சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள்
சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள்
நூலகத்தில் இருந்து எடுத்து வந்த எழுத்தாளர் சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள், புத்தகங்களில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்து வாசகர்களுக்கு கொடுத்துள்ளேன்.
எழுதியவர் சுஜாதா
பதிப்பகம் : விசா பப்ளிகேசன்ஸ்
கிடைக்குமிடம் : திருமகள் நிலையம்
சுவாரசியமான சங்கதிகள் (எனக்கு) ஒரு சில
அக்டோபர் 1972
புதுக்கவிதை பற்றி சற்று பேசலாம். புதுக்கவிதை தற்போது rash போல் நம்மிடம் பரவி இருக்கிறது.
நான் புதுக்கவிதையை எதிர்ப்பவனுமில்லை, யாப்பு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவனுமில்லை. புதுக்கவிஞர்கள் எல்லோருக்கும் அமிதசாகரர் இயற்றிய யாப்பருங் கலக்காரிகையிலே இரண்டு மூன்று பாடங்கள் நடத்த விருப்பம்
“பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறமெழ
உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி
உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னிவிட்டேன்
என் அப்பா…”
போன்ற அபார வரிகளின் மரபை !
ஞானக்கூத்தன், சி. மணி இருவருக்கும் ‘யாப்பை’ பற்றி தெரிந்திருக்கிறது, காமராசனிடம் form இருக்கிறது அது அமையாதபோது உரை நடைக்கு சென்று விடுகிறார்.
நவம்பர் 1972
பொதுவாகவே இந்த விமரிசகர்கள் விமரிசனம் செய்யப்படும் புத்தகத்தையோ, அல்லது திரைப்படத்தையோ பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு முக்கியம் தத்தம் சொந்த அறிவுகளின் விஸ்தாரத்தை காண்பிப்பதே.
எல்லா விமர்சனங்களும் கால விரயம், பேப்பர் விரயம், என்று படித்தது ஞாபகம் வருகிறது. விமர்சனத்தை பார்த்து ஒரு புத்தகத்தை வாங்குவதோ, சினிமாவை தவிர்ப்பதோ இல்லை என நினைக்கிறேன். எதுவுமே அவர்களின் கலை உணர்ச்சிகளை பொறுத்து நிகழ்வதில்லை. அவர்கள் கையில் இருக்கும் பணம், கடன் வாங்கும் திறமை, அவர்களின் நேர நிலைமை இவைகளை பொருத்த்துதான்.
டிசமபர் 1972
உரை நடையை எளிதாக எழுதுவதற்கு ஒரு கழகம் ஆரம்பித்தால் அதற்கு நான் உடனே ஆயுள் சந்தா அனுப்புவேன். தற்போது தமிழில் கொஞ்சம் தீவிரமாக சிந்திப்பவர்கள் மிக சிக்கலாக எழுதுகிறார்கள்
உதாரணம் சொல்கிறேன்
“இலக்கியத்தில் நேற்று இல்லாதிருந்து இன்று இக்கணம் புதிதாக நிகழ்ந்து சாத்தியமாகி உள்ள ஒரு பரிமாண விஸ்தாரம் புகைப்படக்கலை, அல்லது தியேட்டரைச் சார்ந்துள்ள, எல்லகளிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டதனாலும் விஸ்தாரம் சாத்தியமாகிவிட்ட இக்கணமீதிலிருந்து அது இலக்கியத்தை சார்ந்த எல்லையாகி விடுகிறது”
இந்த வாக்கியம் அதை எழுதியவர் தீவிரமாக ஒன்றை சொல்ல முயன்றிருக்கிறார் ஆனால் விஷயம் ‘பஞ்சு படிந்து’ வாக்கிய சிக்கலில் தன்னைத்தானே சுருட்டி கொண்டு இருக்கிறது.
ஜனவரி 1973
செல்லப்பாவை நன்றி மறந்து தாக்குகிறார்கள். செல்லப்பாவை மறுக்க முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன. (வாடி வாசல் நிச்சயம் அதில் ஒன்று)
புள்ளி என்கிற புத்தகத்தில் சில நல்ல கதைகள் இருக்கின்றன. நீலமணி, சுப்ரமணியன், பாலகுமாரன்,
பிப்ரவரி 1973
ஒரிஜினல் ஹிப்பிகள் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் ‘ஞானக்கோவை’ என வழங்கும் ‘சித்தர் பாடல்’ படிக்கும்போது ஹிப்பி நாகரிகத்தில் புதிதாக ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.
‘மனதை ஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி எனதறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம்’
ஓட்டாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றி தேட அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம் செத்த சவம் போல் திரிய வேண்டுமாம்
இந்த வரிகளை பாருங்கள்
‘கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வாந்தாற்போல்
உடலில் ஒளித்த சிவம் ஒளி செய்வது எக்காலம்’
ஏப்ரல் 1973
பல கன்னடப் படங்கள் ‘மாலைப்புலி’’ ‘பஸ்திபுல்புல்’ ‘தங்கக் கள்ளன்’ என்று வருகின்றன. அதன் நடுவே ‘கிரிஷ் கர்னாட்’ போன்றவர்களின் பாதிப்பினால் சில நல்ல படங்களும் வருகின்றன. இங்கே படம் எடுப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாய் இருந்தால் போதும், படம் வெளி வந்தவுடன் ‘ராஜ்ய சர்க்கார்’ ஐம்பாதாயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். உயிர் வாழும் எழுத்தாளர்களின் நாவல்களை படம் எடுக்கிறார்கள்.
மே 1973
ராஜ ராஜ சோழன் சிவாஜி கணேசன் நடிக்கும் தமிழ் படத்தில் எத்தனையோ செலவழித்து மெட்ராசிலேயே தஞ்சை கோயிலையும் நந்தியையும் அட்டையில் செட் அமைத்து பிடித்திருக்கிறர்களாம். இது நல்லதா? இருநூறு மைலில் இருக்கும் தஞ்சாவூர் அங்கு செல்லவில்லை, அதற்கு காரணம் தஞ்சை கோயிலில் இன்று இருக்கும் எலக்ட்ரிக் கம்பங்களும், கம்பிகளும், நியான் விளக்குகளும் என்று சொல்லப்படுகிறது
இவ்வளவு செலவு செய்து படம் எடுப்பவர்கள் இதை எல்லாம் எடுத்து விட்டு மறுபடியும் போட்டு விட்டால் போதாதா?
செப்டம்பர் 1973
கசட தபற நின்று போனதில் நாம் எல்லோரும் கொஞ்சம் இழந்திருக்கிறோம்.
சமீபத்தில் கண்ணதாசன் பத்திரிக்கையில் ஒரு குறு நாவலில் சரளமான பிராந்திய தமிழ் உபயோகப்படுத்த பட்டிருந்ததை ரசித்தேன்.
அக்டோபர் 1973
ஞானக்கூத்தனின் கவிதைகள் யாப்புடன் அமைந்தவை. (மேலாக பார்த்தால் இது தெரியாது)
‘கால வழு அமைதி’ என்கிற கவிதை தொகுப்பை சிறந்த கவிதையாக நான் சொல்வேன்
ஞானக்கூத்தனின் உவமைகளில் ஆச்சர்யங்கள் இருக்கின்றன். எது எதற்கு உவமையாக போகிறது என்கிற ஆச்சர்யம்.
டிசம்பர் 1973
தாகம் என்கிற தமிழ் படத்துக்கு சென்னையில் தியேட்டர் கிடைக்கவில்லையாம். இந்த படத்தை சமீபத்தில் ‘பங்களூரில்’ ஒரு விழாவில் பார்த்தேன். பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆதரவில் எடுக்கப்பட்ட தமிழ் படம். ‘சென்னை பிலிம் இன்ஸ்டியூட்’ சரக்கு இந்த படம், பாபு நந்தன் கோடு, டைரக்டர். காமிரா துரையிடம் திறமை நிச்சயம் இருக்கிறது. முத்துராமனும் நந்திதாவும் இயல்பாக தெருவில் செல்லும்போது… முத்துராமன் கண் தெரியாதவனாக இயல்பாக நடித்திருக்கிறார்.
ஏப்ரல் 1975
என் இலக்கிய நண்பர்கள் போன வருட கணையாழி இதழ்களை கேட்கிறார்கள். அனுபவிக்கிறார்கள். நீங்கள் ஏன் சந்தா வாங்க கூடாது? என்று கேட்டால் வாங்கி விடுகிறோம் என்கிறார்கள். ஆனால் வாங்க மாட்டார்கள் என்பது தெரியும்
மே 1975
சாமிநாத அய்யரின் ‘என் சரித்திரம்’படிக்க ஆரம்பித்தேன்.என்னை கவர்ந்தது, அந்த எளிய நடைதான்.
செப்டம்பர் 1975
கணையாழிக்கு பத்து வருடம் ஆனது போல் இந்த பக்கத்திற்கு ஒன்பது வருடங்கள் பதினோரு மாதம் நிரம்பி விட்டது. அவ்வப்போது ‘அம்பேல்’ ஆனாலும் “எண்பது” பக்கங்கள் எழுதி விட்டேன். இரண்டாம் இதழில் இருந்து ‘நீர்க்குமிழிகள்’ தலைப்பை கொடுத்து ஸ்ரீரங்கம் எஸ்.ஆர், பெயரையும் கொடுத்து எழுத சொன்னார் கஸ்தூரிரங்கன்.
டிசம்பர் 1975 (டிசம்பர் 1965-டிசம்பர் 1975)
ல.ச.ரா வின் ‘பாற்கடல்’ என்னும் கதையை படித்து பாருங்கள்.அதற்கு ஈடான கதை இன்னும் எழுதபடவில்லை.
பிப்ரவரி 1976.
டாக்டர் மு.வ. அவர்கள் ஒரு காலகட்டத்தில் வருஷத்திற்கு இரண்டு காவியங்களாக எழுதி தள்ளி இருக்கிறார். என் காலேஜ் தினங்களில் “கள்ளோ காவியமோ” ‘விடுதலையா’ ’அல்லி’ போன்ற காவியங்களை எல்லாம் படித்திருக்கிறேன்
இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம் ‘போர்னோ’ கிடையது. பாரதியார் இதை தொடவில்லை, பாரதிதாசன் ‘ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத்த் தலைப்பட்டன. உடல்கள்’ இல்லை. புதுமை பித்தன். கு.ப.ரா. போன்றவர்கள் தலை வைத்து படுக்கவில்லை.
ஏப்ரல் 1976
சென்னை வானொலியில் விரும்பி கேட்டவை நிகழ்ச்சியில் நான் விரும்பி கேட்டவை
‘திருவாளப்புத்தூர் தீனதயாளன் நாயுடு, கொண்டித்தோப்பு தமிழரசி, ஏழுகிணறு சந்திரசேகர், மணிமாறன் மொட்டை, துவரங்காடு சந்திரமோகன், மங்கலப்பேட்டைஒ ஷகிபுதீன், ஆயிஷா பீபி, ஜமால், பூமிகுப்பம் தேநேசன், வியாசர்பாடி ராஜா, தம்பரம் சுப்பு அம்மாள்….
சட் சட்டென்று பெயர்கள் மாறும்போது அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசிப்பேன். தம்பரம் சுப்பு அம்மாள் இரட்டை பின்னலா வைத்திருப்பார்? ம்ஹூம் கொண்டித்தோப்பு தமிழரசி?
ஜூலை 1976
புவியரசு நல்ல கவிதை எழுத கூடியவர் என்ப்தை அவருடைய ‘இதுதான்’ கவிதை தொகுப்பு தெரிவிக்கிறது. செய்யுளும் எழுத கூடியவர். ஆனால் அவருக்கு அடிக்கடி தடை படுவது சிவப்பு சிந்தனை. எழுதி கொண்டிருப்பவர் திடீர் என்று ரத்த ஆற்றுக்கும் புரட்சி கனலுக்கும் இறங்கி விடுகிறார். உதாரணம்
கண்ணீரை துடைத்து விட்டுக்
கடுகி வாருங்கள்
கண்களிலே கனல் பறக்க்க்
கிளர்ந்து வாருங்கள்
நல்ல கவிதை
கனத்த
படிம ஆடை
அணி அலங்கார
ஒப்பனைகளுடன்
அரங்கேறிய உங்கள்
அடையாளம் தெரியவில்லை
எனக்கு
மேடையின் பின்னே
ஒப்பனை அறையின்
எளிய வாயிலில்
காத்திருக்கிறேன்
முகம் பார்க்க
புவியரசு பல இளைஞர்களின் சிந்தனைகளை பாதிக்கிறவர் என்பது எனக்கு தெரியும்.
அக்டோபர் 1976
கமலஹாசனுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன், இருபத்து மூன்று வயது இளைஞர், ஒரு மலையாள படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார். ஜிப்பா ஜரிகை வேஷ்டி. அவர் அறையில் ஆடம்பரங்கள் ஏதுமில்லை, ஏர் கண்டிஷன்ரை தவிர. ஒரே ஒரு படம் உக்கிரமாய் முறைக்கும் புரூஷ்லி. சவுன்ட் இன் சினிமா பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன. இங்கிலீஷ் பண்பட்டிருந்தது. கணையாழி போன்ற பத்திரிக்கைகளையும் கவிதைகளையும் இரசிக்கிறார்.
எனக்கு அழ வரவில்லை, அழு அழு என்கிறார்கள், ஒரு சமீபத்திய தமிழ் படத்திற்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று.
பாடலை படமெடுக்கும்போது காதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கர்யம், உதட்டசவை மறந்து விட்டால் ! சட்டென்று கூந்தலை பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்.
மார்ச் 1977
ஏறக்குறைய பதினோரு வருஷங்களுக்கு அப்புறம் பம்பாய் சென்றேன். ஒரு வாரம் இருந்தேன்.பம்பாய் வானத்தை வருட, ஏகப்பட்ட விரல்களை வளர்த்து கொண்டிருந்தது. கொலாபா, நாரிமன், பாயிண்ட் தேப்பியன் ஸீ, பகுதிகளில் எல்லாம் மேல்நாட்டு நாகரிகத்தின் சாயல் தெரிந்தது.
ஜூன்1977
எழுத்தாளர் கி ராஜநாராயணனுடன் பேசுவது போலிருக்கிறது, அவரது கோபல்ல கிராமத்தை படிக்கும் போது. சம்பிரதாய நாவல்களின் வடிவத்தில் இல்லை. இஷ்டப்பட்டபோது சரித்திரம் தொடர்கிறது. சளைக்காமல் ஏறக்குறைய பட்டியல் போல் ஒவ்வொரு நாயக்கரும் அறிமுகமாகிறார்கள். இந்த ஆள்தானய்யா இந்த கதையின் நாயகன் என்று சொல்ல முடியவில்லை, சரித்திரம், கர்ண பரம்பரை கதை, மாட்டு வாகடம், தயிர் தோய்க்கும் முறை, நாட்டு வைத்தியம், விநோத ஜந்துக்களை உண்ணும் முறை, எத்தனையோ சமாச்சாரங்கள் கலந்து இஷ்டப்பட்ட வரிசையில் வந்தாலும் கோபல்ல கிராம்ம் ஒரு மிக அருமையான நாவல் என்று சொல்வேன். காரணம் அதை எழுதியவர் எழுதிய விஷயத்தின் மேல் கொண்டிருந்த பற்று, இசை என் காதல்…
ஜனவரி 1978
இந்திரா பார்த்தசாரதிக்கு பரிசு கிடைத்திருக்கிறது, அகாடமியை சென்ற வருஷம் நாராய் கிழித்தவர்கள் இந்த வருஷம் அதை போற்ற வேண்டும். மாட்டார்கள். சும்மா இருப்பார்கள், நான் சொல்லுகிறேன் well done academy ! பார்த்த சாரதியின் இலக்கிய படைப்புகளைத் திரும்பி பார்ப்பதற்கு இது தக்க தருணம்.
ஜனவரி 1976
வையாபுரி பிள்ளையின் சில புத்தகங்களை (தமிழ் புத்தகாலயம்) விரும்பி படித்தேன். பிள்ளையவர்கள் நம் பழைய தமிழ் நூல்கள், காலத்தில் சற்று பிற்பட்டவை என்று சொல்லி திட்டு வாங்கி கொண்டது. “சிலப்பதிகாரம்” சங்க காலத்திற்கு பிற்பட்டது என்று சொல்ல அவர் காட்டும் காரணம்
“யான்” என்கிற தன்மை ‘ஒருமை பதப்பிரயோகம்’ தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. “நான்” என்கிற வழக்கு அதில் இல்லை.”நான்” என்பது பிற்பட்ட வழக்கு, சங்க நூல்களில் “யான்” தான் வருகிறது. மாறக சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் “நான்” என்பது வருவதை சுட்டி காட்டுகிறார், வையாபுரி பிள்ளை.
மே 1979
இஞ்சீனியர்களுக்கு என்று சிறு பத்திரிக்கைகள் பல உண்டு, அவைகளில் இருந்து சில கேள்விகள் கேட்கிறேன் விடை தெரியவில்லை என்றால் கடைசியில் பார்க்கலாம்.
1. சராசரி மனிதனுக்கு எத்தனை பிறந்த தினம் ? – ஒன்றே ஒன்று
2. முப்பதை பாதியால் வகுத்து பத்தை கூட்டினால்?- 70
3. என்னிடம் இரண்டு நாணயம் இருக்கின்றன, அவைகளின் மொத்த மதிப்பு 30 பைசா ஆனால் அதில் ஒரு நாணயம் 25 பைசா அல்ல, இது எப்படி சாத்தியம்? – 25, 5, ஒரு நாணயம்தான் 25 பைசா இல்லை. மற்றது
4. நீண்ட சதுர வடிவில் வீடு கட்டினேன், வீட்டின் இரண்டு பக்கங்களும் தெற்கு நோக்கின, ஒரு கரடி வந்தது, அதன் நிறம் என்ன?- வெள்ளை வட துருவத்தில்தான் இது சாத்தியம்
5. காவேரிக்கு வட புறம் வசிப்பவனை ஏன் தஞ்சாவூரில் புதைக்க முடியாது?- அவர் உயிருடன் இருப்பதால்
6. காலை ஒன்பது மணிக்கு அடிக்கும்படியாக ராத்திரி எட்டு மணிக்கு அலாரம் வைத்தால் எத்தனை மணி நேரம் தூங்க முடியும்? – ஒரு மணிதான், அலாரத்துக்கு காலையாவது மாலையாவது.
ஜூலை 1979
கோவை வேலாயுதம் ஒரு வித்தியாசமான வாசகர், பதிப்பாளர், பல சரக்கு ஸ்டேஷனரி கடை வைத்திருப்பவர். புது கவிதையிலும்,புத்தகங்கள் விற்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார். தன் கைக்காசை தாராளமாக செலவழித்து “வாசகர்” விழா என்று அமர்க்களமாக நடத்தி டவுன்ஹால் நிறைய தமிழ் புத்தகங்களாக அடுக்கி தள்ளி, ‘லவுட் ஸ்பீக்கர்’ வைத்து வாசகர்களை அழைத்து எழுத்தாளர்களை அழைத்து, வாசகர் கேள்விக்கு பதிலளிக்க வைத்து தொன்று தொட்ட பதிப்பாளர்கள் கூட செய்ய தயக்கம் காட்டிய செயலை ஒரு மனிதர் சிறப்பாக செய்து இந்த விழாவை நடத்தி காட்டி விட்டார்.
ஜனவரி 1980
ஒவ்வொரு வருஷமும் டில்லி மாறுகிறது. அதிகாலை புகைப்படலம் அதிகமாகி இருக்கிறது. கட்டிடங்கள் உயர்ந்திருக்கின்றன
நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது, இப்படி சித்தாந்தத்தை அடிக்கடி சந்தித்து விட்டேன்.பிரபலத்தை உடனே தாக்குவதும் சம்பிரதாய சந்தோஷங்களில் ஒன்று. டில்லி பண்டிதர்கள் இதற்கு விதிவிலக்கல்ல.
மே1980
பேராசிரியர் நா.வானமாமலையின் திடீர் மறைவு என்னை கலக்கிவிட்டது. அவருடன் ஓரிரு முறை கடித தொடர்பு கொண்டிருக்கிறேன். நேரில் சந்தித்ததில்லை , பல புத்தகங்களில் இலக்கியம், வரலாறு, மானிடவியல், சொல்லாக்கம், நாட்டுப்பாடல்கள், ஆய்வுக்காக அவர் நடத்திய “ஆராய்ச்சி” காலாண்டு இதழ் மூலமாகவும் அவருடன் நிறைய பரிச்சியம் எனக்கு உண்டு.
ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சியாளரை இழந்து விட்டோம்.
கணையாழியின் கடைசி பக்கங்கள் புத்தகமாக வெளி வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
இதை எழுதுவதற்கு திரு.கஸ்தூரி ரங்கன் எனக்கு அளித்திருக்கும் கருத்து சுதந்திரம் மகத்தானது. அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.