ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் – நல்வழி 10

நேரிசை வெண்பா

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும். 10 நல்வழி

பொருளுரை:

பெரிய பூமியிலுள்ள மனிதர்களே; வருடம் முழுவதும் அழுதுபுரண்டாலும் இறந்தவர் திரும்பி வருவரோ, வரமாட்டார்; ஆதலினால், அழ வேண்டுவதில்லை; நமக்கும் அம்மரணமே வழியாகும்;

நாம் இறந்து போகுமளவும் எமக்கு யாது சம்பந்தமென்று பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.

விளக்கம்:

பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர் திரும்ப இந்த பூமிக்கு வருவதில்லை,

பல முயற்சி செய்தாலும் இறப்பை தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க / தப்பிக்க முடியாது.

இறப்பு உறுதியாக இறுதியில் வரும். ஆதலால் நமக்கு மட்டும் என்று சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருள்களை அடுத்தவருக்கு கொடுத்து நாம் வாழ வேண்டும்.

இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும் பயனில்லாமையால் கவலையற்று அறஞ்செய்து வாழ்க

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-21, 7:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 3098

சிறந்த கட்டுரைகள்

மேலே