நன்மை பயத்தலிலாத மூன்று – திரிகடுகம் 10

இன்னிசை வெண்பா

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில. 10 – திரிகடுகம்

பொருளுரை:

நெடுங்கணக்கு முதலியன கற்பிக்கும் ஆசிரியரை இல்லாத ஊரிலிருத்தலும், மாறுபட்ட பொருளை நீக்கும் கல்வி கேள்விகளில் முதிர்ந்தவரை இல்லாத சபையிலிருத்தலும், பகுத்து சாப்பிடும் குணம் இல்லாதவர் பக்கத்திலிருத்தலும் ஆகிய இந்த மூன்றும் ஒருவனுக்கு நன்மையைத் தருவன அல்லவாம், (தீமை பயப்பனவாம்)

கருத்துரை:

கல்வி கற்பிக்கத் தக்கவரில்லாத ஊரிலிருப்பதும், ஏற்பட்ட வழக்கைத் தீர்க்கும் திறமில்லாதவர் சபையிலிருப்பதும், பகுத்து சாப்பிடும் குணம் இல்லாதவர் பக்கத்திலிருத்தலும் பயனற்றவை. இருக்க வேண்டாம் என்பது கருத்து.

கணக்காயர் - கணக்கு+ஆயர், கணக்கை ஆய்ந்தவர்;

கணக்கு - இஃது இலக்கணம் முதலியவற்றிற்கும் உப லட்சணம்;
ஆயர் - ஆராய்ந்தவர்; ஆய் - ஆராய், இவர் மூலபாடங் கற்பிப்பவர் என்பது,

பிணக்கு - பிணங்குதல். ஒரு பொருளைக் குறித்து இருவர்க்குளதாம் மாறுபாடு.

அறுக்கும் - ஐயந்திரிபற நீக்கும். மூத்தோர் - கற்றறிந்த பெரியோர்.

அவைக்களன் - சபையாகிய இடம்:. பாத்து - பகுத்து.

இல்வாழ்வான் பிரமசாரி முதலிய ஒன்பதின்மர்க்குங் கொடுத்துண்பது முறையெனத் திருவள்ளுவர் அறுதியிட்டிருப்பினும்,

விருந்தினர்க்கும் உறவினர்க்குமாவது கொடுத்துண்பது இன்றியமையாதது என்பது வற்புறுத்தப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-21, 7:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே