தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் – முத்தொள்ளாயிரம் 62
நேரிசை வெண்பா
தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால் -- யானோ
எளியேன்ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர். 62
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
யானோ வலிமையில்லாத எளியவள்; ஒரு பெண்; ஈரம் பொருந்திய குளிர்ந்த பூமாலை அணிந்த பாண்டியன் அன்பு செய்ய மாட்டானாயின், அவ்வாறு தலைவியிடம் அன்பு செய்யாமை முறையன்று என்று அவனிடம் சொல்பவர் யார்?
வானில் அடங்கிய உலகங்கள் அனைத்தையும் தான் ஏற்ற ஒப்பற்ற வெண்கொற்றக் குடைக்கீழ் காப்பதுவும் அப்பாண்டிய மன்னனே!
உலகத்தார் அனைவரையும் காக்குக் பாண்டியன்; அவனையெண்ணி வருந்தும் தலைவியின் பிரிவுத் துயரைத் தீர்க்கவில்லை; அன்பின்றி உள்ளான்;
மன்னனாக இருப்பதனால் அவனிடம் சென்று தலைவியின் துயரைத் தீர்ப்பாயாக என்று அறிவுரை கூற யாரும் முன்வர மாட்டார்கள் எனப்பட்டது.

