எத்தனை அவலம்

எத்தனை அவலம்???


ஆங்கிலேயர்
ஆட்சியில்
அடிமைத்தனம்
அவலம்!

அடுத்து வந்த
சுய ஆட்சியில்
அனைத்தும்
அவலம்!

அவாளுக்கே
நாடு என
அறைகூவல் விடுவது
அவலம்!

ஆண்ட பரம்பரை
என்று சொல்லி
அடிதடியில் ஈடுபடுவது
அவலம்!

ஆளும் வர்க்கம்
ஆற்றை விற்று
அயல்நாட்டில்
அக்கவுண்ட் வைப்பது
அவலம்!

கல்வியை
கவர்மெண்ட்
நடத்தாமல்
தனியாருக்கு விட்டது
அவலம்!

அரசியல் கட்சிகள்
பெண்களுக்கு
ஐம்பது சதவீதம்
ஒதுக்காதது
அவலம்!

பெற்றோர்களே
சில சமயம்
பிள்ளைகளை
பாலியல் தொல்லை என
படிக்க நேர்வது
அவலம்!

வேலையில்லா
திண்டாட்டம்
விழி பிதுங்கி நிற்க
வேடிக்கை பார்க்கும்
அரசுக்கு அவலம்!

எண்ணிக்கையில்
மட்டும் என்ஜினீயரிங்
கல்லூரிகள் இருப்பதும்
நல்ல என்ஜினியர்கள்
இல்லாதிருப்பதும் அவலம்!

சுதந்திரம் வாங்கி
எழுபத்தைந்து ஆண்டுகள்
ஆகியும்
எழுத்தறிவில் 100%
எட்ட ஏலாமை
அவலம்!!

குடியரசு
ஆட்சியில்
குடிசை வீடுகள் இருப்பது
அவலம்!!

நகரத்தோடு இணைக்கும்
நல்ல சாலைகள்
இல்லா கிராமங்கள்
இருப்பது அவலம்!!

கற்காலம் போல்
கழுதைகள் மீது
ஊர் போய் சேரும்
மலைவாழ் மக்கள்
மறந்துபோன ஆட்சியாளர்கள்
ஓர் அவலம்!!

விறகுவெட்டி
வயிற்றைக் கழுவும்
மக்களை
கடத்தல்காரர்கள் என
சுட்டுத் தள்ளுவது அவலம்!!

கோடி கோடியாய்
கொள்ளையடித்து
வெளிநாட்டில் பதுங்கி இருப்போர்க்கு
பட்டுக்கம்பளம் தேடல்
அவலம்!

பயிர் வைக்க
கடனை வாங்கி
மழை பொய்த்ததால்
தவணை பொய்த்த
விவசாயியை
தண்டிப்பது அவலம்!!

செங்கல் சூளையிலும்
செந்நெல் அரிசி ஆலையிலும்
கொத்தடிமை தொழில்
குதுகலமாய் நடப்பது
அவலம்!!

கவிஞர் புஷ்பா குமார்

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (23-Jun-21, 9:17 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : ethtnai avalam
பார்வை : 1450

மேலே