புதுச்செருப்பு

புதுச்செருப்பு.....

சீதாராமன் ஒன்றும் பயந்த சுபாவம் உடையவர் என்று சொல்ல முடியாது! ‘ வலுச்சண்டைக்கு போகமாட்டார்! வந்த சண்டையை விடமாட்டார் ‘ ரகம் ‘ !!

ஆனாலும் அவர் பயப்படுவது இரண்டே இடத்தில் தான் …

ஒன்று பல் டாக்டர் கிளினிக்…இன்னொன்று செருப்புக் கடை. !! இரண்டுக்கும் சம்பந்தம் இல்லைதான் !

பல் மருத்துவர் அவரை சுழல் நாற்காலியில் உட்காரவைத்து , முகத்துக்கு நேரே லைட்டைப் காட்டி , வாய்க்குள் நீளமாய் எதையோ வைத்து அழுத்தும்போதே பாதி உயிர் போய் விடும் !

கார் மெக்கானிக் கடையில் பார்த்த எல்லா உபகரணங்களையும் அவர் கையில் பார்த்தால் பயம் வராமல் இருக்குமா ?

ஆனால் இப்போதெல்லாம் பல் மருத்துவம் ரொம்பவே முன்னேறியிருக்கிறது. !!!

போன மாசம் ஒரு பல்லைப் பிடுங்க வேண்டியிருந்தது ! ‘ ஆ’ என்று வாயைத் திறந்ததுதான் தெரியும் ! கொஞ்ச நேரமாச்சு ! ‘

டாக்டர் இன்னும் எவ்வளவு நேரம்?….. என்று ஏதோ குழறினார் !

“இதோ ! உங்க சொத்து…. என்று கையிலிருந்த சொத்தைப் பல்லை காட்டினார் டாக்டர்…!!!!

செருப்பு வாங்கப் போவதென்றால் வயிற்றைக் கலக்கும் !

‘ வாங்க ஸார் ! ‘ என்ன மாதிரி பாக்கிறீங்க ?? ‘ என்பதில் ஆரம்பித்து நாம் என்ன மாதிரி செருப்பை வாங்கவே கூடாது என்று நினைத்திருப்போமோ , அதை எப்படியோ தெரிந்து கொண்ட மாதிரி அதை நம் தலையில் கட்டியே தீருவது என்று பின்னாலையே அலையும் சேல்ஸ்மேனைப் பார்த்தாலே பயம் !

அவனும் இவரை ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை என்று பின்னாலேயே வருவான் !

நம்முடைய கண் போகும் திசையைப் பார்த்து பாய்ந்து அந்த ரேக்கில் இருக்கும் செருப்பை எடுப்பான் !

” ஸார் ! புது மாடல் ! லைட் வெயிட்! கால்ல இருக்கிறதே தெரியாது! நடந்து பாருங்க ஸார் ! “”

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஒரு கால் செருப்பைத்தான் எடுத்து வைப்பான்

எந்தக் கால் என்று குழம்பித் தவிக்கும் போது , அவசரமாய் நம் காலைப் பிடித்து ( உலகத்திலேயே நம்முடைய காலை இத்தனை ஆசையாய் பிடிப்பது இவன் மட்டும்தான் ) ,

‘ ஸார் ! வலது கால்! ‘ போடுங்க ! இதோ வரேன் ‘ என்று சொல்லி விட்டு இடது கால் செருப்பைக்கொண்டு வந்து ‘ கட்டை விரலை நல்லா உள்ளே நுழையுங்க ஸார் ! இப்போ நடந்து பாருங்க !”

நடக்கும்போது சரியாக இல்லாத மாதிரி இருந்தாலும் என்னவொ அவன் வருத்தப்படுவானே என்று

‘ பரவாயில்லை ! கொஞ்சம் கால் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கே ! “
…..
” இருங்க ஸார் ! அடுத்த சைஸ்கொண்டு வரேன் ! ”

சரியாய் இருப்பது மாதிரியும் இருக்கும், இல்லாத மாதிரியும் இருக்கும் !”

இந்திராவைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம் !

” சரிப்பா ! இதையே பேக் பண்ணிடு ‘

” ஸார் நடக்க நடக்க அட்ஜஸ்ட் ஆய்டும் !!!

‘எது அட்ஜஸ்ட்ஆகும் காலா , செருப்பா ‘ என்று கேட்க பயம் !!!!!

அவனுக்கு தெரியாததா ! எத்தனை பேர் வருகிறார்கள் !!!

வீட்டுக்கு வந்து நடந்து பார்த்தால் கழண்டு வந்துடும் போல பயம் !

இதேபோல் தான் ஒவ்வொரு தடவையும் செருப்பு வாங்கும் போதும் ! ஒண்ணு ரொம்ப டைட்..!!! இல்லையானால் லூஸ் ! சொல்லி வைத்த மாதிரி ஒரு வாரத்தில் அட்ஜஸ்ட் ஆய்டும் !!

இந்திரா இந்த விஷயத்தில் படு கெட்டிக்காரி ! அவனை உண்டு இல்லை என்று பண்ணி விடுவாள்.

அவன் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் ! கண்டு கொள்ளவே மாட்டாள் !

பத்து பதினைந்து ஜோடியாவது பார்த்தப்புறம் , பத்து catwalk பண்ணிப்பார்த்து தன் மனசுக்கு திருப்த்தியானலொழிய வாங்கவே மாட்டாள் !!! அப்படியே கச்சிதமாய் இருக்கும் !!

இந்த வம்புக்குத்தான் சீதாராமன் எவ்வளவு பழசானாலும் தைத்து தைத்து போட்டுக் கொள்வார்!

அடையாறு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வாசலில் செருப்பு தைக்கும் பழனி இவருடைய ஆத்ம நண்பன்!

நெய்க்கு தொன்னை ஆதாரமா அல்லது தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிறாப்போல் பழனியை நம்பி சீதாராமனா அல்லது சீதாராமனா நம்பி பழனியா தெரியவில்லை!!

இவரைப் பார்த்தவுடனே பழனி ரொம்ப சுருசுருப்பாகிவிடுவான்! அவனுக்கு சீதாராமனின் செருப்பில் எந்தந்த இடத்தில் எவ்வளவு தையல் போட்டிருக்கிறான் என்பது பழனிக்கு அத்துப்படி!

போன வாரம் மறுபடியும் செருப்பு காலை வாரி விட்டது !

பழனி உட்கார்ந்திருந்தான் ! செருப்பை வாங்கி இண்டு இடுக்கு விடாமல் பார்த்தான் !

” ஸார்! சொல்றேன்னு தப்பா நினைக்காத ஸார் ! இனிமே தையல் போட எடமே கெடையாது !

ஒஞ்செருப்பே என் தையல் பலத்திலதான் நிக்குது ஸார் !!! பேசாம இத்தை கடாசிட்டு புச்சு வாங்கிடு ஸார்!
அஞ்சு வருஷத்துக்கு நா கேரண்டி !!!

யாரு செருப்புக்கு ஐந்து வருட warranty தருவார்கள் ???

சீதாராமன் போன வாரம் தான் புதுச்செருப்பு வாங்கினார் !!!

சாதாரணமாய் புதிதாக எது வாங்கினாலும் கோவிலுக்கு முதலில் அணிந்து கொள்வது வழக்கம் ! ஆனால் செருப்பு மட்டும் இதற்கு விதி விலக்கு ! யாராவது எடுத்துக் கொண்டு போய்விட்டால் ? வேறு வழியில்லை !

பழனி சொன்ன மாதிரி பழைய செருப்பை குப்பையில் எறிந்து விட்டார் ! யாரிடமாவது குடுத்தால் அதாலேயே அடித்து விட்டால் !

அன்றைக்கு வெள்ளிக்கிழமை ! சீதாராமன் பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு தவறாமல் போய் விடுவர் !

புதுச்செருப்பு ! கவுன்ட்டரில் டோக்கன் குடுக்க யாரும் இல்லை !!

கோவில் வாசலில் ஒரு மூலையில் யாருக்கும் கண்ணுக்கு படாத இடமாய்ப் பார்த்து செருப்பை கழட்டி ஒண்ணுக்குமேல் ஒண்ணை வைத்து , வெளியிலிருந்தே ஒரு தரம் எல்லா தெய்வங்களையும் பிரார்த்திக்கொண்டுவிட்டு உள்ளே நுழைந்தார் !!!!

உள்ளே நுழைந்தால் எல்லா சாமியையும் நின்று நிதானமாய் பார்க்கவேண்டும் !

அம்மனைப் பார்த்துக்கொண்டே நிற்பார் ! தீபாராதனை காட்டும் வரை இடத்தை விட்டு நகரமாட்டார்!!! நவக்கிரகங்களை ஒன்பது முறை கட்டாயம் சுற்றியாக வேண்டும் !

முடித்து விட்டு நேராய் செருப்பை வைத்த இடத்திற்கு போனார் !

மூலையில் அவர் செருப்பு இருந்த இடத்தில் வேறு ஜோடி செருப்பு ! நன்றாக கையில் எடுத்து பார்த்தார் ! ஒரு வேளை தனக்குத்தான் புதுச் செருப்பு அடையாளம் தெரியவில்லையோ என்று நினைக்கவும் வழியில்லை !! ஏனென்றால் அது பெண்கள் ஸ்லிப்பர்ஸ் !!


கொஞ்சம் தலை சுற்றுவது மாதிரி இருந்தது !

ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை atleast பத்து தடவை எல்லா செருப்பையும் உத்து உத்து பார்த்தாச்சு !! இப்படிக் கூட நடக்குமா ??

கோவில் படியிலேயே உட்கார்ந்து விட்டார் ! செருப்பு தொலைந்ததோ பணமோ பிரச்சினை இல்லை !! யாரு செருப்புக் கடைக்கு மறுபடி போவது ???

கொஞ்சம் உட்கார்ந்து பார்க்கலாம் ! மறந்து போய் யாராவது போட்டுக்கொண்டு போய் விட்டு திரும்பி கொண்டு வந்து தரமாட்டார்களா என்று ஒரு நப்பாசை !!

உஹும் ! ஒருத்தரையும் காணம் !! யாரிடமாவது சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது !

பழனி எதுத்த மாதிரி தான் உட்கார்ந்து இருப்பான் ! நல்ல வேளை ….
இருந்தான்…..

” ஸார் ! வா ஸார் !! அதுக்குள்ள புதுசு புட்டுக்கிச்சா ?? இன்னா ஸார் செருப்பு விக்கிறாங்க?? எங்கிட்ட குடுத்து பாக்கட்டும் ……. என்று பேசிக் கொண்டே போனவன் சீதாராமனின் காலைப் பார்த்தான் !!!

” ஸார் !! இன்னா ஸார் !! இன்னும் வெறுங்கால்ல இருக்க ?? இன்னமுமா புச்சு வாங்கமக்கீற ??”

” பழனி ! என்னத்த சொல்றது ?? புதுச்செருப்பு வாங்கிட்டு கோவிலுக்குப் போய்ட்டு வந்து பார்த்தால் செருப்பை காணமப்பா !!”

” ஸார் !! அக்கிரமம் ஸார் ! கோயில் வாசல்ல திருடினா …இன்னாத்த சொல்றது ??..
‘ வெயிலு கொதிக்குது பார் ! பேசாம மறுக்க ஒண்ணு வாங்கிடு ஸார் …
வெறுங்காலோட போகாத….”

போற வழியில் தான் போலீஸ் ஸ்டேஷன் ! ஒரு புகார் குடுத்தாலென்ன ! அவருக்கே சந்தேகமாகிவிட்டது !

தனக்கு மூளை கீளை குழம்பிவிட்டதோ??? செருப்பு தொலைந்துவிட்டது என்று புகார் பண்ணினால் நேரே கீழ்ப்பாக்கம் போகச் சொல்வார்கள் !!!

நிஜம்மாகவே வெயில் பொரிந்தது ! வீடு வரை நடக்க முடியாது போலிருந்தது !

