குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார் இசைந்து – நல்வழி 9
நேரிசை வெண்பா
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து. 9 நல்வழி
பொருளுரை:
ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய் மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும் அந்த ஆறானது ஊற்றுநீர்ப் பெருக்கினால் உலகத்தாரை உண்பிக்கும்;
அதுபோல, நற்குடியிற் பிறந்தவர் வறுமையுடையவரானாலும் இரந்தவர்க்கு மனமிசைந்து இல்லையென்று சொல்லமாட்டார்; இயன்றது கொடுப்பர்.
கருத்து:
உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார்.
விளக்கம்:
கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெறும் மணலாக ஆறு வற்றிப் போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போல, நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் போது இல்லையெனாது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.