முழுமக்கள் காதலவை மூன்று – திரிகடுகம் 9

இன்னிசை வெண்பா

பெருமை யுடையார் இனத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்
முழுமக்கள் காத லவை. 9 – திரிகடுகம்

பொருளுரை:

பெருந்தன்மை உடையவருடைய இனத்தினின்று நீங்குதலும், தமக்கு உரியராதல் இல்லாத மாதரை விரும்பி அவரோடு வாழ்தலும், சிறந்தவை அல்லாத செயல்களைச் செய்யத் துணிதலும் ஆகிய இம்மூன்றும் மூடர் விரும்புபவையாம்.

கருத்துரை:

நல்லாரிணக்கம் விடுதலும், தமக்கு மணஞ்செய்து கொடுக்காத பெண்களை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும் அறிவற்ற மூடர்கள் செயல்களாம்.

பெருமை - அறிவொழுக்கங்களில் மிகுதியுடைமை.

உரிமை: கிழமை, பற்று,

தன்மனைக்கு உரிமையுடையவள் மனைவி.

அறிவின்மையாகிய குறையுள்ள மக்களை முழுமக்கள் என்றது மங்கல வழக்கு:

படித்து வருந்தி மனத்திலாயினும் உடம்பிலாயினும் சிறிதும் புரைபடாதவர்; அஃதாவது: பிறந்தபடியிருப்பவர்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-21, 7:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே