பதிலும் கேள்வியும்

*பதிலும் கேள்வியும்*

ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பயத்தினால் அந்த மூவரால் நிம்மதியாக வாழ முடியாமல் அந்த ஆலமரத்தின் அருகிலுள்ள அதே கிணற்றிலேயே விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். அந்த நள்ளிரவில் கிணற்றருகே வந்து எட்டிப் பார்த்துவிட்டு எட்டுத் திசையிலும் சிரிப்பு எதிரொலித்து அடங்கி சிறிது அமைதிக்குப் பிறகு கடைசியில் அவள் உடைந்து அழும் காட்சி பார்ப்பவர்களை பதறச் செய்வதோடு கலங்கவும் வைத்துவிடும்!

இரவு 12 மணிக்கு மேல் இருக்கும். யாருமில்லாத அந்த பெரிய வீட்டில் அவன் மட்டும் தனியாக எந்த மின்விளக்கும் எரியாமல் தொலைக்காட்சியில் அந்தப் படத்தைப் பார்த்து முடித்தான்.

"பெருங்கனவுடன் வாழும் ஒரு இளம்பெண்ணை மூன்று பேர் சேர்ந்து சீரழித்ததால் அவள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். பின் பேயாக மாறி, அவளுக்கு இருக்கும் சக்தியை வைத்து அந்த மூவரையும் அதே கிணற்றிலும் அவர்களே தற்கொலை செய்துகொள்ளும்படி பழிவாங்குகிறாள்" - இதுதான் கதை! ஆனால் அந்த இயக்குனரின் கைவண்ணத்தினாலும் பின்னணி இசையினாலும் அந்தப் படம் பார்ப்பதற்கு அவ்வளவு பயத்தைக் கொடுக்கும். மேலும் அந்தப் படம் எடுத்து முடித்து வெளியாவதற்கு முன்னமே ஏனோ அந்த நடிகையும் தற்கொலை செய்து கொண்டாள்! ரசிகர்களுக்கு கேட்கவா வேண்டும்? இந்த சம்பவம் மேலும் அந்தப் படத்திற்கு வலு சேர்க்கவே அப்படத்தின் பெயரை கேட்டாலே பயம் வந்துவிடும்.

ஆனால் அந்தப்படத்தை இவன் வேறு கோணத்தில் பார்த்தான். அவன் பயப்படவில்லை! மாறாக அவனுடைய நேரமும் சூழ்நிலையும் அவனை வேறு விதமாக சிந்திக்க வைத்தது. அவன் கண்கள் கோபத்தால் சிவந்தது! அந்த ஐந்துபேர்கள் செய்யும் பல்வேறு கொடுமைகள் தெரிந்தும் அவனால் அவர்களை பழிவாங்க முடியவில்லையே என்று பலமுறை மனம் நொந்திருக்கிறான். ஒருவேளை நாம் தற்கொலை செய்து கொண்டால்?!? பேயாக மாறி அவர்களை பழிவாங்கும் சக்தி கிடைத்தால்?!? அந்த விபரீத முடிவை எடுத்தவுடன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. நேராக பழைய பொருட்கள் உள்ள அறைக்குச் சென்று அந்தக் கயிற்றை எடுத்தான்!


அந்தப் பகுதிக்குப் புதிதாக வந்த காவல் துறை அதிகாரி, தற்கொலை செய்து கொண்டவனின் பெற்றோரிடமும் அக்கம்பக்கத்தாரிடமும் நடந்த விசாரணையில், அவன் மிகவும் நல்ல குணம் படைத்தவன் என்றும் அவனுக்கு எதிரிகளே கிடையாது என்றும் இந்த தற்கொலையில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் தெரிய வந்தது!

அதிகாரி இந்த தற்கொலை சம்பந்தமாக துப்புத் துலக்க ஆரம்பிக்க, இந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத வேறு விதமான குற்றப் பின்னணிக்கான ஆதாரங்கள் சிக்கின!

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது!!!

சில ஆண்டுகளுக்குப் பின்...

அந்த ஐந்து பெரும்புள்ளிகள் செய்த கொடுமைகளும் கொலைகளும் அந்த அதிகாரியின் திறமையால் வெளிச்சத்திற்கு வந்து அவர்களுக்கு தக்க தண்டனையும் கிடைத்தது. இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பாராட்டு விழாவிற்குப் பின், அதிகாரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். ஐந்து பெரும் புள்ளிகள் செய்த பல்வேறு கொடுமைகளும் கொலைகளும் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை விளக்கிக் கொண்டிருந்தார்.

அந்த சந்திப்பு முடிந்தவுடன் அவர் அறைக்கு சென்று தனிமையில் யோசித்துக் கொண்டிருந்தார்...

தன் அருகில் உள்ள மேசையின் மேலே இருந்த அந்த வழக்கின் கோப்பிலிருந்து தற்கொலை செய்து கொண்டவனின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் கடந்து சென்றது அவருக்கு நினைவு வந்தது.

*அந்த தற்கொலை கேஸ் என்னாச்சு சார்?*

அவர் கண்டுபிடித்த பதிலுக்கான கேள்வியே இதுதான் என்பதை உணராமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் நன்றியுடன் இவரைப் பார்த்து புன்னகை செய்வது மட்டும் அவரால் உணர முடிந்தது.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (23-Jun-21, 8:11 pm)
பார்வை : 83

மேலே