அக்னிப் பறவை

”இந்தா இந்த ரூபாயைக் கொண்டு போய் ஒங்க அம்மாவிடம் குடு” என்று நாராயணன் அந்தச் சிறுமியிடம் கொடுத்தான். அவள் அவன் காலை அமுக்கிக் கொண்டிருந்தாள். எட்டு வயதுச் சிறுமியாகிய அவளுக்கு எதற்காக அவன் கொடுக்கிறான் என்று தெரியாது. அதை வாங்கி வைத்துக் கொண்டாள்.
“உன் அம்மாவுக்கு என்ன உடம்புக்கு? வேலைக்கு வரலையே!” என்று கேட்டான் நாராயணன்.

”ஒடம்பு சரியில்லைங்க” என்றாள் அந்தப் பெண் பச்சை.
“சரி , புடிச்சது போதும்; நீ மத்த வேலையைப் பாரு” என்று சொல்லி எழுந்தான் அவன்.

முப்பதைந்து வயது நிறைந்த நாராயணனும் அவனுடைய தாயுமே அந்த வீட்டில் வாழ்கிறார்கள். கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் அவனுடன் வாழ்ந்த அவனுடைய மனைவி குழந்தை குட்டி இல்லாமலே இறந்து போனாள். அவள் இறந்து மூன்று ஆண்டுகளாகின்றன. வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்றால் அவனுடைய ஜாதகம் அதற்கு குறுக்கே நின்றது. அவனுக்கு களத்திர தோஷம் இருக்கிறதாம். அதைச் சரியாக கவனிக்காமலே முதல் மனைவியைப் பெற்றவர்கள் கொடுத்து விட்டார்களாம். இரண்டாவது தாரம் களத்திர தோஷ ஜாதகம் என்ற இரண்டு தடைகளைக் கடந்து இதுவரையில் யாரும் அவனுக்குப் பெண் கொடுக்க முன் வரவில்லை.

ஏதோ ஓர் அலுவலகத்தில் கணக்கனாக எழுநூற்றைம்பது சம்பாதிக்கிறான். வீட்டில் இரண்டே பேராகையால் அதிகச் செலவு இல்லை. கொஞ்சம் பணமும் சேர்த்து வைத்திருந்தான்.
அவனுடைய தாய் நோய்வாய்ப்பட்டு எழுந்தவளாகையால் கடுமையான வேலை செய்ய முடியாதவள். ஏதோ சுருக்கமாகச் சமைத்துப் போடுவாள். அவன் வாய்க்கு ருசியாக எதையாவது உண்ண வேண்டுமென்றால் ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டு வருவான்.

வீட்டில் பெருக்கி மெழுகவும்,பாத்திரம் துலக்கவும், கடை கண்ணிக்குப் போகவுமாக ஒரு வேலைக்காரியை வைத்திருந்தான். கந்தம்மாளுக்கு இருபத்தி ஐந்து வயதிருக்கும். சின்ன வயசிலே கல்யாணமாகி பச்சையைப் பெற்றாள். அவள் பிறந்த வேளை தகப்பன் இறந்து போனான்.
கந்தம்மாளுக்கும் ஒரு தாய் இருந்தாள். பல காலம் கழித்துப் பிறந்த இந்த ஒரே பெண்ணோடு வாழ்ந்து வந்தாள். தன் பெண் குடியும், குடித்தனமுமாக வாழவில்லையே என்று எண்ணி அவளுக்குத் துணையாக இருந்து காலத்தைக் கடத்தி வந்தாள். அவளுடைய கணவன் - கந்தம்மாளின் தகப்பன் மிலிடரியிலே வேலை செய்து ஓய்வு பெற்று வந்த போது இந்த மனையை அரசினர் வழங்கினார்கள்.
அதில் சிறிய கூரை வீட்டைக் கட்டிக் கொண்டான். ஆனால் அதில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. கந்தம்மாளின் தாய் கெட்டிக்காரி. அந்த வீட்டின் பின்புறம் ஏதோ கொஞ்சம் காய்கறி போட்டு விற்றுக் கொஞ்சம் பணம் சம்பாதித்தாள். அதில் என்ன பெரிதாக வந்து விடப் போகிறது. ஆகையால் கந்தம்மாள் சம்பாதிக்க வேண்டியிருந்தது.
பச்சை அன்று வேலை முடிந்த பிறகு வீட்டுக்குப் போய் நாராயணன் கொடுத்த ரூபாயைக் கந்தம்மாளிடம் கொடுத்தாள். “எதுக்குக் குடுத்தார்? ஏதாவது வாங்கி வரணுமா!” என்று கேட்டாள் கந்தம்மாள்.
“இதை ஒங்கம்மா கிட்டே குடுன்னு சொன்னார். அவ்வளவு தான்” என்று சொன்னாள் பச்சை.
மறுநாள் கந்தம்மாள் வேலைக்கு வந்தாள். நாராயணன் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். அவள் அங்கே போய், “ இந்தாருங்க ஒங்க ரூபாய்!” என்று நீட்டினாள்.
“ஏன்! ஒனக்குத்தான் தந்தேன்.”

“எதுக்காக?”
“சும்மாத்தான்”
“சும்மா எதுக்குத் தர்றது? நான் சும்மா வாங்கிக்க மாட்டேன். ஒழைக்காத காசு ஒடம்பிலே ஒட்டாது.”
“நீ தான் ஒழைக்கிறாயே!”
“அதுக்குத் தான் சம்பளம் வாங்கறேன். காபி குடுக்கறாங்க. மிஞ்சின சோறு கொழம்பு எல்லாம் குடுக்கிறாங்களே!”
“அதுக்கில்லை, நீ எனக்குக் கொஞ்சம் வேலை செய்யணும். அதுக்காகத் தான் குடுக்கிறேன்.”
அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு பேசினான். கந்தம்மாளின் வாளிப்பான உடம்பிலே அவன் கண்கள் மேயலாயின. வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தாள்.
இருபது வயசு தான் மதிக்கும்படி இருந்தாள். சிவப்புத் தோல் வேறு.
“ஒங்களுக்குன்னு தனியே என்ன வேலை செய்யப் போறேன்? எனக்கு என்ன படிப்புத் தெரியுமா?”
“எனக்கு இந்த மொழங்கால் வலி தாங்க முடியறதில்லை. கொஞ்சம் காலை அமுக்கச் சொன்னேன். ஒரு நாள் அமுக்கினே, அப்பறம் ஒன்பொண்ணை அமுக்கச் சொல்றே. அவ அமுக்கினா வலி போகுமா?”
“சரி நானே அமுக்கறேன், அதுக்காக தனியே எனக்குக் காசு வேணாம்” என்று சொல்லி அவள் வீட்டு வேலையைக் கவனிக்கப் போய் விட்டாள். அவன் சாப்பிட்டு விட்டு அலுவலகம் போய் விட்டான்.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அவன் சீக்கிரமே சாப்பிட்டு விட்டுச் சற்றே இளைப்பாற படுத்திருந்தான். “கந்தம்மா”என்று கூப்பிட்டான். அவள் வந்து சொன்னபடி அவன் காலை அமுக்கினாள்.
இந்த மொழங்காலிலே தான் எத்தனை வலி? அங்கே அமுக்கு என்றான். அவள் அமுக்கினாள்.
“ஒன்னைப் பாத்தா, பாவமா இருக்கு என்று கனிந்த குரலில் சொன்னான் நாராயணன்.
“ஏன்?”
“ஒன்னைப் பாத்தா ஒரு பெண்ணைப் பெத்தவள்னு ஆரும் சொல்ல மாட்டாங்க. ஒன்னோட ஒடம்பு கட்டு அப்படி இருக்குது. நீ பெரும் பணக்காரன் வூட்டிலே பொறந்திருக்க வேண்டியது.”
“ஹூகும். அதெல்லாமிப்ப எதுக்கு நெனக்கணும்? இன்னமே நான் புதுசா வாழப் போறேனா? என்று அலுத்துக் கொண்டாள் கந்தம்மாள்.
“ஏன் வாழக்கூடாது? புருஷனோட வாழ்ந்தாத்தானா? இந்த வயசுல எதெது வேணுமோ அதெல்லாம் அனுபவிச்சுச் சுகமே இருக்கலாமே?”
“அதுக்கெல்லாம் குடுத்து வைக்கலையே நான்!”
“ஏன் அப்படிச் சொல்றே? நீ நல்லாச் சாப்பிடறதை ஆராவது வேண்டாங்கிறாங்களா? சினிமா போய் பார்த்து வரலாமே! அதுக்கு ஆர் தடை சொல்வாங்க?”
“நீங்க குடுக்கிற சம்பளத்திலே அப்படியெல்லாம் செய்ய முடியுங்களா?”
“அப்படியா? ஒனக்குப் பணம் கெடச்சா அதெல்லாம் செய்யலாமே!”
“பணம் கெடச்சாத்தானே!”
“நான் குடுக்கிறேன்.”
”இனாமாத் தருவீங்களா! எதுக்காகத் தரணும்?”
“இப்ப நீ என் காலைப் புடிக்கிறே; இப்படியே எனக்கு வேண்டியதைச் செஞ்சையின்னா ஒனக்குப் பனம் தர்றேன்; சினிமாவுக்குப் போகலாம். வேண்டிய சேலையை வாங்கிக் கட்டிக்கலாம்.”
“நீங்க என்ன சொல்றீங்க?” என்று சொல்லி நிமிர்ந்து நின்று அவனை உறுத்துப் பார்த்தாள்.
“நீ சந்தோஷமா இருக்கணுங்கறதுக்காகச் சொல்றேன்.”
“நான் சந்தோஷமா இருக்கவா, இல்லே, நீங்க சந்தோஷமா இருக்கணுங்கறதுக்காகவா? ஒங்க பேச்சிலே ஒண்ணும் புரியல்லே. எனக்கு இப்பச் சந்தோஷத்துக்கு ஒன்ணும் கொறையில்லே.”
இவ்வாறு சொல்லி விட்டு அவள் வீட்டுக்குப் போய் விட்டாள். மாலையில் வேலை செய்ய அவள் பெண் பச்சை வந்து போனாள்.
தன் வீட்டில் தலை வலிக்கிறதென்று படுத்துக் கொண்டிருந்தாள் கந்தம்மாள். அவளுக்குத் தலை வலிக்கவில்லை. மூளை தான் வலித்தது. அவள் உள்ளத்தில் அலை அலையாக எண்ணங்கள் வந்து மோதின.


இந்த ஆண் பிள்ளைகளுக்குத் தான் எத்தனை சபலம்? இளம் பெண்ணைக் கண்டால் அவர்கள் தம் கண்ணாலேயே குத்திக் குலைத்து விடுகிறார்களே. ஆண் பிள்ளைகள் எங்கே போனாலும் தாராளமாகப் போகலாம். யாரோடும் பழகலாம். ஆனால் பெண்கள் பழக முடிகிறதா? கொஞ்சம் நெருங்கிப் பழக முடிகிறதா? கொஞ்சம் நெருங்கிப் பழக ஆரம்பித்தால் அடிமடியிலே கையைப் போடுகிறார்களே! ஆண்களின் அறிவு உயர்ந்தது என்று சொல்கிறார்களே, ஒரு வேலைக்காரப் பெண்ணோடு சரசமாட எண்ணுகிறானே இந்த ஆண் பிள்ளை. அவன் பேசிய பேச்சுக்குள்ளே அவனுடைய எண்ணந்தான் நன்றாக வெளிப்பட்டதே. பெண்களுக்கு இப்படி உள்ளவர்களை எளிதில் உணர்ந்து கொள்ளும் நுட்பமான அறிவு இருக்கிறது. ஆண்களிலே சின்ன வயசானாலும் பெண்களைக் கழுகுப் பார்வை பார்க்கிற சுபாவம் போகாது போலிருக்கிறது.
இப்படி எண்ணும் போது அவள் அகக் கண் முன்னே ஒரு கட்சி விரிந்தது. போன ஆண்டு நாராயணன் வீட்டுக்கு வருவதற்கு முன் நடந்தது அது. அப்போது கந்தம்மாள் வேறு ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். அந்த வீட்டில் அறுபது வயதான கிழவர், அவருடைய பிள்ளைகள் இருவர், அவர்களுடைய பெண்டு பிள்ளைகள் எல்லோரும் இருந்தார்கள். பெரிய குடும்பமாகையால் அவளுக்கு நிறையச் சோறு கிடைத்தது. தன் தாய்க்குக் கொண்டு வந்து கொடுப்பாள்.

அந்த வீட்டுக் கிழவர் ரிடையரானவர் அவருக்கென்று தனியறை இருந்தது. அங்கே அவர் எப்போதும் டிரான்ஸிஸ்டர் ரேடியோ வைத்துக் கொண்டிருப்பார். அல்லது புத்தகங்களை வசித்துக் கொண்டிருப்பார். அவருக்கு கொஞ்சம் வாயுப் பிடிப்புண்டு. அதற்கு அவ்வப்போது தைலம் தடவிக் கொள்வார். அவருடைய பேரக் குழந்தைகளை தடவச் சொன்னால், ‘போ தாத்தா. வேலை இல்லை” என்ரு சொல்லிப் போய் விடுவார்கள்.
கந்தம்மாள் அங்கே வேலை செய்த போது அந்தக் கிழவர் தம் காலுக்கு எண்ணெய் தடவச் சொன்னார். பெரியவராயிற்றே என்று தடவினாள். ஒவ்வொரு நாளும் தடவச் சொன்னார். பிறகு அதுவே வாடிக்கையாகிப் போனது. ஒரு வாரம் ஆன பிறகு அவர் சொன்னார்.’ இந்தா, கந்தம்மா! இங்கே எண்ணெய் கீழே சிந்துது. குளிக்கிற அறையிலே தடவிக்கிறேன்” என்று அவர் சொல்ல அப்படியே அங்கே அவருக்கு எண்ணெய் தடவி விட்டாள்.
ஒரு நாள் தடவிக் கொண்டிருந்த போது குளியலறைக் கதவை மெல்லச் சாத்தினார் அந்த மனிதர்.

”அதை ஏன் சாத்தறீங்க?” என்று கேட்டாள் கந்தம்மாள். சும்மாத்தான். இந்த வீட்டு அம்மாவை ஆரோ பாக்க வராங்களாம். அவங்க இப்படி நான் இருக்கறதைப் பாக்கக் கூடாதுங்கறதுக்காகத் தான்” என்றார்.
மறுநாளும் கதவைச் சாத்தினார். அதோடு நிற்கவில்லை. அவள் தலையைத் தொட்டார். கழுத்தை நெருடினார். அவ்வளவு தான், அவள் காளியாகச் சீறத் தொடங்கினாள். “ என்ன கிழவனாரே, ஒனக்குப் புத்தி பேதலிச்சுப் போச்சா?” என்று கேட்டுக் கதவைத் திறந்தாள். அந்த வேகத்திலெ அவள் வெளியிலே போய் என்ன சொல்லி விடுவாளோ என்று அந்த மனிதர் நடுங்கத் தொடங்கினார்.
பெண்கள் ஆண்கள் மாதிரி அவசரக் குடுக்கைகள் இல்லை. அவள் வெளியே போனவள் எப்போதும் போல் வேலையைப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போனாள். மறுநாள் வந்து, ஏதோ சாக்குச் சொல்லி வேலையிலிருந்து நின்று விட்டாள். விஷயத்தை வெளியில் விட்டால் கிழவருக்கு மட்டுமா பழி! அவளைப் பற்றியுமல்லவா கதை கட்டி விடுவார்கள்? வீண் வம்பைக் கதையாக, குட்டிக் குறுநாவலாக, பெரிய பாரதமாகவே வளர்த்து விட எத்தனை பேர் இருக்கிறார்கள்?
அதற்கப்புறந்தான் இந்த வீடு வந்தாள். நாராயணனுடைய அம்மா மிகவும் பிரியமாக இருந்தாள். வேலையும் அதிகம் இல்லை.
இங்கும் ஆண் பிள்ளையின் மோக வெறி எனும் நெருப்பு புகை விடத் தொடங்கி இருக்கிறதே! உலகத்திலே ஆணென்றாலே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கிறது.
வீதியிலே கிடக்கிற காசைப் பொறுக்கிகிறது போல அல்லவா பெண்களைச் சூறையாட நினைக்கிறார்கள்? ஆண் ஒருவன் ஒரு பெண்ணைக் கெடுத்து விட்டால் ஆணுக்கு ஏதோ சில நாள் அபவதம் இருக்கும். பிறகு வழக்கம் போல அவிழ்த்து விட்ட காளை மாதிரி திரிவான். பெண்ணோ அப்படி இல்லையே! கெட்ட பேர் வாங்கிக் கொண்ட பெண்கள் கவுரவமாகப் பிழைக்க முடியுமா? அவள் உண்மையில் கெடாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டவளாக இருக்கலாம். ஆனால் வீண் வம்பிலே அவள் பேர் அடிபட்டால் அப்புறம் அவளை எல்லோருமே சந்தேகக் கண் கொண்டு தானே பார்க்கிறார்கள்!
அறுபது வயசுக் கிழவனானால் என்ன? முப்பத்திஐந்து வயசு மனிதனானால் என்ன அவர்களுடைய வயசு, தளர்ச்சி எல்லாம் உடம்புக்குத் தான். பெண் சபலம் என்பது எல்லா ஆண்களுக்கும் எந்த வயசிலும் இருக்கும் போலிருக்கிறது.
கந்தம்மாள் இப்போது ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்! இனி இப்படிப்பட்ட வேலைக்கு முழுக்குப் போட்டு விட வேண்டியது தான்!
அந்த மாதம் முடிந்தது. அடுத்த மாதம் பிறந்தது. கந்தம்மாள் அந்த வீட்டில் வேலை செய்வதை விட்டு விட்டாள்.

இப்போதெல்லாம் கமலாலயக்கரை மேட்டின் கீழே காய்கறி முதலியவற்றை விற்கிற பெண்களோடு சேர்ந்து, கீரை, கிழங்கு, காய்கறிக் கூடையை வைத்துக் கொண்டு கந்தம்மாள் அமர்ந்திருப்பதைக் காணலாம். இப்போது அவள் யாருக்கும் அடிமை இல்லை. எந்த ஆடவனும் அவளைக் கால், கை அமுக்கச் சொல்ல மாட்டான். தைலம் தேய்த்து விடச் சொல்ல மாட்டான்.
அவள் இப்போது சுதந்திரப் பறவை!

எழுதியவர் : மகேஷ் (7-Jul-21, 11:49 am)
சேர்த்தது : Mahesh
Tanglish : agnip paravai
பார்வை : 309

மேலே