பொடி டப்பா

*பொடி டப்பா*

தந்தை இறந்து சில காலங்கள் ஆனபிறகும் விடுமுறைக்கு ஊர் சென்று வரும் ஒவ்வொரு முறையும்.....

"காபி டீ... காபி டீ... காபி டி..."

"மாயவரம் வந்தாச்சா... ஆடுதுறைல கிராசிங் போடலைன்னா சீக்கிரம் வந்துருவான்... தூங்காம இரு... சரி வச்சிரு..."

"ம்... வா... இன்னிக்கு ரயில் கரெக்ட் டைமுக்கு வந்துட்டான் போல..."

"சரி சரி... அப்புறம் பேசிக்கலாம் குளிச்சிட்டு, சாப்பிட்டு தூங்கு..."

"அடடே! இன்னைக்கு கறி ரொம்ப நல்லா இருக்கு... பஞ்சு மாதிரி வெந்து இருக்கு... போனவாரம் நான் வாங்குனப்போ... முத்தக் கறியா கொடுத்துட்டான்... கடிக்கவே முடியல..."

"இப்பல்லாம் வண்டி ஓட்ட முடியறதில்லை... சர்வீஸ் கொடுத்து ரொம்ப நாளாச்சு... பெட்ரோல் ஃபுல்லா போட்டுக்கோ... காத்து அடிச்சுக்க..."


"எங்க இருக்க... சொல்ல மறந்துட்டேன்.... வரும்போது நாடார் கடைல மூக்குப்பொடி பாக்கெட், ஒரு அஞ்சு வாங்கிக்க... பொடி சுத்தமா இல்ல..."

"எங்க தூக்கம் வருது... அதான் மொபைல நோண்டிட்டே இருக்க வேண்டி இருக்கு... ஃபேஸ்புக் னு சொல்றாங்களே... அப்படின்னா என்ன..."

"காலையிலேயே மழையா... அங்கங்க ஒழுகுது... சரிபண்ண கூப்பிட்டா ஒருத்தனும் வரமாட்ரான்..."


"அவன பத்தி நெனைக்காத... அவன் இங்க வர்றதே இல்ல... ஒரு ஃபோன் கூட பண்ண மாட்டான்..."

"ஏண்டா சேனல மாத்திக்கிட்டே இருக்க... ஏதாவது ஒன்னு வச்சு பாரு..."

"அப்புறம் சாப்புடறேன்... பசிக்கவே மாட்டேங்குது... மோஷன் இரண்டு நாளைக்கு ஒரு தடவைதான் போகுது... மாத்திரை வேற நிறைய சாப்பிடறதால... உடம்பு ரொம்ப சூடாயுடுது..."

"நைட் எத்தனை மணிக்கு ட்ரெயின்..."


"சரி... பாத்து பத்திரமா போயிட்டு வா... அடுத்த தடவை வரப்போ இரண்டு நாள் எக்ஸ்ட்ரா தங்குற மாதிரி வா..."


வீட்டை பூட்டுவதற்கு முன்பு அவரின் புகைப்படத்தின் அருகிலுள்ள மூக்குப்பொடி டப்பாவைப் பார்த்த போது... டப்பாவில் பொடி இல்லை... ஆனால் நெடி மட்டும் அப்படியே இருக்கிறது...

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (23-Jun-21, 8:12 pm)
Tanglish : poti dappa
பார்வை : 69

மேலே