பக்கத்திலேயே ஒரு செருப்புக் கடை !!
தைரியமாய் நுழைந்து விட்டார் !

போனதுமே ஒரு சேரில் உட்கார்ந்து விட்டார் !

” ஸார் ! என்ன மாதிரி பாக்கிறீங்க?

” ஒரு அஞ்சு நிமிஷம் இருப்பா !!”

” தண்ணி குடிங்க ஸார் !!!!”

” அவருக்கு செருப்பை பார்க்கக்கூட தெம்பு இல்லை ! தண்ணி உள்ளே போனதும் தான் சரியானார் !!!

” ஜாஸ்தி விலையில்லாத ‘ lபுது மாடல் காட்டுப்பா !!”

” இரண்டு மூணு ஜோடியுடன் வந்தான் !

” ஸார் ! இதப் போட்டு நடந்து பாருங்க ! “

சீதாராமன் வேண்டா வெறுப்பாய் நடக்க ஆரம்பித்தார் !!!”

சடாரென்று நின்றுவிட்டார் ! ஒரு நிமிஷம் நின்று உத்து உத்து பார்த்தார் ! சந்தேகமேயில்லை ! அவருடைய செருப்பேதான் ! எப்படி தெரியும் ??

இந்திரா செய்த தந்திரம் தான் !! வெளிப் பக்கம் இரண்டு செருப்பிலும் நெயில் பாலிஷில் நன்றாக தெரிகிற மாதிரி சின்னதாய் பொட்டு வைத்து விடுவாள் !! எங்கிருந்து பார்த்தாலும் அடையாளம் தெரியும்!

அவருடைய அதே செருப்பை போட்டுக் கொண்டு, ஏறத்தாழ ஒத்த வயதுடைய ஒருத்தர் இரண்டு chair தள்ளி உட்கார்ந்திருந்தார் ! இவரா எடுத்திருப்பார் ! பார்த்தால் பரம சாதுவாய் தெரிகிறாரே !

” வில கம்மியா எடுப்பா !!” அவர்தான் salesman இடம் சொல்லிக் கொண்டிருந்தார் !!!

இவருக்கு எதுக்கு புதுச்செருப்பு ?? அதான் நல்ல ஜோடியாய்ப் பார்த்து திருடி போட்டுக் கொண்டிருக்கிறாரே !!
என்னதான் செய்கிறார் பார்த்துவிடலாம் என்று பக்கத்தில் உட்கார்ந்தார் !

விலை கம்மியில் ஒரு ஜோடியைப் பொறுக்கிக் கொண்டார் !

” Pack பண்ணிடவா ஸார் ??? ”

” இல்லப்பா ! நா போட்டுக்கறேன் ! இதை பேக் பண்ணிடு”

காலில் இருந்த செருப்பை எடுத்துக் கொடுத்தார் !!!! “

சீதாராமனும் எழுந்து விட்டார் !!!

” ஸார்! இத பேக் பண்ணிடவா ! சரியா இருக்கும் ! இதுக்கு 10% தள்ளுபடி இருக்கு ஸார் !!!”

சேல்ஸ்மேன் சீதாராமனை விடமாட்டார் போலிருந்தது !!!

” இல்லப்பா ! இப்போ வேண்டாம் ”

அவர் கவுன்ட்டரில் பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பினார் ! அவர் தப்பிப்பதற்குள் பிடித்தாக வேண்டுமே !!!!

” ஸார் !!! ஒரு நிமிஷம் !!! …….”
பின்னாடியே நடந்தார் சீதாராமன் !!!!

‘ என்னையா கூப்பிட்டீங்க ??’

‘ ஆமா ஸார் …..’
ஸார் உங்க கிட்ட தனியா பேசணும் …..

” எங்கிட்டயா ? உங்கள முன்ன பின்ன பாத்தது கூட இல்லையே ‘

” ஆனாஎன்செருப்ப பாத்திருக்கீங்களே! “

” ஸார் ! நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலையே ! ”

” நீங்க கையில வச்சிருக்கிறது என்னோட புதுச் செருப்பு ஸார் ! …
வாங்கி ஒரு வாரம் கூட ஆகலை ….

அப்படியே என் கைகளைப் பிடித்துக் கொண்டார் !

” என்ன மன்னிச்சிடுங்க! என் பேரு நாகராஜன் ! தயவுசெய்து நான் சொல்லப்போறத நீங்க நம்பணும் ! உங்களோட அரைமணிநேரம் உக்காந்து பேசணும் !

வஸந்தபவனில உக்காந்து பேச உங்களுக்கு ஆஷேபனை இல்லையே !!!

வஸந்தபவனில் ஃபேமிலி அறையில் ஒரு மூலையாய் பார்த்து உட்கார்ந்தார்கள் !

இரண்டு காப்பியும் போண்டாவும் order பண்ணிவிட்டு சீதாராமனைப் பார்த்தார் !

” எம் பேரு நாகராஜன் ! Retired government Clark ! டீச்சரஸ் காலனியில வீடு ! “

” ஸார் …..???

” எம்பேரு சீதாராமன் ! பக்தவச்சல நகர்ல இருக்கேன் !! ”

இதெல்லாம் என்ன வேண்டிக் கிடக்கு என்று மனசு சொன்னாலும் அவருடைய சாந்தமான பேச்சு அவரிடம் கோபித்துக் கொள்ள இடம் கொடுக்கவில்லை !!! ஆனாலும் பொறுமை போய் விட்டது !!

” நாகராஜன் ! எஞ்செருப்பு எப்படி ?????…..

” ஒரு நிமிஷம் ! நான் விவரமாய் சொல்லிடறேன் ஸார் ! நீங்க முதல்ல செருப்பு தொலைந்த கதையை சொல்லுங்கோ !!”

சீதாராமன் ஆதியோடந்தமாய் எல்லா கதையையும் சொன்னார் !

நாகராஜன் நிறுத்தி நிதானமாய் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார் !!!!!!

” உங்கள் மாதிரிதான் நானும் வெள்ளிக்கிழமை தவறாமல் பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்கு வந்துடுவேன் !

இன்னிக்கு காலம்பற எட்டு மணிக்கு கிளம்பி கோவில் கிட்ட வந்துட்டேன் ! பழைய செருப்பு ! வார் அறுந்து போச்சு ! தூக்கித் தான் எறியணும் !!

சரி விதியேன்னு கோவிலுக்குள் நுழைந்துட்டேன்! ரொம்ப நல்ல தரிசனம் ! திரும்பி அப்படியே நடந்துடலாம்னு பத்தடி கூட வச்சிருக்க மாட்டேன் ! நல்ல கூரான கல்லு பதம் பாத்துடுத்து !

கதையே இங்கதான் ஆரம்பம் !

” நான் highly diabetic patient ! போன வருஷம் ஒரு முள்ளு கால்ல குத்தி ஆறவேயில்லை ! கிட்டத்தட்ட ஆறு மாசம் !!! டாக்டர் நல்லா திட்டினார் !

இவ்வளவு சக்கரையை வச்சிட்டு எப்படி தைரியமாய் வெறுங்காலோட நடக்கிறீங்களோ எனக்கு புரியல! கொஞ்சம் விட்டிருந்தா gangrene ஆகி காலையே ஆம்ப்யூட்டேட் பண்ண வேண்டியிருந்திருக்கும்!

இனியொரு தடவை வெறுங்காலோடு நடந்து கல்லு கில்லு குத்திடுச்சின்னு வந்தீங்க நா பாக்கவே மாட்டேன் !!!!”

” எனக்கு டாக்டர் சொன்னது ஞாபகம் வந்துடுத்து ! வெயில் வேற சுட்டெரித்தது ! கொப்பளம் வந்துவிடும்! பாத்தேன் ! புதுசா உங்க செருப்புத்தான் கண்ணில பட்டுது ! ( கண்ணில் படாது என்றல்லவா மறைத்து வைத்தார் )

பழைய செருப்பை எடுக்க மனசு வரலை ! என்னை மாதிரி செருப்பு வாங்க முடியாதவராயிருக்கும் !! ( என்ன logic பாருங்க ) ! போட்டுக் கொண்டு நேராய் கடைக்குப் போவது !! புதுச் செருப்பு வாங்குவது ! எடுத்த செருப்பை பூக்கடை மீனாட்சியிடம் குடுத்து யாராவது செருப்பைத் தேடி வந்தால் ஒப்படைத்து விட வேண்டியது !!! இது தான் சீதாராமன் பிளான் !!

ஆனால் என்னோட அதிர்ஷ்டம் பாருங்கோ !! உங்களையே நேரில் பார்க்க நேர்ந்தது தெய்வ சங்கல்பம் !!!

சீதாராமன் !! நான் பண்ணினது பெரிய தப்பு ! நான் பண்ணினது நியாயம்னு சொல்லவரல !!!

என்னோட சுயநலத்துக்காக உங்களுக்கு எவ்வளவு சிரமம் குடுத்துட்டேன் ! எனக்கு இருக்காமாதிரி மத்தவங்களுக்கும் ஏதாவது ஒரு பிராப்ளம் இருக்கும்னு தோணவேயில்லை பாருங்கோ !!

I’m very very sorry Seetharaman !!!
தயவுசெய்து என்னை மன்னிச்சிடு ங்க!!!

சீதாராமன் இதை எதிர்பார்க்கவேயில்லை !!!

செருப்பை எடுத்தவர் மீது அநியாயத்துக்கு கோபம் வந்ததது வாஸ்த்தவம் !! இப்போது எங்கே போனது அந்தக் கோபம் ???

ஒவ்வொரு காரியத்துக்குப் பின்னாலும் நியாயமான ஒரு காரணம் இருக்குமானால் மனிதர்களை எவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளலாம் !!

போனது போகட்டும் நாகராஜன் !! இத நெனச்சு ரொம்ப வருத்தப்படாதீங்க ! உங்க உடம்ப முதல்ல கவனிச்சுக்குங்க ! வெயில்ல அலையாதீங்க ! என்னோடே ஒரு இடத்துக்கு வரணும் !!!

” போலாம் சீதாராமன் !! எங்க கூப்பிட்டாலும் ரெடி !!!”

நேராக பழனியிடம் போனார் !! ஏதோ ஒரு பையை சீரியசாகத் தைத்துக் கொண்டிருந்தான் !!!
முதலில் காலைத்தான் பார்த்தான் !!!

” வா ஐயரே !! செருப்பு வாங்கீட்டாப்ல !!!!”

” இல்ல பழனி ! செருப்பு கிடச்சிடுச்சு!”

” நம்ப முடியவே !! எந்த திருட்டுப் பயலாவது எடுத்த செருப்பை திருப்பிக் குடுப்பானா ?? அதுவும் புத்தம் புதுசு !!!”

” பழனி ! யாரும் திருடல ! அது ஒரு பெரிய கதை ! ஒரு நாள் சாகவாசமாய் பேசலாம் !
உனக்கு ஒரு புது கஸ்ட்டமர் !!! பேர்
நாகராஜன் ! இனிமே இவரையும் நல்லா கவனிச்சுக்கோ !!!

” ஸார் ! நீ சொல்லிப்புட்டா அப்பீலே கிடையாது! ” இன்னும் கொஞ்ச நாள் என் வண்டி ஓடும் !!!”

இப்போதெல்லாம் சீதாராமனும் நாகராஜனும் ஒன்றாகத்தான் கோவிலுக்கு போகிறார்கள் !

சாமி தரிசனம் முடிந்து பழனியைப்பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு நேராய் வஸந்தபவனில் ஒரு காப்பி , போண்டா !!!

இதைவிட வேறு என்ன வேண்டும் ?
ஒன்றை தொலைத்தார்! ஒன்று கிடைத்தது !!!

” ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் !! “

அவ்வையார் நல்வழி…..

எழுதியவர் : சரசா சூரி (11-Aug-21, 6:29 pm)
சேர்த்தது : சரசா சூரி
பார்வை : 186

மேலே