும்.

பொய்க்கரி புகல்வோர், புறங்கூறுவோர், பிறர் மனைவியரை விரும்புவோர், வஞ்சம் புரிவோர் முதலிய நெறிகேடரைப் பாசத்தால் பிணித்து வந்து நடுவீதியில் நின்று ஊரெல்லாம் கேட்க நெடிய ஓலமிட்டுப் பெரிய ஒரு பூதம் புடைத்துக் கொல்லும்.

அரசன் நீதி முறை தவறினும், அவையோர் நவை கூற நேரினும் கண்ணீர் சொரிந்து பெண்ணீர்மையோடு ஒரு பாவை அழுது காட்டும்.

இத்தகைய பாதுகாப்புகள் அந்த மன்னன் ஆட்சியில் மருவி நின்றன. தன் நாட்டில் தீமை யாதும் புகாமல் நீக்கி மக்கள் யாவரும் இன்புற்று வாழ அன்புகூர்ந்து ஆட்சி புரிவதே அரசனது மாட்சியாம். அந்த வேந்தனுடைய நீதிமுறைகளை ஓர்ந்து யாண்டும் நல்ல நீர்மைகள் தோய்ந்து சீர்மையோடு மாந்தர் வாழ்ந்து வர வேண்டும். சுகவாழ்வே சுவர்க்க வாழ்வு என்பது முதுமொழி. இனிமையான அவ்வாழ்வு புனிதமான எண்ணங்களால் பொலிந்து போக நலங்கள் மலிந்து வருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-May-21, 10:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே