பராசம்

*பராசம்*

"பராசம்........"

"என்னா......"

"பொழுது விடிஞ்சி எவளோ நாழி ஆச்சு......"

"..........."

"ஆத்துப் பக்கம் போயி காலாகாலத்துல வெளிக்கி போய்ட்டு வா...."

"வந்தாதான போக முடியும்...."

"வரலைன்னா போயி முக்கு!!!"

இதற்குமேல் வேறு வழியில்லாமல் கோபமாக எழுந்து ஆத்துப் பக்கம் நோக்கி வேகமாகப் போகிறான்.

அது எண்பதுகளின் இறுதிக் காலம். காலை ஒரு 7 மணி இருக்கும். அந்த கிராமத்தில் ஒரு தெருவில் தந்தை மகனுக்கு இடையே நடக்கும் உரையாடல் தான் இது. அந்த தெருவின் சாலை ஓரளவுக்கு நேராக இருக்கும். சாலையின் ஒரு பக்கத்தில் வரிசையாக குடிசை வீடுகள் இருக்கும். மறுபக்கத்தில் பச்சைபசேலென ஒரே வயல்கள்தான். அந்த வயலைச் சுற்றி வரிசையாக தென்னை மரங்கள் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் வாசற்படியில் இருந்து வெளியே பார்ப்பதற்கு ஓரளவுக்கு ரம்மியமாக இருக்கும்.

அந்த தெருவில் அனேகமாக அனைவரும் கூலி வேலை செய்பவர்களே! எனவே ஆறு மணிக்கெல்லாம் அந்த ஊரு பரபரப்பாகக் காணப்படும். காலை எழுந்தவுடன் அந்த ஊரில் ஏறத்தாழ எல்லாரிடமும் தேநீர் அருந்தும் பழக்கம் இருந்தது. ஆனால் யாரும் வீட்டில் தயார் செய்ய மாட்டார்கள்! அங்குள்ள ஒரே ஒரு தேனீர் கடையில் தான் அனைவரும் பாத்திரம் எடுத்து வாங்கி வருவார்கள். நாராயணன் தன் குடும்பத்தார் அனைவருக்கும் தேனீர் வாங்கி வந்துதான் இப்படி பராசத்தை அழைத்தான். அந்த ஊரில் ஆண்கள் அனைவரும் காலைக் கடனுக்கு ஆற்றை நோக்கித்தான் செல்வார்கள்.

நாராயணன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். மூங்கில்தான் அவன் குடும்பத்தாருக்கு சோறு போடுகிறது. பெரிய மூங்கில் குத்து ஒன்றை விலைக்குப் பேசி, அதனை வெட்டி வீட்டிற்கு கொண்டுவந்து, அதில் ஏணி, கூடை, தடுப்பு போன்ற பல்வேறு வகையான பொருட்களை செய்து அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவான்.

அன்று காலை எட்டு மணி இருக்கும். காலை உணவை முடித்துவிட்டு நாராயணன் மூங்கில் வெட்ட அரிவாளை எடுத்தான். பராசம் பம்பரத்தை எடுத்தான்!

நாராயணன் சென்றபிறகு தெருவில் வந்து சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பம்பரம் விட ஆரம்பித்தான்.

பராசம். நாராயணனின் கடைக்குட்டி. ஏழு வயதுச் சிறுவன். முழுப்பெயர் ஞானப்பிரகாசம். பிரகாசம் என்பதைத்தான் பராசம் என்று அழைப்பார்கள். பெயருக்குத் தகுந்தாற் போல கருப்பிலும் சிரிப்பிலும் பிரகாசமாக இருப்பான். "பராசம்" என்று யாராவது அழைத்தால் வெகுளியாகச் சிரிப்பான்.

சிறுவர்கள் அதிகம் இருப்பதால் அந்த தெரு எப்பொழுதும் விளையாட்டுகளால் நிறைந்திருக்கும்!

கவட்டை, பேந்தி, லாக்கு, கல்லுப் பந்து, குரங்குப் பந்து, பே பே, சில்லு கோடு, எத்து சில்லு, புட்டு, கிட்டிபுள்ளு, வேப்பங்கொட்டை பொறுக்குவது, மாங்காய் அடிப்பது, தூண்டிலில் மீன் பிடிப்பது, ஈச்சம் பழம் பொறுக்குவது, பாகற்காய் பறிப்பது.... இப்படி நிறைய விளையாட்டுக்கள்!

ஒரு விளையாட்டு இருந்து இன்னொரு விளையாட்டிற்கு மாற, பராசம் தான் பிள்ளையார் சுழி போடுவான். அது மெல்ல மெல்ல தெருவெங்கும் பரவி, அந்த ஊரே அந்த விளையாட்டில் மூழ்கி இருக்கும்.

அன்று பராசம் பம்பரத்தை சுழலவிட்டு "அபீட்டு" என்று கத்தியதும், மற்ற சிறுவர்களை அந்த சொல் உற்சாகத்தில் ஆழ்த்த, அவரவர் தனது பம்பரத்துடன் வந்து குழுவாக ஆட்டத்தை ஆரம்பித்தார்கள்! அந்தத் தெரு முழுவதும் பம்பர விளையாட்டு களைகட்ட ஆரம்பித்துவிட்டது!

செந்தில். அவனுக்கும் சொந்த ஊர் இதுதான். ஆனால் பக்கத்து டவுனில் மாமா வீட்டில் தங்கிப் படித்தான். படிப்பைத் தவிர மற்ற அனைத்தையும் கற்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் இங்கு வந்து கற்பிப்பான்! அவ்வப்போது விடுமுறைக்கு சொந்த ஊர் வந்து போவான். இம்முறை அவன் வந்தபோது ஒரு புது விளையாட்டை அந்த சிறுவர்களுக்கு பெருமையுடன் விளையாட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அதன் பெயர் கிரிக்கெட் என்றும், நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வாங்கியது பற்றியும் அவர்களுக்கு பெருமையாக விளக்கிக் கொண்டிருந்தான். அந்த கிரிக்கெட் என்ற வார்த்தை அந்த ஊர் சிறுவர்களுக்கு புதிதாய் தோன்றியது. அதன் விளையாட்டு முறையும் அதன் சொற்கள் விளங்காததாலும், மிகவும் அலுப்புத்தட்டுவதாக இருந்ததாலும் செந்திலுக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை! அவர்கள் தங்களது பழைய மரபு விளையாட்டிற்கு திரும்பினர்.

சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் வழக்கமாக நாராயணன் மூங்கில் வெட்டுவதற்கு அருவாளை எடுத்தான்! பராசம் பளிங்குகளைக் கையில் எடுத்தான்! அந்த ஊரே மெல்லமெல்ல பம்பர விளையாட்டிலிருந்து பளிங்குக்கு மாறியது!

சிறிது காலத்திற்குப் பிறகு அந்த தெருவில் வசிக்கும் சில சிறுவர்கள் பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் படிக்கச் சென்றனர். அது இவர்கள் ஊரை விட கொஞ்சம் வளர்ந்த ஊர்! அடுத்த உலக கோப்பை ஆரம்பித்த ஆண்டு அது. அவர்களுக்கு வகுப்பு ஆசிரியராக ஒரு பிராமண வகுப்பை சேர்ந்த ஆசிரியர் இருந்தார். ஒருநாள் வகுப்பு இடைவெளியில் "இங்கே யாருக்கு டா கிரிக்கெட் தெரியும்" என்றவுடன், அந்த ஊரில் பெரிய வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களின் வாரிசுகள் இரண்டு பேர் கையை உயர்த்தினார். அந்த கிராமத்து சிறுவர்களுக்கு கிரிக்கெட் என்றவுடன் செந்தில் ஞாபகத்திற்கு வந்தான். அந்த வசதி படைத்த இரு சிறுவர்களிடமும் அந்த ஆசிரியர், தற்போது நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அவர்களும் பெருமையுடன் அவருக்கு சமமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த மற்ற மாணவர்களுக்கும்.. ஏன்.. அருகேயுள்ள வகுப்பைச் சார்ந்த ஆசிரியர்களுக்கும் கூட விளங்காமல் அவர்கள் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தனர். இந்த விளையாட்டை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் குறிப்பாக மாணவர்களிடையே பற்றிக்கொண்டது.

