ஒரு கனவு
ஒரு கனவு
இது என்ன சார் பிழப்பு, இவங்களை பார்த்தா அப்படியே பணிஞ்சு போகணுமாம், இல்லையின்னா விலகி நிக்கணும், இரண்டும் செய்யாம இருந்தா கண்டபடி பேசி திட்டுவாங்கலாம்.
சார் இவங்க எண்ணம் எல்லாம் நம்மளை நம்பி இருக்கறவங்கதானே, கூப்பிட்டா வரணும், அப்படீங்கற எண்ணம்.
கிடக்கட்டும் சார், ஏதோ கூலியா கொடுக்கறாங்க, கொடுக்கறாங்க என்ன போடறாங்க, இந்தா பிழைச்சு போ அப்படீங்கற மாதிரி, நாங்களும் வெட்கமில்லாம அதை ஏத்துக்க வேண்டியிருக்குதே.
என்னுடைய அனுபவத்துல சொல்றேன் சார் எப்பவும் ஒரு இடத்துல இருந்துட்டே இருந்தா நம்மளை மதிக்க மாட்டாங்க சார், இடம் விட்டு இடம் மாறிகிட்டே இருக்கணும்.
ஆனா பயமா இருக்கே சார், வேற இடத்துக்கு போயி செட்டிலாகலாமுன்னா அங்கிருக்கறவங்க, நம்மளை எதிரியா பார்க்கறாங்க, கொஞ்சம் அசந்தா கொலை கூட பண்ண தயங்கமாட்டாங்க.
சரி நாம முதல்ல இருந்த இடத்துக்கே வரலாமுன்னா நம்ம இடத்துல வேற எவனோ வந்து உட்கார்ந்துடறான். அவன் இப்ப நம்மளை எதிரியா பார்க்க ஆரம்பிச்சிடறான்.
சில பேருக்கு ஜாதக பலன் நல்லா இருக்குது சார், அவன் பெரிய முதலாளிகிட்ட இருக்கற மிதப்புல நம்மளை பார்ப்பான் பாருங்க, மனசு எல்லாம் வெந்து போயிடும் சார். அதை விட வேடிக்கை ஒண்ணு கேளுங்க !
காரு ஒண்ணு சார், அதுவும் சும்மா பள பளன்னு மின்னுது சார், நான் தெரியாத்தனமா அது பக்கமா போயி நின்னுட்டேன் சார், உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கலாமுன்னு முயற்சி பண்ணி பார்த்தேன்.
என்னைய விட மூணு மடங்கு குண்டா ஒருத்தன் உட்கார்ந்திருந்தவன், சட்டுன்னு என்னை ஒரு மிரட்டு மிரட்டினான் பாருங்க, அப்படியே சப்த நாடியும் ஒடுங்கி போச்சு.அவனோட பார்வையும் எகத்தாளமா இருந்துச்சு.
நீ கார்ல உட்கார்ந்திருக்கற மிதப்புல பேசறே, இப்படி நினைச்சுட்டு பேசாம வந்துட்டேன். வேற என்ன செய்ய சொல்றீங்க?
வழக்கம் போல வாட்ச்மேன் வேலை பார்க்கறதா முதலாளிகிட்ட காண்பிச்சுகிட்டு அப்படியே காலை மடக்கி உட்கார்ந்து சுகமா கனவு கண்டுகிட்டிருந்தேன்.
படக்குன்னு ஒரு சத்தம், எங்கிட்டே ஒரு பழக்கம் இருக்கு சார் எவ்வளவு தூக்கத்துல இருந்தாலும், கொஞ்சம் சத்தம் கேட்டா போதும் முழிச்சுக்குவேன்.
சத்தம் கேட்டவன் அப்படியே தூங்கற மாதிரியே படுத்து கிட்டு கண்ணை மட்டும் மெல்ல திறந்து பார்த்தேன், பார்த்தவுடனே மனசுக்கு இவன் நல்லவனில்லை அப்படீங்கறமாதிரி மனசுக்கு பட்டது.
இருந்தாலும் சட்டுன்னு அவனை எதிர்க்க முடியாது, முதலாளிக்கு தெரிஞ்சவனா இருந்தா, அதுக்கும் அந்தம்மா சத்தம் போடும், அதனால சுதாரிச்சு அவனை கண்காணிச்சு கிட்டு இருந்தேன்.
அவன் வாசல்ல வந்து நின்னான். என்னை அவன் கவனிக்கலை, ஏன்னா நான் கொஞ்சம் மறைவாத்தான் உட்கார்ந்திருந்தேன்.
கதவை தட்டுனான், அந்தம்மா கதவை திறந்தது இங்கிருந்தே தெரிஞ்சது, அந்தம்மா கூட ஏதோ பேசினதும் தெரிஞ்சது.
அதுக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியலை, அந்தம்மா திடீருன்னு கையில கழுத்துல இருக்கறதை எல்லாம் கழட்டி அவன் கையில கொடுக்கறதையும் பார்க்கறேன்.
அவன் ஏதோ சொல்றான், அந்தம்மா அப்படியே அவனை வெறிச்சு பார்த்துகிட்டு நிக்குது, இவன் மெல்ல வாசலை விட்டு வெளியே நடக்க ஆரம்பிக்கறான்.
இதுக்கு மேல என்னால தாங்க முடியலை, எந்திரிச்சவன் ஒரே தாவா தாவி போனவன் சட்டுன்னு அவன் கையை குறி வச்சேன்.
அவன் என்னைய எதிர்பார்க்கலை போலிருக்கு, அப்படியே மிரண்டு போய் ஓடறதுக்கு ஆரம்பிச்சான். அதுக்குள்ள நான் சத்தம் கொடுக்க, வாசல்லயே நின்னுகிட்டிருந்த பொண்ணு திடீருன்னு உணர்வு வந்த மாதிரி "திருடன்"திருடன்" சத்தம் போட..
அப்புறம் என்ன ! அவனுக்கு தர்ம அடி போட்டு கையில இருந்த நகைகளை எல்லாம் அப்பவே புடுங்கிட்டாங்க. இந்த மாதிரி திருடனுங்க யாரா இருந்தாலும் இரண்டு நிமிஷம் வசியம் பண்னற மாதிரி நிக்க வச்சு அவங்ககிட்ட இருக்கறதை அவங்களாவே கழட்டி கொடுக்க வச்சிடுவாங்கன்னு அங்குள்ளவங்க பேசிகிட்டாங்க.
இப்பவெல்லாம் எனக்கு ரொம்ப மரியாதை கிடைக்குது சார், ஒரு சிலர் என் பக்கத்துல வந்து என் தலையை தட்டிட்டு கூட போறாங்க.
என்னைய போலீஸ் டிபார்ட்மெண்ட்டுல கூட சேர்த்துக்கலாமுன்னு அடுத்த வீட்டு அக்கா பக்கத்து வீட்டு அக்காகிட்டே சொல்லிட்டு இருந்ததை கேட்டேன் சார்.
ஏன் சார் போலீஸ் டிபார்ட்மெண்ட் வேலைக்கு எங்களை மாதிரி ஆளுங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும்.
அடச்சீ..நாயே எப்ப பார்த்தாலும் தூங்கிட்டே இருக்கறே, அப்படீன்னு யாரோ என் முதுகில அடிக்கறாங்க.
வலி தாங்காம "வள்"வள் ளுன்னு கத்திட்டு அந்த இடத்தை விட்டு ஓடறேன் சார்.