அந்த ஆசிரியர் அந்த இரு சிறுவர் களிடமும் ஸ்கோர் பார்த்து வரச் சொல்லி அனுப்புவார். அவர்களும் மகிழ்ச்சியாக சென்று வந்து அவரிடம் சொல்லி விவாதித்துக் கொண்டிருப்பார்கள்

ரன், விக்கெட், பவுலிங், பேட்டிங், போல்ட், அம்பயர், எல்விடபில்யு... இப்படி நிறைய வார்த்தைகள் அவர்கள் காதில் வந்து விழுந்தன. அவர்கள் அதனை புரிந்து கொள்ளமுடியாமல் தவித்தனர். பிறகு அந்த சிறுவர்களுடன் பழகி ஓரளவுக்கு அந்த விளையாட்டை பற்றித் தெரிந்து கொண்டது மட்டுமல்லாமல், அவ்வப்போது பள்ளி இடைவேளையில் விளையாடவும் தொடங்கினார்.

அடுத்த விடுமுறைக்கு செந்தில் வந்தான். இப்போது சில சிறுவர்கள் தானாகவே அவனிடம் வந்து தங்களுக்கும் கிரிக்கெட் விளையாடத் தெரியும் என்று கூறி அவனுடன் சேர்ந்து ஆட்டத்தை ஆரம்பித்தனர். வேறு சில சிறுவர்களும் சேர்ந்து விளையாடத் தொடங்கினார்கள். செந்தில் அவர்களுக்கு கிரிக்கெட்டில் உள்ள சந்தேகங்களை போக்கிக் கொண்டிருந்தான். கிரிக்கெட்டில் மட்டுமல்ல!

அந்த விளையாட்டில் உண்மையாக அவர்களுக்கு ஆர்வம் இல்லை என்பதால் அவர்கள் மீண்டும் தங்கள் மரபு விளையாட்டிற்கு திரும்பி சென்றனர்.


காலம் செல்ல செல்ல கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி ஆக்கிரமித்துக் கொண்டது.

வழக்கம்போல நாராயணன் ஒருநாள் மூங்கில் வெட்ட அருவாளை கையில் எடுத்தான். பராசம் கிட்டிபுள்ளைக் கையில் எடுத்தான்! ஆனால் இந்த முறை கிட்டிப்புள் விளையாட்டு, அவனைத் தவிர ஊரிலே யாருக்கும் பரவவில்லை! அவனும் அதைப் பற்றி கவலைப்படாமல் தனக்குத்தானே சுவாரசியமாக விளையாடிக்கொண்டிருந்தான்!

இந்த விடுமுறைக்கு செந்தில் வந்தபோது அவன் உதவி யாருக்கும் தேவைப்படவில்லை! அந்த ஊர் முழுவதும் சிறுவர்கள், குழு குழுவாக பல இடங்களில் தீவிரமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த விளையாட்டை அறிமுகப்படுத்தியவன் என்ற பெருமையுடன் செந்திலும் அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான்.

அந்த பழைய விளையாட்டுகள் அனைத்தையும் கிரிக்கெட் என்ற பூதம் விழுங்கினாலும், அவைகள் பராசம் என்ற சிறுவனால் உயிர்ப்புடன் இருந்தன. அவன் ஒரு நாளும் கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்தது இல்லை.

சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள். நாராயணன் மூங்கில் வெட்ட அருவாளை எடுத்தான். பராசமும் அவன் பங்குக்கு ஒரு அருவாளை தன் கையில் எடுத்து தன் தந்தையுடன் பிழைப்புக்காக மூங்கில் கொள்ளைக்கு சென்றான்.

அன்றோடு மரபு விளையாட்டுகள் அனைத்தும் மரணமடைந்தன!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (23-Jun-21, 8:13 pm)
பார்வை : 52

மேலே